Published : 08 Jan 2014 12:00 AM
Last Updated : 08 Jan 2014 12:00 AM

பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்க பள்ளி மாணவிகளுக்கு அரிய யோசனைகள்: கல்வித்துறை சிறப்பு ஏற்பாடு

சென்னை,பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாவதை தவிர்க்கும் வகையில் நோட்டுப்புத்தக அட்டையில் வண்ணப்படங்களுடன் அரிய யோசனைகளையும் விழிப்புணர்வு வாசகங்களையும் பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

விழிப்புணர்வு வாசகங்கள்

பள்ளிகளில் ஒருசில ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களால் மாணவிகள் பல்வேறு விதமான பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக புகார்கள் எழுந்தன.

இதைத்தொடர்ந்து, பாலியல் துன்புறுத்தல் நிகழ்வுகளில் இருந்து தற்காத்துக்கொள்ளும் வகையில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. ஏற்கனவே, பாடப்புத்தகங்கள், மற்றும் நோட்டுப்புத்தகங்களில் மின் சேமிப்பு, சாலை பாதுகாப்பு, சுகாதாரம், மனித உரிமைகள், சுற்றுச்சூழல், உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வு வாசகங் களை அச்சிட்டு வருகிறது.

அரிய யோசனைகள்

பாடப்புத்தகத்தைப் படிக்கும் போதும், அட்டைப்பகுதிகள் மாணவ-மாணவிகளின் கண்ணில் அடிக்கடி தென்படுவதால் இந்த சிறப்பு ஏற்பாட்டை பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து மேற் கொண்டு வருகிறது.

இந்த நிலையில், பள்ளிகளில் மாணவிகள் பாலியல் துன்புறுத் தல்களுக்கு ஆளாவதை தவிர்க்க பல்வேறு அரிய யோசனைகளும் விழிப்புணர்வு வாசகங்களும் வண்ணப்படங்களுடன் பள்ளி நோட்டுப்புத்தகங்களில் வெளி யிடப்பட்டுள்ளன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 3-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவ-மாணவி களுக்கு வழங்கப்பட்ட இலவச நோட்டின் அட்டைப் பகுதியில் அவற்றைக் காணலாம்.

பாதுகாப்புக்கு யோசனைகள்

“என் பாதுகாப்புக்கு சில யோசனைகள்” என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள யோசனை களும், விழிப்புணர்வு வாசகங் களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

பெரியவர்களிடம் சொல்

“மனதுக்குப் பிடிச்சவங்க நம்மள இறுக்கமா கட்டிப் பிடிச் சிட்டாலோ, முத்தம் கொடுத்தாலோ ரொம்ப சந்தோஷமாக இருக்கும்ல. அந்த மாதிரி உன்ன அவங்க தொடுவதை யாராவது ரகசியமாக வெச்சிருக்கச் சொன்னாங்கன்னா, அதை உடனே நம்பிக்கையான பெரியவங்ககிட்ட சொல்லிடு.”

பரிசு

“சிலபேர் பரிசு, காசு, இனிப்பு கொடுத்து ஏமாத்தி அவங்க சொல்றபடி நடக்க வைப்பாங்க, அப்போது நீ சங்கடமாக, குழப் பமா, பாதுகாப்பு இல்லாத மாதிரி உணர்ந்தா, அவங்க சொல்றதை யும் செய்யாதே, கொடுப்பதையும் வாங்காதே.”

உன்மீது தவறு இல்லை

“சில சமயங்களில் உன்னால் வேண்டாம் என்று சொல்ல முடியவில்லை என்றாலோ அல்லது அந்த இடத்தில் இருந்து விலகிச்செல்ல முடிவில்லை என்றாலோ அல்லது மிகவும் பயமாக இருந்தாலோ ஒன்று மட்டும் நினைவில் வைத்துக்கொள், அந்த நிகழ்வுக்கு நீ காரணம் இல்லை, உன்னால் எப்போது மற்றவரிடம் சொல்ல முடியுமோ, அப்போது சொல்லலாம்.”

“எந்த குழந்தையிடமும் அவர் களுக்கு சங்கடமாக அல்லது பயம் ஏற்படும் வகையில் பேசவோ, பார்க்கவோ கூடவோ கூடாது.”

சரி அல்ல

“உன்னை சுத்தமாகவும், ஆரோக்கி யமாகவும் வைப்பதை தவிர உன் தனிப்பட்ட உறுப்புகளை மற்றவர்கள் தொடுவது சரி அல்ல, உன்னை மற்றவர்களின் தனிப்பட்ட உறுப்புகளை தொடச்சொல்வதும் சரி அல்ல.”

அப்படி யாராவது உன்னை தொட்டால் அது உன் தவறு அல்ல, வேண்டாம் என்று சொல்லிவிட்டு அந்த நபரிடம் இருந்து விலகிச்சென்றுவிடு, உடனே பெரியவர்கள் யாரிடமாவது சென்று நடந்தவற்றை பற்றிக்கூறு, உனக்கு உடனடியாக உதவி கிடைக்காவிட்டால், உதவி கிடைக் கும் வரை சொல்லிக்கொண்டே இரு.”

மேற்கண்ட வாசகங்கள் வண்ண விளக்கப் படங்களுடன் நோட்டுப்புத்தகத்தில் அச்சிடப் பட்டுள்ளன. இவற்றை படிக்கும் பள்ளி மாணவிகள் எச்சரிக்கை யாக இருப்பதற்கும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானால் ஆசிரியர்களிடம் அல்லது பெற் றோர்களிடம் தெரிவிப்பதற்கும் பெரிதும் உதவிகரமாக இருக்கும் என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x