Published : 29 Sep 2016 09:04 AM
Last Updated : 29 Sep 2016 09:04 AM

உள்ளாட்சி 3: இந்திய ஜனநாயக அமைப்பில் நீங்கள் யார்?

முதலில் உள்ளாட்சி என்கிற கட்டமைப்பை நிர்வாகரீதியாகப் புரிந்துக்கொள்வோம். இந்தியா என்னும் பிரம்மாண்டமான ஜனநாயகக் கட்டமைப்பில் உள்ளாட்சி ஒரு சிறிய அலகு. ஆனால், சிறியதே அழகு! நமது மக்களாட்சி என்பது மரம் எனில் உள்ளாட்சி அதன் வேர்கள். தற்போதைய உள்ளாட்சி நிர்வாகம் ஊரக உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி என்று இரண்டு நிலைகளில் உள்ளது. ஊரக உள்ளாட்சி என்பது கிராமப் பஞ்சாயத்து, பஞ்சாயத்து ஒன்றியம், மாவட்டப் பஞ்சாயத்து என மூன்று அடுக்குகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இவை மூன்றும் ஒன்றுக்கொன்று தொடர்பில் இருப்பவை. நகர்ப்புற உள்ளாட்சி என்பது பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகிய அமைப்புகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. ஒன்றுக்குக்கொன்று தொடர்பு இல்லாதவை. தனித்தனியாக இயங்கக்கூடியவை.

இதில் கிராமப் பஞ்சாயத்துக்கள்தான் நம் தேசத்தின் உயிர்நாடி. இந்தியாவில் 2 லட்சத்து 50 ஆயிரம் பஞ்சாயத்துக்கள் இருக்கின்றன. அவற்றில் 32 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் பிரதிகள் பணியாற்றுகிறார்கள். இதில் 12 லட்சம் பேர் பெண் பிரதிநிதிகள். தமிழ கத்தில் 12,524 கிராமப் பஞ்சாயத்துளும், 385 பஞ்சாயத்து ஒன்றியங்களும், 31 மாவட்டப் பஞ்சாயத்துக்களும், 528 பேரூராட்சிகளும், 124 நகராட்சிகளும், 12 மாநகராட்சிகளும் இருக்கின்றன. ஊரக உள்ளாட்சியில் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 399 மக்கள் பிரதிநிதி களும், நகர உள்ளாட்சியில் 12 ஆயிரத்து 820 மக்கள் பிரதிநிதிகளும் பணியாற்றுகிறார்கள். இந்தக் கட்டமைப்பில் மக்களாகிய நீங்கள் யார்? உங்கள் பங்கு என்ன? உங்கள் அதிகாரம் என்ன என்பதை எல்லாம் தெரிந்துக்கொள்வது மிகவும் அவசியம்.

தற்போதைய நடைமுறை ஜனநாயகம் என்பது பிரதிநிதித்துவ ஜனநாயகமாக உள் ளது. நீங்கள் ஓட்டுப் போடுகிறீர்கள். உங்கள் பிரதிநிதி உங்களை ஆட்சி செய்கிறார். ஆனால், நீங்கள் வாக்களித்து நீங்களும் ஆட்சியில் பங்கு பெறுவதுதான் உள்ளாட்சி ஜனநாயகம். அது பங்கேற்பு ஜனநாயகம். அதாவது, உங்கள் ஊர் உங்கள் உரிமை. உங்கள் ஊர் உங்கள் பொறுப்பு. உங்கள் ஊரில் மணல் அள்ள வேண்டுமா, வேண்டாமா? நீங்கள்தான் முடிவு செய்ய முடியும். உங்கள் ஊருக்கு மதுக் கடை வேண்டுமா, வேண்டாமா? நீங்கள்தான் முடிவு செய்ய முடியும். உங்கள் ஊருக்கு அணு உலை வேண்டுமா, வேண்டாமா? நீங்கள்தான் முடிவு செய்ய முடியும். ஆள்வோர் முடிவு செய்ய முடியாது. இப்படியாகத்தான் வாக்காளர் களான நீங்கள் நமது மாபெரும் ஜனநாயக அமைப்பின் அரசியல் செயல்பாடுகளுடன் அதிகாரபூர்வமாக உங்களை இணைத்துக் கொள்கிறீர்கள். காந்தி விரும்பிய கிராம சுயராஜ்ஜியம் என்பது ஏறக்குறைய இதுவே!

நம்புவதற்கு சிரமமாக இருக்கிறதா? உண்மைதான், நமது ஆட்சியாளர்கள் பெரும் பான்மைச் சமூகத்தை இப்படித்தான் மழுங்கடித்து வைத்திருக்கிறார்கள். நமது ஆட்சியாளர்களைப் பொறுத்தவரை மக்கள் என்பவர்கள் வெறும் வாக்காளர்கள் மட்டுமே. ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் வாக்க ளித்தால் போதும்; அந்த வாக்கையும் எப்படி வாங்க வேண்டும் என்கிற குறுக்கு வழிகளும் அவர்கள் அறிவார்கள். அதேசமயம் மக்க ளுக்கான அதிகாரங்களை அவர்கள் அறிந்து விடக்கூடாது; அடைந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்கிறார்கள். அப்படியே மக்கள் தங்கள் அதிகாரத்தை செயல்படுத்த முனைந்தால் அவர்களை சட்டவிரோதிகள் என்று முத்திரைக் குத்தவும் தயங்குவதில்லை.

