Published : 17 Dec 2013 02:01 PM
Last Updated : 17 Dec 2013 02:01 PM

காங்., பாஜக இல்லாத தனி அணியில் திமுக போட்டியிடும்: கருணாநிதி உறுதி

காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் சேராமல் மற்ற கட்சிகளுடன் சேர்ந்து திமுக தனி அணியாக போட்டியிடும் என்று அக்கட்சித் தலைவர் கருணாநிதி திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

சென்னையில் செவ்வாய்க் கிழமை நிருபர்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டி:

லோக்பால் மசோதா விவாதத்துக்கு வரும் நேரத்தில், எப்படி முடிவெடுக்க வேண்டும் என்று, நாடாளுமன்ற திமுக குழுத் தலைவர் டி.ஆர்.பாலுவிடம் கூறப்பட்டுள்ளது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவர் காதர் மொய்தீன் அளித்த பேட்டியில், தமிழகத்தில் திமுக தலைமையில் மூன்றாவது அணி உருவாகும் என்று சொல்லியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

‘ஐக்கிய முற்போக்குக் கூட்டணி யில் திமுக தற்போது இல்லை. ஏற்கெனவே விலகி விட்டது, வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்காக ஆதரவு கேட்டு திமுகவுக்கு எந்த கடிதமும் நாங்கள் எழுதவில்லை’ என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கூறியிருக்கிறார். அதிலிருந்தே காங்கிரசை விட்டு திமுக விலகியதற்கு வேறு காரணம் தேவையில்லை என்று நீங்கள் தெரிந்து கொண்டிருக்கலாம். ஞான தேசிகன் சொல்லிவிட்டதற்காக நன்றி.

தமிழகத்தில் காங்கிரஸ், பா.ஜ.க.வுடன் திமுக சேராது. ஏற்கெனவே எங்களுடன் உள்ள தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து போட்டியிடுவோம். பா.ஜ.க.வை அழைப்பது என்ற எந்த முடிவும் செய்யவில்லை. இவ்வாறு கருணாநிதி கூறினார்.

முஸ்லிம் லீக் வாழ்த்து

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், கட்சி நிர்வாகிகளுடன், கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை காலை சந்தித்துப் பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

பா.ஜ.க.வுடன் சேரமாட்டோம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டதால், தமிழகத்தில் திமுகவுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கூட்டணி தொடர்கிறது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் மத சார்பற்ற அணியை திமுக அமைக்கும் என நம்புகிறோம். தேர்தலுக்குப் பிறகு பா.ஜ.க.வை திமுக ஆதரிக்குமா என்பது குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது.

இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x