Published : 22 Jul 2015 07:58 AM
Last Updated : 22 Jul 2015 07:58 AM

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்: கருணாநிதி அறிவிப்புக்கு கட்சிகளின் ஆதரவும் எதிர்ப்பும்

திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி அறிவித்திருப்பதற்கு தமிழக அரசியல் தலைவர்களிடம் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பியுள்ளது.

ராமதாஸ் (பாமக நிறுவனர்):

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என கருணாநிதி அறிவித்துள்ளார். அவரது அறிக் கையை படிக்கும்போது அதன் ஒவ் வொரு வரியும் பாவ மன்னிப்பு கோரு பவரின் மனதிலிருந்து எழும் வார்த்தை களாகவே உள்ளன. 1971-ல் மது விலக்கை ரத்து செய்ததன் மூலம் மது என்றால் என்னவென்றே தெரியாத ஒரு தலைமுறையை மதுவலையில் வீழ்த்தி சிதைத்தவர் கருணாநிதி.

மதுவின் தீமைகள் குறித்து கடந்த 35 ஆண்டுகளாக பிரச்சாரம் செய்து வருகிறேன். பாமகவின் முதன்மை கொள்கையே மதுவிலக்குதான். பாமக ஆட்சிக்கு வந்தால் முதல் கையெ ழுத்து மதுவிலக்கு அமல்படுத்து வதற்காகவே இருக்கும் என அறி வித்துள்ளோம். இவற்றையெல்லாம் பார்த்த பிறகு மதுவிலக்கு பற்றி பேசுவது பலருக்கு பொழுதுபோக்காக மாறிவிட்டது. அந்த வரிசையில் கருணாநிதியும் சேர்ந்திருப்பதாக தோன்றுகிறது.

அடுத்த 8 மாதங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் வர இருப்பதால் அவருக்கு இந்த ஞானோதயம் ஏற்பட்டுள்ளது. திராவிட கட்சிகளிடம் மக்கள் இனியும் ஏமாற மாட்டார்கள்.

கி.வீரமணி (திராவிடர் கழக தலைவர்):

திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்ற கருணாநிதியின் அறிவிப்பை திராவிடர் கழகம் வரவேற்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் சேலத்தில் நடந்த திராவிடர் கழக பொதுக்குழுவில் மது ஒழிப்பு குறித்து முக்கிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மதுவிலக்கை வெற்றிகரமாக அமல்படுத்த கள்ளச்சாராய ஒழிப்பு திட்டத்தையும், மாற்று வருவாய்க்கான திட்டத்தையும் அரசு செயல்படுத்த வேண்டும்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்):

மது அடிமைத்தனத்தால் பொருளாதார இழப்பு, உடல் பாதிப்பு, உளவியல் பாதிப்புகளால் ஏழை குடும்பங்கள் துன்புறுகின்றன. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். ஆட்சிக்கு வந்தால் என நிபந்தனையுடன் சொல்வது தேர்தலை மனதில் வைத்துதானோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. எப்படியிருப்பினும் மதுவை ஒழிப்பது அவசர முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாகும். எனவே, மதுவுக்கு எதிராக மனிதநேயமுள்ள அனைவரும் குரல் எழுப்புவோம்.

தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்):

மதுவிலக்கை அமல் படுத்துவோம் என்ற கருணாநிதியின் அறிவிப்பை மதிக்கிறோம். ஆனால், திடீரென அவர் இதை சொல்லியிருப் பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் ஒருதலைமுறையை குடிக்க வைத்ததில் கருணாநிதிக்கு பெரும் பங்கு இருக்கிறது. இதற்காக மன்னிப்பு கோர வேண்டிய நிலையில் அவர் இருக்கிறார். மது ஒழிப்புக்காக அனைவரும் இணைந்து போராட வேண்டும்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):

மது இல்லாத சமுதாயம் உருவாக வேண்டும் என்பதே தமாகாவின் பிரதான கொள்கை. தமிழகத்தில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக திமுகவும் மது விலக்கை அமல்படுத்துவோம் என அறிவித்துள்ளது. இவற்றை கருத்தில் கொண்டு பூரண மதுவிலக்கை அமல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

திருமாவளவன் (விசிக தலைவர்):

ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்துவோம் என்ற கருணாநிதி யின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது. இதன்மூலம் அனைத்து கட்சிகளும் மதுவிலக்குக்கு ஆதரவாக ஓரணியில் திரண்டுள்ளன. வறுமையில் வாடும் மக்களின் உழைப்பைச் சுரண்டுவதாக மதுக்கடைகள் உள்ளன. எனவே, இனியும் தாமதிக்காமல் மதுக் கடைகளை தமிழக அரசு மூட வேண்டும்.

தமிழருவி மணியன் (காந்திய மக்கள் இயக்க தலைவர்):

ஆட்சி யைக் கைப்பற்ற அனைத்து வழிகளி லும் முயற்சி செய்து வரும் கருணா நிதி, மக்களை ஏமாற்றும் யுக்திகளில் ஒன்றாக மதுவிலக்கை அமல்படுத்து வோம் என அறிவித்துள்ளார். உண்மை யிலேயே பூரண மதுவிலக்கை அமல் படுத்த விரும்பினால், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ரூ.26 ஆயிரம் கோடியை எப்படி ஈடுசெய்வது என்பதற்கு அவர் விளக்கம் அளிக்க வேண்டும். வாக்குறுதிகளை அளிப்பதும், பிறகு அதற்கு நேர்மாறாக நடப்பதும் கருணாநிதியின் கடந்தகால வரலாறு என்பதை தமிழக மக்கள் அறிவர்.

பழ.நெடுமாறன் (தமிழர் தேசிய முன்னணி தலைவர்):

கொட்டும் மழையில் கருணாநிதியின் வீடு தேடிச் சென்று மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டாம் என ராஜாஜி கேட் டுக்கொண்டார். ஏழை, எளிய மக்களின் வாழ்வு சீர்குலைந்து போகும் என கண்ணீர் மல்கினார். ஆனாலும் மதுக்கடைகளை கருணாநிதி திறந்தார். அதனால், சில தலைமுறையினர் மதுவுக்கு அடிமையாகியுள்ளனர். இதற்காக அவர் மன்னிப்பு கோர வேண்டும்.

பூரண மதுவிலக்கை அமல்படுத்த விரும்பினால், டாஸ்மாக் மூலம் கிடைக்கும் ரூ.26 ஆயிரம் கோடியை எப்படி ஈடுசெய்வது என்பதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x