Published : 11 Apr 2017 12:31 PM
Last Updated : 11 Apr 2017 12:31 PM
தென் மாவட்ட மக்கள் பயன்பெற மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கக் கோரிய மனுவுக்கு மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த பாஸ்கர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில், மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒரு மருத்துவருக்கு 3000 நோயாளிகள் என்னும் நிலை உருவாகியுள்ளது.
இந்தநிலையில் மத்திய அரசால் செயல்படும் எய்ம்ஸ் மருத்துவமனை ஏற்கனவே பல்வேறு மாநிலங்களில் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆனால் தமிழக மக்களுக்கு அவ்வாறான நவீன மற்றும் குறைந்த செலவிலான சிகிச்சை சாத்தியமற்று உள்ளது. சென்னையை பொருத்தவரை உலக தரம் வாய்ந்த ஐந்து மருத்துவமனைகள் உள்ளன.
இருப்பினும் தென் மாவட்ட மக்களுக்கு எய்ம்ஸ் மருத்துவமனை போன்ற வசதிகள் கிடைக்கவில்லை. தற்போது மத்திய அரசு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமக்க முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட்டால் 15 க்கும் மேற்பட்ட தென் மாவட்ட மக்கள் பயனடைவதுடன் கேரள மாநில மக்களும் பயனடைவார்கள். எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைக்க உத்தரவிட வேண்டும் என கோரியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதிகள் ஏ.செல்வம், ஆதிநாதன் அமர்வு, இந்த வழக்கில் மத்திய மற்றும் மாநில அரசுகள் வரும் 15.06.2017-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT