Last Updated : 08 Jul, 2016 10:10 AM

 

Published : 08 Jul 2016 10:10 AM
Last Updated : 08 Jul 2016 10:10 AM

மழை நீரை தேக்கி வைப்பதற்காக சென்னையில் உள்ள கோயில் குளங்களை முன்கூட்டியே சீரமைக்க வலியுறுத்தல்

குளத்துக்குள் கழிவுநீர் செல்வதைத் தடுக்க கோரிக்கை

மழைக் காலத்துக்கு முன்னரே கோயில் குளங்களை சீரமைத்து மழை நீரைத் தேக்கிவைக்க வேண்டும் என்றும் குளத்துக்குள் கழிவுநீர் செல்வதைத் தடுக்க மாற்றுப் பாதை அமைக்க வேண்டும் என்றும் பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வடகிழக்குப் பருவமழைக் காலமான அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில்தான் சென்னைக்கு தேவையான அளவு மழை கிடைக்கிறது. அப்போதும்கூட அதிகபட்சம் 30 நாட்கள் வரைதான் மழை பெய்யும். மீதமுள்ள 11 மாதங்கள் கிருஷ்ணா நீர், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் கிடைக்கும் தண்ணீரைத்தான் நம்பி இருக்க வேண்டியுள்ளது.

சென்னையில் உள்ள கோயில் குளங்களில் சிலவற்றைத் தவிர மற்ற குளங்கள் அனைத்தும் வறண்டு கிடக் கின்றன. சில குளங்களில் இருக்கும் தண்ணீரும் கழிவுநீர் கலந்து மாசுபட்டி ருக்கிறது. சுமார் 100 குளங்கள் வரை இருந்த சென்னையில் இப்போது அதன் எண்ணிக்கை மூன்றில் ஒரு பங்காகக் குறைந்துவிட்டது.

இந்நிலையில், சென்னையில் மிஞ்சி யிருக்கும் கோயில் குளங்களை சீர மைத்து, அதில் கழிவுநீர் கலப்பதைத் தடுத்து, மழை நீரைத் தேக்கிவைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை மக்களிடையே வலுத்து வருகிறது.

குப்பை கூளமாக மாறிய குளங்கள்

இதுதொடர்பாக சென்னைக் குடிநீர் வாரிய முன்னாள் பொறியியல் இயக்குநர் எஸ்.சுந்தரமூர்த்தி கூறியதாவது:

சென்னையில் பெரும்பாலான கோயில் குளங்கள் குப்பை கொட்டும் இடமாகவும், கழிவுநீர் கலக்கும் பகுதியாகவும் மாறிவிட்டது. மழை நீரைச் சேமித்து வைப்பதற்காக மழை நீர் வடிகால் கால்வாய் கோயில் குளத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், மழை நீர் வடிகால் கால்வாயில் கழிவுநீர் கலப்பதால், மாசுபட்ட நீரே கோயில் குளத்துக்குப் போய்க் கொண்டிருக்கிறது. இதனால் அந்த நீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இந்த அவல நிலையைப் போக்க வேண்டுமானால், குளத்தின் அருகே மழைநீர் வடிகால் கால் வாயில் மாற்றுப் பாதை அமைத்து கழிவுநீரைத் திருப்பிவிட வேண்டும்.

மழைக் காலத்தில் முதலில் வரும் தண்ணீர் கழிவுநீரை அடித்துக் கொண்டு வரும். அந்த நீரை மாற்றுப்பாதை வழியாக கூவம், அடையாறு, பக்கிங்காம் கால்வாய்க்கு திருப்பிவிட வேண்டும். அடுத்த சில நாட்கள் கழித்து, சுத்தமாக வரும் மழைநீரை கோவில் குளத்தில் சேமித்து வைக்க வேண்டும். இதற்காக கோயில் குளம் அருகே மழைநீர் வடிகால் கால்வாயில் நிரந்தரமாக ‘ஷட்டர்’ அமைக்கத் தேவையில்லை. மணல் மூட்டைகளைப் போட்டு கழிவுநீரைத் திருப்பிவிட முடியும். சில நாட்களில் அதே மணல் மூட்டைகளைக் கொண்டு மாற்றுப்பாதையை அடைத்துவிட்டு, மழைநீர் குளத்துக்குள் போகும்படி செய்யலாம் என்று சுந்தரமூர்த்தி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x