Published : 04 Nov 2013 09:23 PM
Last Updated : 04 Nov 2013 09:23 PM
மத்திய அரசு கொண்டுவர முனைகிற மாதிரிப் பள்ளிகளுக்கு, தமிழ்நாட்டிலே அனுமதிக்க மாட்டோம் என்று தெரிவிக்க வேண்டும் என்று மாநில அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று (திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்திலே பள்ளிக்கல்வியை வணிக மயமாக்கும் மத்திய அரசின் "ராஷ்டீரிய ஆதர்ஷ் வித்தியாலயா" திட்டத்தின்படி, மத்திய அரசும் தனியாரும் கூட்டு சேர்ந்து மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கிட முயற்சிப்பதாக செய்தி வந்திருக்கிறதே?" என்ற கேள்விக்கு கடந்த வாரம், பதிலளித்த நான், "மாநில அரசின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையிடுகின்ற இப்படிப்பட்ட போக்கினை மாநில அரசு அனுமதிக்கவே கூடாது. இதற்குத் தமிழக அரசு உடனடியாக தன்னுடைய எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டும்" என்று எழுதியிருந்தேன்.
என்னுடைய இந்தக் கருத்திற்குப் பிறகு தமிழகத்தைச் சேர்ந்த வேறு சில கட்சிகளின் தலைவர்கள், நான் தெரிவித்தக் கருத்தைப் பிரதிபலிக்கும் வண்ணம் தமிழ்நாட்டில் மத்திய அரசின் மாதிரிப் பள்ளிகளுக்கு இடமளிக்கக் கூடாது என்று கூறியிருந்தார்கள். குறிப்பாக பா.ம.க. நிறுவனர் விடுத்த நீண்ட அறிக்கையில் "மாநிலங்களின் அதிகாரத்தில் குறுக்கிடும் வகையிலும், கல்வியை தனியார் மயமாக்கும் வகையிலும் அமைந்துள்ள இத்திட்டத்தை தமிழ்நாட்டில் மாநில அரசு அனுமதிக்கக் கூடாது, இதற்குமுன் கல்வியில் பின்தங்கிய ஒன்றியங்களில் இத்தகைய மாதிரிப் பள்ளிகளை மத்திய அரசு அறிவித்தபோது, தனியாரை அனுமதிக்காமல் தமிழக அரசே அந்தப் பள்ளிகளைத் தொடங்கி நடத்தி வருகிறது. அதேபோல இப்போது அறிவிக்கப்பட்டுள்ள 356 மாதிரிப் பள்ளிகளையும் தமிழக அரசே தொடங்கி நடத்த வேண்டும்" என்று குறிப்பிட்டிருந்தார்.
திராவிடர் கழகத் தலைவர், கி.வீரமணி விடுத்த நீண்ட அறிக்கையிலும், "மத்திய அரசும் - தனியாரும் இணைந்து, மாநிலங்களில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்குவது - மாநில அரசுகளின் உரிமையில் தலையிடுவதாகும். இதனைத் தமிழ்நாட்டுக் கல்வி அறிஞர்கள், மாநில உரிமை காக்க விழைவோர், உண்மையான ஜனநாயக விரும்பிகள், அனைவரும் ஒட்டுமொத்தக் குரலில் எதிர்க்க வேண்டும்; தமிழக அரசும், முதல்-அமைச்சரும் உடனடியாக எதிர்ப்பைப் பதிவு செய்தாக வேண்டும்" என்றெல்லாம் எழுதியிருந்தார்.
தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றப்பொதுச் செயலாளர், க.மீனாட்சிசுந்தரம் விடுத்த அறிக்கையில், " மத்திய அரசும் தனியாரும் கூட்டுச் சேர்ந்து தமிழ்நாட்டில் மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கிட முயற்சிப்பதற்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எதிர்ப்பைத் தெரிவித்திருக்கிறார்" என்றெல்லாம் அறிவித்ததோடு, இந்தக் கோரிக்கையையும் உள்ளடக்கி, "வரும் 24-11-2013 அன்று சென்னையில் பட்டினிப் போராட்டம் நடைபெறவுள்ளது" என்று போர்ப்பிரகடனமே செய்திருக்கிறார்.
தமிழகத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு திட்டத்தினைப் பள்ளிக்கல்வியில் மத்திய அரசு இப்போது நிறைவேற்றிட முன்வருகிற நிலையில், தமிழக அரசின் சார்பில் இந்நாள் வரை எந்த எதிர்ப்புக் குரலும் வெளியே வரவில்லை. தமிழகத்திலே உள்ள பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் மத்திய அரசின் இந்த முயற்சிக்குத் தங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த பிறகும், தமிழக அரசு இதைப்பற்றிக் கிஞ்சிற்றும் கவலை கொண்டு வாய் திறக்கவில்லை என்பதிலிருந்து, தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறை என்று ஒன்றிருக்கிறதா? அல்லது தூங்கி வழிகிறதா? என்பதே எங்கெங்கும் கேள்விக்குறியாக எழுந்துள்ளது.
தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், அந்தப் பிரச்சினையை நாமும் எதிர்த்திடக் கூடாது என்ற ஏட்டிக்குப் போட்டியான எண்ணத்தில் இந்த அ.தி.மு.க. அரசு ஏனோதானோவென்று இருக்கிறதா என்பது தெரியவில்லை.
இதுவரை அ.தி.மு.க. ஆட்சியினர் நடந்து கொண்டது எப்படியோ இருக்கட்டும். இனியாவது தமிழகத்தைப் பாதித்திடும் இப்படிப்பட்ட காழ்ப்புணர்ச்சிகளையெல்லாம் கை விட்டு, தமிழ்நாட்டு மக்களுக்குத் தேவையானதும், முக்கியமானதுமான திட்டங்களை திறந்த மனதோடு நிறைவேற்றிட முன்வர வேண்டும்.
குறிப்பாக, "மத்திய அரசு கொண்டு வர முனைகிற இந்த மாதிரிப் பள்ளிகளுக்குத் தமிழ்நாட்டிலே அனுமதி கொடுக்க மாட்டோம்; தேவையென்றால் அப்படிப்பட்ட பள்ளிகளை மாநில அரசின் சார்பில் நிறை வேற்றிட, மத்திய அரசு நிதி உதவி செய்யட்டும், தனியாரை வளர்த்து விடும் காரியத்தில் மத்திய அரசு ஈடுபட வேண்டாம்" என்று முறைப்படி தமிழக அரசின் சார்பில் மத்திய அரசுக்குத் தெரிவித்திட உடனே முன்வர வேண்டும். முன்வருமா என்பதுதான் இன்றைய கேள்வி" என்று கருணாநிதி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT