Published : 11 Apr 2017 04:54 PM
Last Updated : 11 Apr 2017 04:54 PM
மழை இல்லை, கடும் வறட்சி. விவசாயத்துக்கு நீர் இல்லாத நிலையோடு, விரைவில் குடிப்பதற்கே தண்ணீர் இல்லாத அபாயத்தை நோக்கித் தமிழகம் சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் இன்னும் இரு நாட்களில் தமிழகம் முழுவதும் மழைக்கான வாய்ப்புண்டு என்று நம் வயிற்றில் பால் இல்லை இல்லை நீர் வார்க்கிறார் ஷாஜு சாக்கோ.
ஷாஜு சாக்கோ- 2015 சென்னை வெள்ளம், 2016 வர்தா புயல் உள்ளிட்ட நேரங்களில் இயற்கையின் சீற்றம் குறித்து முன்கூட்டியே சரியான முன்னெச்சரிக்கைத் தகவல் அளித்து, மக்களிடையே பரிச்சயமானவர். அவர் தற்போது, 'ஏப்ரல் 13 வியாழன் முதல் அடுத்த வியாழன் ஏப்ரல் 20 வரை தமிழகத்தில் பரவலாக மழைக்கான வாய்ப்புண்டு' என்று தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக 'தி இந்து' தமிழ் இணையதள பிரிவிடம் அவர் பேசியது:
எப்படி இந்தத் துறையில் ஆர்வம் ஏற்பட்டது?
தனிப்பட்ட ஆர்வம் காரணமாக 4 வருடங்களாக வானிலை குறித்த முன்னறிவிப்புகளை வெளியிட்டு வருகிறேன். செயற்கைக்கோள் புகைப்படங்களை அடிப்படையாக வைத்து, என்னுடைய கருத்துகளை முன்வைக்கிறேன்.
உங்கள் செய்திக்கான ஆதாரம் என்ன? எங்கிருந்து தகவல்களைப் பெறுகிறீர்கள்?
தினந்தோறும் செயற்கைக்கோள் புகைப்படங்களைத் தரவிறக்கம் செய்து கொள்வேன். ஓய்வு நேரங்களில் அவற்றை ஆய்வு செய்து என்னுடைய கருத்துகளை வெளியிடுகிறேன். மற்றவர்களின் முன்னறிவிப்புகளை கவனித்து குழப்பிக்கொள்வதில்லை.
சில நேரங்களில் என்னுடைய அறிவிப்பு முற்றிலும் தவறாகக் கூட மாறலாம். ஆனால் அதற்காக நான் கவலைப்பட்டதில்லை. என்னுடைய கருத்தை மட்டுமே நான் முன்வைக்கிறேன்.
காற்றின் திசை மற்றும் காற்றின் மேலடுக்கு சுழற்சியை அடிப்படையாகக் கொண்டு மழை வாய்ப்பைத் தீர்மானிக்கிறேன். மேகங்களின் நகர்வும் இதில் முக்கியம்.
இம்முறை எப்போது மழை தொடங்குகிறது?
முதலில் மழை தொடங்கிவிட்டால், தொடர்ந்து பெய்ய ஆரம்பித்துவிடும். மேகங்களின் அடர்த்தியைப் பொருத்து ஏப்ரல் 13 முதல் ஏப்ரல் 20 வரை மழைக்கான வாய்ப்புண்டு. அதாவது ஒரு வாரத்துக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும்.
எதிர்பார்த்த அளவைக் காட்டிலும் அதிகமாகப் பெய்யலாம். இன்று (செவ்வாய்க்கிழமை) கூட திருநெல்வேலியில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
என்ன செய்ய வேண்டும்?
முதலில் பெய்யும் மழை நீரைச் சேமிக்க வேண்டும். 2015-ல் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டபோது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், ஏராளமான நீரைச் சேமித்திருக்கலாம். மழை நீர் சேகரிப்பைக் கட்டாயமாக்க வேண்டும்.
விவசாயம் இல்லாததால் நிலங்களில் பசுமைப் போர்வை எதுவும் இல்லை. அதனால் வெப்பநிலை கணிசமாக உயர்ந்திருக்கிறது. இதுவும் மழையைப் பாதிக்கும். ஏரிகளைத் தூர்வார வேண்டும். சமயங்களில் முறையற்றுப் பெய்யும் மழையை முறையாகச் சேமிக்க வேண்டும்.
எதிர்காலத் திட்டங்கள் என்ன?
(சிரிக்கிறார்.) அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. இது முழுக்க முழுக்க என்னுடைய தனி மனித உழைப்பை அடிப்படையாகக் கொண்டது. இதில் ஒரு பைசா கூட லாபம் இல்லை; அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. சொல்லும் தகவல்களை இன்னும் துல்லியமாகக் கூறினால் போதும்.
இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று (11.04.2017) முதல் 15-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்புண்டு என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT