Published : 16 Feb 2017 12:02 PM
Last Updated : 16 Feb 2017 12:02 PM
குமரி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவும் நிலையில் நெற்பயிர்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் கருகி வருகின்றன. அதே நேரம் பெரிய குளங்களில் உள்ள தண்ணீரைக் கொண்டு, ஓரளவு வறட்சியில் இருந்து மீண்ட நெற்பயிர்களை அறுவடை செய்யும் பணி ஒரு வாரத்தில் தொடங்கவுள்ளது. நெல்லுக்கு தட்டுப்பாடு நிலவி வரும் வேளையில் விலை ஏற்றம் அடைந்திருப்பது விவசாயிகளுக்கு ஆறுதலைத் தந்துள்ளது.
குமரியில் 6,500 ஹெக்டேராக இருந்த நெல் சாகுபடி பரப்பு, படிப்படியாக சுருங்கி வருகிறது. நடப்பு கும்பப்பூ பருவத்தில் பருவமழை ஏமாற்றியதால், 4 ஆயிரம் ஹெக்டேராவது கைகொடுக்குமா? என்ற எதிர்பார்ப்பில் வேளாண் துறை உள்ளது.
அணை நீர் பற்றாக்குறை
மாற்றுப் பயிர் சாகுபடிக்கு வேளாண்துறை பரிந்துரைத்த நிலையில், வாழை, பயறு, நிலக்கடலை, மரவள்ளிக் கிழங்கு போன்றவற்றை விவசாயிகள் பலரும் பயிரிட்டுள்ளனர். இவற்றுக்கும் தண்ணீர் கிடைக்காமல் கருகி வருகின்றன. அணைகளில் தண்ணீர் இல்லாத நிலையில், பேச்சிப்பாறையில் இருந்து மட்டும் முடிந்தவரை சுழற்சி முறையில் விவசாயத் தேவைக்கு பொதுப்பணித்துறை நீர் ஆதாரப் பிரிவினர் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றனர். ஆனால், இவற்றால் பலன்பெற முடியாத விவசாயிகள் கருகும் நெற்பயிர்களை பார்த்து மனம் கலங்கி வருகின்றனர்.
குளங்களால் தப்பின
அதே நேரம், அதிக கொள்ளளவு கொண்ட குளங்களை நம்பி சாகுபடி செய்யப்பட்ட நெற்பயிர்கள் ஓரளவு தேறியுள்ளன. குறிப்பாக தொடக்கத்திலேயே சாகுபடி மேற்கொள்ளப்பட்ட நெற்பயிர்கள் இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன.
குறிப்பாக, 1,000 ஏக்கருக்கு மேல் ஒரே வயல்பரப்பில் உள்ள தேரூர், மணவாளக்குறிச்சியை அடுத்த பெரியகுளம் பாசனத்தில் பொன்மணி ரக நெற்பயிர்கள் முதல்கட்டமாக அறுவடை செய்யப்படவுள்ளன. இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதற்கான ஏற்பாடுகளை விவசாயிகள் செய்து வருகின்றனர். இயற்கை எழில்சூழ்ந்த பகுதியில் நெற்பயிர்கள் பொன் நிறத்தில் காட்சியளிக்கின்றன.
நெல் அறுவடை ஏற்பாடு குறித்து பெரியகுளம் பகுதி விவசாயி தங்கப்பன் கூறும்போது, ``மணவாளக்குறிச்சி பெரியகுளம், தேரூர் போன்ற குளத்துப் பாசன வயல்களில் நெல் நன்கு விளைந்துள்ளது. இன்னும் 7 நாட்களுக்குள் அறுவடையைத் தொடங்கி விடுவோம்.
நல்ல விலை
டெல்டா மாவட்டங்கள் உட்பட தமிழகம் முழுவதும் பெரும் வறட்சி நிலவுவதால், தமிழகத்தில் நெல் மற்றும் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டு விலை அதிகரித்துள்ளது. குமரியிலும் 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை நெல் 1,800 ரூபாயில் இருந்து 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையாகிறது.
முதல்கட்டமாக அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு இந்த அதிகபட்ச விலை விவசாயிகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த கன்னிப்பூ சாகுபடியை ஒப்பிடுகையில், மூட்டை ஒன்றுக்கு 600 ரூபாய் வரை அதிகமாகும். இது விவசாயிகளுக்கு ஓரளவு ஆறுதலை அளிக்கிறது.
அதே நேரம், குமரி முழுவதும் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் தண்ணீருக்காக காத்திருக்கின்றன. அணையில் தண்ணீர் இல்லாததால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்கவுள்ளனர். கன்னமங்கலம், அகஸ்தீஸ்வரம், தாமரைகுளம், கொட்டாரம், பொற்றையடி, தோவாளை போன்ற பகுதிகளில், நட்டு ஒன்றரை மாதங்களே ஆன நெற்பயிர்கள் தண்ணீர் கிடைக்காமல் கருகி வருகின்றன.
எப்போதும் இல்லாத வகையில் வறட்சி ஏற்பட்டிருக்கும் நிலையில், நெல் விவசாயம் மட்டுமின்றி தென்னை, ரப்பர், வாழை விவசாயமும் பாதிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்தில் உள்ள 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குளங்களை தூர்வாரினால் மட்டுமே வறட்சி காலத்தில் விவசாயம் மீளும். அதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT