Published : 28 Oct 2015 10:29 AM
Last Updated : 28 Oct 2015 10:29 AM
இந்திய தீபகற்பத்தில் அமைந்துள்ள கிழக்கு தொடர்ச்சி மலையானது, நெல்லை மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் தொடங்கி, மேற்குவங்கம் வரை பரவி உள்ளது. மிகவும் அடர்ந்து வளமான மண் கொண்ட இந்த மலைத்தொடர் 1,000 மீ. முதல் 1,690 மீ. வரை உயரம் உள்ளது. தமிழகத்தில் சிறுமலை, கொல்லிமலை, சேர்வராயன் மலை, ஜவ்வாது மலை, கல்வராயன் மலை உள்ளிட்டவை, இந்த மலைத்தொடரில் அமைந்துள்ள முக்கிய மலைக் குன்றுகள் ஆகும்.
இம்மலைகளில் இருந்து வெளியேறும் தண்ணீரை முறைப்படுத்தி ஆற்றுக்கு கொண்டு செல்லவும், இம்மலைப் பகுதிகளில் மண் மற்றும் நீர்வள மேம்பாட்டை உறுதி செய்யவும், மலை சரிவு பிரதேசங்களில் விவசாய சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவில்லை என கிழக்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்ட விவசாயிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சிறுமலை அடிவாரம் தவசிமடையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி வி.ஏ.மருதமுத்து கூறியதாவது: மேற்கு தொடர்ச்சி மலையில் சுற்றுலாத் தலங்களை மையப் படுத்தியாவது அபிவிருத்தி திட்டங்கள் நிறைவேற்றப்படுகின் றன. அதுபோன்ற திட்டங்கள்கூட, கிழக்கு தொடர்ச்சி மலையில் செயல்படுத்தப்படாமல் புறக் கணிக்கப்படுகிறது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் கிழக்கு தொடர்ச்சி மலை மீது அதிக கவனம் செலுத்தப்படவில்லை.
தடுப்பணைகள் இல்லை
அதனால், இம்மலைத்தொடர் அடிவாரத்தில் அமைந்துள்ள 1,200 முதல் 1,300 குளங்கள் மேம்பாடு இல்லாமல் வறண்டு காணப்படுகின்றன. மேற்கு தொடர்ச்சி மலையைப் போல தடுப்பணைகள் மற்றும் அணைகள் பெரிய அளவில் இல்லாததால், கிழக்கு தொடர்ச்சி மலையில் உருண்டோடும் மழைநீரின் வேகம் அதிகரித்து, வளமான மேல் மண் அரிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்வதும் தடுக்கப்படுகிறது.
மதுரை, திண்டுக்கல், திருச்சி, திருவண்ணாமலை, வேலூர், நெல்லை, சேலம் மற்றும் நாமக்கல் உள்ளிட்ட 10 மாவட்டங்களின் ஒருபகுதி பெரும் வறட்சிக்கு இலக்காகி இருப்பதற்கு இதுவே முக்கியக் காரணம். வறட்சியால் களைச் செடிகள் ஆதிக்கம் அதிகமாகி, இந்த மலைத்தொடரில் உள்ள அரியவகை மூலிகைச் செடிகள், பல்லுயிர் பெருக்கம், மரங்கள், பூ தாவரங்கள் அழிந்து வருகின்றன.
கற்கள் வெட்டி எடுக்கப்படு வதால், இந்த மலையின் உறுதித் தன்மைக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைக் காலங்களில் இந்த மலைத் தொடர் பசுமையாக காட்சி அளித்தாலும், மழையளவு குறையும் ஆண்டுகளில் இப்பகுதி யில் உள்ள மிகப்பெரிய மரங்கள் தவிர, மீதமுள்ள பயிர்கள் அழிந்து வரும் சூழ்நிலையே காணப் படுகிறது என்று அவர் தெரிவித்தார்.
இதுகுறித்து நீர் வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் திண்டுக்கல் மாவட்ட வேளாண் பொறியாளர் பிரிட்டோராஜிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:
திருப்பி அனுப்பப்பட்ட நிதி
தொடர்ச்சியாக இல்லாமல் ஆங்காங்கே குன்றுகளாக இருப்ப தால், மத்திய நிலவள அமைச்சகம் அபிவிருத்தி திட்டங்களில் கிழக்கு தொடர்ச்சி மலைக்கு அங்கீகாரம், முக்கியத்துவம் வழங்க மறுக்கிறது. 2005-06ம் ஆண்டில் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை, கரந்தமலை, கடவூர் மலைப்பகுதிகளில் 8,200 ஹெக்டேர் நிலங்களை மேம்படுத்த, புதிய திட்டங்களுக்காக நிதி ஒதுக்க, மத்திய நிலவள அமைச்சகத்துக்கு கருத்துரு அனுப்பப்பட்டது. ஆனால், மலைத்தொடர் தொடர்ச்சியாக இல்லை எனக் கூறி, மத்திய நிலவள அமைச்சகம் அந்த திட்டத்துக்கு நிதி ஒதுக்காமல் திருப்பி அனுப்பியது.
பாலாறு, தென்பெண்ணை, காவிரி மற்றும் அதன் உப நதிகளுக்கும் கிழக்கு தொடர்ச்சி மலையே அதிகளவு இணைநீர் ஆதாரத்துக்கு உதவுகிறது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இம்மலைகளின் சரிவு, 27 சதவீதத்துக்கும் அதிகமாக இருப்பதாலும், பாறைகளின் அளவு அதிகமாக இருப்பதாலும், அதிக போக்குவரத்து வசதியோ, வேளாண் நடவடிக்கைகளோ அதிகளவில் ஏற்படுத்த முடியாத நிலை உள்ளது.
அப்பகுதியில் பழங்குடியினர் மற்றும் சிறு விவசாயிகளை ஒருங்கிணைத்து, அந்தந்த பகுதி தட்பவெப்ப நிலைக்கு ஏற்ப பயிர் மேம்பாட்டை உறுதி செய்தால், அவர்கள் வாழ்வாதாரம், மலை வளம் பாதுகாக்கப்படும். இதன் மூலம் இந்த மலைத்தொடரில் விளையும் நறுமணப் பொருட்கள், காய்கறிகள், பழங்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், அரியவகை மூலிகைச் செடிகளை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT