Last Updated : 13 Jun, 2016 10:24 AM

 

Published : 13 Jun 2016 10:24 AM
Last Updated : 13 Jun 2016 10:24 AM

காவிரி டெல்டா பகுதிகளில் அறுவடைக் காலத்தில் வீணாகும் வைக்கோல்: காகித தொழிற்சாலை தொடங்க வலியுறுத்தல்

காவிரி டெல்டா பகுதிகளில் ஆண்டுதோறும் அறுவடைக் காலத்தில் வீணாகும் வைக்கோலைக் கொண்டு, காகித உற்பத்தி தொழிற்சாலை தொடங்க வேண்டுமென விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

காவிரி டெல்டா பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில், ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி நெல் சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது.

முன்பு பெரும்பாலான பகுதிகளில் விவசாயத் தொழிலாளர்கள் மூலம் நெல் அறுவடை நடைபெற்றது. அதில் கிடைக்கும் வைக்கோல், கால்நடைகளுக்கு தீவனமாகப் பயன்படுத்தப்பட்டது. விவசாயத் தொழிலாளர் பற்றாக்குறையாலும், இயந்திரங்களின் வரவாலும், தற்போது பெரும்பாலும் இயந்திரம் மூலம் நெல் அறுவடை நடைபெறுகிறது.

இயந்திர அறுவடையின்போது சிறிய துண்டுகளாக வைக்கோல் கிடைக்கிறது. இதனால், பெரும்பாலான கால்நடைகள் இந்த வைக்கோலை உண்ணுவதில்லை. தீவனமே கிடைக்காத மாடுகள் மட்டும், அவற்றை உண்ணுகின்றன.

விவசாயத் தொழிலாளர்களைக் கொண்டு அறுவடை செய்த வைக்கோலுக்கு கேரள மாநிலத்தில் அதிக வரவேற்பு உள்ளது. ஆனால், இயந்திர அறுவடையில் கிடைக்கும் வைக்கோலை வாங்கத் தயங்குகின்றனர். இதனால், இயந்திர அறுவடையில் கிடைக்கும் வைக்கோலை, எதற்குப் பயன்படுத்துவது என்று தெரியாமல், விவசாயிகள் அப்படியே வயல்களில் குவியல் குவியலாக குவித்துவைத்து, அடுத்த சாகுபடியின்போது அதை தீயிட்டு சாம்பலாக்கிவிடுகின்றனர்.

குறிப்பாக, நீடாமங்கலம், கொரடாச்சேரி, குடவாசல் பகுதிகளில் சம்பா சாகுபடியின்போது அறுவடை செய்யப்பட்ட ஏராளமான வைக் கோலை, வயலிலேயே ஆங்காங்கே குவித்து வைத்து, எரிக்கின்றனர்.

வைக்கோலை மூலப் பொருளாகக் கொண்டு காகிதம் தயாரிக்கும் தொழிற்சாலையை டெல்டா பகுதியில் அமைத்தால், வீணாகும் வைக்கோலுக்கு நல்ல மதிப்பும், விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயும் கிடைக்க வாய்ப்புள்ளது.

சட்டப்பேரவைத் தேர்தலில் திருவாரூர் தொகுதியில் போட்டியிட்ட திமுக தலைவர் கருணாநிதி, திமுக ஆட்சிக்கு வந்தால் கொரடாச்சேரியில் காகித ஆலை அமைக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். இதேபோல, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களும், திருவாரூர் தொகுதியில் காகித ஆலை அமைக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

இதுகுறித்து தமிழக காவிரி விவசாயிகள் சங்க மாநில இணைச் செயலாளர் ஜி.வரதராஜன் கூறும்போது, “இப்பகுதியில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் அமைக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். டெல்டா பகுதிகளில் கிடைக்கும் பருத்தி தாள், வைக்கோலைக் கொண்டு காகிதம் தயாரிக்கும் ஆலை அமைக்க வேண்டும். மழையில் நனையும் வைக்கோல், யாருக்கும் பயனின்றி அழுகிவிடுகிறது. எனவே, காகித ஆலை தொடங்கப்பட்டால், மகளிர் குழுக்கள் மூலம் காகித அட்டை, பொம்மை தயாரிக்கவும் வாய்ப்புள்ளது. எனவே, டெல்டா பகுதியில் காகித ஆலை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதே டெல்டா விவசாயிகளின் எதிர்பார்ப்பு” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x