உண்மையில் மக்களுக்கான அதிகாரம் என்பது சட்டத்தை மீறிய அதிகாரம் கிடை யாது. 1992-ம் ஆண்டில் 73 மற்றும் 74-வது இந்திய அரசியலமைப்புச் சட்டத் திருத்தமாக நாடாளுமன்றத்தில் மக்கள் பெற்ற அதிகாரம் இது. 73-வது சட்டத் திருத்தம் என்பது ஊராட்சி மக்களுக்கானது. 74-வது சட்டத் திருத்தம் என்பது நகர மக்களுக்கானது. 73-வது சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் கிராம ஊராட்சியில் இருக்கும் வாக்காளர்கள் ஒவ்வொருவருமே தானாகவே கிராம சபையின் உறுப்பினராகிவிடுகிறார். இந்த வாக்காளர்கள் அனைவரையும் உள்ளடக்கிய அமைப்புதான் கிராம சபை. ஊர்க் கூடி முடிவு செய்வது என்பது நமது பண்டைய கால மரபு. அதன் நீட்சியே கிராம சபைகள்.

1994-ம் ஆண்டு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டத்தின்படி அனைத்து வாக்காளர்களையும் கொண்ட அரசு அங்கீகாரம் பெற்ற அமைப்பு தான் உங்கள் கிராம சபை. அது வெறும் குறைகளை மட்டும் சொல்லும் அமைப்பு கிடையாது. மக்கள் அதிகாரம் கொண்ட அமைப்பு அது. நாடாளுமன்ற பொதுக்கணக்குக் குழு மற்றும் நாடாளுமன்ற கூட்டுக் குழுக்கள் ஆகியவற்றுக்கு இணையான அங்கீகாரம் பெற்றவை அவை. பஞ்சாயத்து நிர்வாகத்தை அவை கண்காணிக்கும். தவறு செய்தால் தட்டிக் கேட்கும். நடவடிக்கை எடுக்க பரிந் துரைக்கும்.

பஞ்சாயத்து எழுத்தர்தான் கிராம சபையின் செயலாளர். இவர் கிராம சபையின் நடவடிக்கைகளைப் பதிவு செய்ய வேண்டும். பஞ்சாயத்தின் வரவு - செலவுகளை கிராம சபையில் சமர்ப்பிக்க வேண்டும். சட்ட விதி முறைகள், அரசு ஆணைகளை கிராம சபையினருக்கு தெரிவிக்க வேண்டும். ஒவ்வொரு கிராமசபை கூட்டத்திலும் கிராம நிர்வாக அதிகாரி, வட்டார வளர்ச்சி அதிகாரி கலந்துக்கொண்டு அரசு திட்டங்களை விளக்க வேண்டும். மக்கள் கேள்வி கேட்பார்கள். பதில் சொல்ல வேண்டும். கிராமப் பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளிடமும் மக்கள் கேள்விகளைக் கேட்பார்கள். தவறுகளை சுட்டிக்காட்டுவார்கள். கண்ணியமான முறையில் விவாதங்கள் நடைபெறும்.

கிராமத்தின் மக்கள் நினைத்தால் தங்கள் தேவைகளுக்காக எப்போது வேண்டுமானாலும் கிராம சபையைக் கூட்டிக்கொள்ளலாம். ஒரே இடத்தில்தான் கிராம சபையைக் கூட்ட வேண்டும் என்பதில்லை. தேவையைக் கருதி ஒரு கிராமத்தில் பல்வேறு பகுதிகளிலும் கூட்டிக்கொள்ளலாம். மாநிலத்துக்கு மாநிலம் கிராம சபைகளின் செயல்பாடுகள் மாறு படுகின்றன. தமிழகத்தில் ஓர் ஆண்டில் சுதந்திர தினம், குடியரசு தினம், தொழிலாளர் தினம், காந்தி ஜெயந்தி ஆகிய நான்கு நாட்களில் கண்டிப்பாக கூட்ட வேண்டும்.

சரி, இந்த கிராம சபையில் உங்களுக்கான அதிகாரத்தை எப்படி செயல்படுத்துவீர்கள்? ஒரு திட்டம் வேண்டும் அல்லது வேண்டாம் என்பதில் உங்கள் அதிகாரத்தை எப்படி செலுத்துவீர்கள்? ரொம்பவும் எளிது. 500 பேர் கொண்ட கிராமம் எனில், உங்களைப் போல 50 பேர் திரள வேண்டும். 501 3 ஆயிரம் பேர் கொண்ட கிராமம் எனில் 100 பேர் திரள வேண்டும். 3001 10 ஆயிரம் பேர் கொண்ட கிராமம் எனில் 200 பேர் திரள வேண்டும். 10 ஆயிரத்துக்கு மேற்பட்டோரைக் கொண்ட கிராமம் எனில் 300 பேர் திரள வேண்டும். இப்படி ஒன்று சேர்பவர்கள் கிராம சபையில் நிறைவேற்றும் தீர்மானத்தின் மூலம் உங்கள் அதிகாரத்தைச் செயல்படுத்தலாம்.

இந்த தீர்மானத்தின் அதிகாரம் என்பது சாதாரணமானதல்ல. கேரளம், பிலாச்சிமடா கிராமத்தில் இயற்கையைச் சுரண்டிய பன்னாட்டு நிறுவனத்தை விரட்டியடித்த மக்கள் அதிகாரம் அது. தமிழகம் குத்தப்பாக்கம் கிராமத்தில் 100 ஏக்கர் நிலத்தை ஆக்கிரமிக்க முயன்ற மாநில அரசையே பின்வாங்கச் செய்த மக்கள் அதிகாரம் அது!

- பயணம் தொடரும்…

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x