Published : 13 Jan 2015 02:19 PM
Last Updated : 13 Jan 2015 02:19 PM

எழுத்துக்கு முழுக்கு: எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவிப்பு

தமிழ் இலக்கியப் பணியில் இருந்து முற்றிலும் விலகுவதாகவும், இனி ஆசிரியர் பணியை மட்டும் தொடரவுள்ளதாகவும் எழுத்தாளர் பெருமாள் முருகன் அறிவித்துள்ளார்.

திருச்செங்கோடு பற்றியும் அங்குள்ள கோயிலைப் பற்றியும் இந்துப் பெண்களைப் பற்றியும் தவறாகச் சித்தரிக்கிறது என்று சொல்லி, சில இந்து அமைப்புகள் 'மாதொருபாகன்' நாவலின் பிரதிகளைச் சமீபத்தில் எரித்துப் போராட்டம் நடத்தின.

எழுத்தாளர் பெருமாள் முருகனைக் கைதுசெய்ய வேண்டும் என்றும் அந்த அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. அதேவேளையில், கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான அந்த அமைப்புகளின் செயலைக் கண்டித்துத் தமிழகமெங்கும் கண்டனக் குரல்கள் எழுந்தன.

இதனிடையே, தமிழ் பெண்களை இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தும்படியும் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதியுள்ள புத்தகங்களை தமிழக அரசு தடை செய்ய வேண்டும் என கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி வலியுறுத்தியது.

இந்த நிலையில், எழுத்தாளர் பெருமாள் முருகன் தன் அதிகாரபூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட அறிக்கை:

நண்பர்களே, கீழ்வரும் அறிக்கை இரண்டு நாட்களுக்கு இந்த முகநூலில் இருக்கும். அதன்பின் சமூக வலைத்தளச் செயல்பாடுகளில் இருந்து பெருமாள்முருகன் விலகிவிடுவான். சமூக வலைத்தளங்களில் அவனுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி.

எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான். அவன் கடவுள் அல்ல, ஆகவே உயிர்த்தெழப் போவதில்லை. மறுபிறவியில் அவனுக்கு நம்பிக்கையும் இல்லை. இனி அற்ப ஆசிரியனாகிய பெ.முருகன் என்பவன் மட்டுமே உயிர் வாழ்வான்.

பெருமாள் முருகனுக்கு ஆதரவு தெரிவித்தும் கருத்துரிமையை முன்னெடுத்தும் போராடிய பத்திரிகைகள், ஊடகங்கள், வாசகர்கள், நண்பர்கள், எழுத்தாளர்கள், அமைப்புகள், கட்சிகள், தலைவர்கள், மாணவர்கள் முதலிய அனைத்துத் தரப்பினருக்கும் நன்றிகள்.

'மாதொருபாகன்' நூலோடு பிரச்சினை முடிந்துவிடப் போவதில்லை. வெவ்வேறு அமைப்புக்கள், தனிநபர்கள் அவனுடைய ஏதாவது நூலை எடுத்துப் பிரச்சினை ஆக்கக் கூடும். ஆகவே பெருமாள்முருகன் இறுதியாக எடுத்த முடிவுகள் வருமாறு:

1. பெருமாள் முருகன் தொகுத்த, பதிப்பித்த நூல்கள் தவிர அவன் எழுதிய நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் ஆகிய அனைத்து நூல்களையும் அவன் திரும்பப் பெற்றுக்கொள்கிறான். இனி எந்த நூலும் விற்பனையில் இருக்காது என்பதை உறுதிபடத் தெரிவித்துக்கொள்கிறான்.

2. பெருமாள் முருகனின் நூல்களை வெளியிட்டுள்ள காலச்சுவடு, நற்றிணை, அடையாளம், மலைகள், கயல்கவின் ஆகிய பதிப்பகத்தார் அவன் நூல்களை விற்பனை செய்ய வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான். உரிய நஷ்ட ஈட்டை அவர்களுக்கு பெ.முருகன் வழங்கிவிடுவான்.

3. பெருமாள் முருகனின் நூல்களை இதுவரை வாங்கியோர் தாராளமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திவிடலாம். யாருக்கேனும் நஷ்டம் எனக் கருதி அணுகினால் உரிய தொகையை அவருக்கு வழங்கிவிடத் தயாராக உள்ளான்.

4. இனி எந்த இலக்கிய நிகழ்வுக்குப் பெருமாள் முருகனை அழைக்க வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறான்.

5. எல்லா நூல்களையும் திரும்பப் பெறுவதால் சாதி, மதம், கட்சி உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்திலோ பிரச்சினையிலோ ஈடுபட வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறான்.

அவனை விட்டுவிடுங்கள். அனைவருக்கும் நன்றி.

பெ.முருகன்

பெருமாள்முருகன் என்பவனுக்காக.

இவ்வாறு அந்த அறிக்கையில் எழுத்தாளர் பெருமாள் முருகன் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x