Published : 20 Dec 2013 12:00 AM
Last Updated : 20 Dec 2013 12:00 AM

சென்னை: ஆட்டோ நிறுத்தங்களில் ‘போலீஸ் பூத்’; மீட்டர் கட்டணத்தை கண்காணிக்க நடவடிக்கை

மீட்டர் கட்டணம் வசூலிக்கப்படுவதை உறுதி செய்ய சென்னையில் ஆட்டோ நிறுத்தங்கள் உள்ள 100 இடங்களில் ‘போலீஸ் பூத்’ அமைக்கப்படும் என்று காவல் துறை ஆணையர் ஜார்ஜ் தெரிவித்துள்ளார். சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஜார்ஜ் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை நகரில் பொதுமக்களின் நலன் கருதியும், ஆட்டோ ஓட்டுநர்கள் மீட்டர் கட்டணத்தை வசூலிப்பதை உறுதி செய்யவும் காவல்துறை சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முதல் கட்டமாக மீட்டர் பயன்படுத்தாத ஆட்டோ ஓட்டுநர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. வாகன சோதனையில் ஆட்டோக்கள் மீட்டரை பயன்படுத் தாதது கண்டுபிடிக்கப்பட்டால் அதன் பர்மிட்டை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்படும்.

விதிமுறைகளை மீறும் ஆட்டோக்களை கண்டறிய சென்னை போக்குவரத்து காவல்துறை இரண்டு தனிக்குழுக்களை அமைத்துள்ளது. புதன் கிழமை ஒரே நாளில் 1,532 ஆட்டோக்கள் மீது வழக்குகள் பதியப்பட்டுள்ளன. 180 ஆட்டோக்களின் உரிமையை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளன. பயணத்துக்கு வர மறுத்தல், அதிக கட்டணம் வசூலித்தல், மீட்டரை பயன்படுத்தாமை போன்ற குற்றங்களில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

ஆட்டோ ஓட்டுநர்களால் பாதிக்கப்படும் பொதுமக்கள் 9003130103, 7418503430 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு ஆட்டோ எண்ணை தெரிவித்து புகார் கொடுத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் உள்ள முக்கியமான 100 ஆட்டோ நிறுத்தங்கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு ‘போலீஸ் பூத்' அமைக்கப்படும். இதில் உதவி ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளர், ஒரு போக்குவரத்து காவலர் ஆகிய மூன்று பேர் பணியில் இருப்பார்கள். இவர்கள் ஆட்டோ நிறுத்தங்களில் நின்று கொண்டு ஆட்டோ ஓட்டுநர்களை கண்காணிப்பார்கள்.

பயணிகளிடம் வாக்குவாதம் செய்யும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீதும், மீட்டரை பயன்படுத்த மாட்டேன் என்று கூறுபவர்கள் மீதும் அந்த இடத்திலேயே நடவடிக்கை எடுக்கப்படும். தொடர்ச்சியாக இதே தவறை செய்பவர்களின் ஆட்டோ உரிமத்தை ரத்து செய்ய போக்குவரத்து ஆணையரகத்துக்கு பரிந்துரை செய்யப்படும். மேலும் குறிப்பிட்ட ஆட்டோ நிறுத்தங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு ஆட்டோ ஓட்டுநர்கள் கண்காணிக்கப்படுவார்கள்.

வெளியூரில் இருந்து வரும் பயணிகள் இறங்கும் இடங்களான தாம்பரம், கிண்டி, வடபழனி, கோயம்பேடு, ஆம்னி பேருந்து நிலையம் மற்றும் சில இடங்களில் காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை இரண்டு காவலர்கள் பணியில் இருப்பார்கள். பயணிகளிடம் அதிக கட்டணம் கேட்கும் ஆட்டோ ஓட்டுநர்களை இவர்கள் கண்டுபிடித்து உடனடி நடவடிக்கை எடுப்பார்கள். ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் உரிமை காவல்துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x