Published : 02 Feb 2014 12:00 AM
Last Updated : 02 Feb 2014 12:00 AM
முதல்வர் ஜெயலலிதாவை இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் இன்று சந்தித்து நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என தெரிகிறது.
கடந்த 2009-ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக தலைமையிலான கூட்டணியில் மதிமுக, பாமக, இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்நிலையில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக அணியில் இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும் மீண்டும் இடம்பெறுவது உறுதியாகியுள்ளது.
அதிமுக அணியில், கூட்டணி தொடர்பான முதல்கட்ட பேச்சுவார்த்தை இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கும் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஏ.பி.பரதன், தேசிய பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி மற்றும் தமிழ் மாநிலக் குழு நிர்வாகிகளைக் கொண்ட குழு,
அதிமுக பொதுச் செயலாளரும் முதல்வருமான ஜெயலலிதாவை இன்று சந்தித்துப் பேசுவார்கள் என்று தெரிகிறது. அதைத் தொடர்ந்து, அடுத்த ஓரிரு நாட்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளும் முதல்வரைச் சந்தித்து கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்று கூறப்படுகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது வடசென்னை, நாகப்பட்டினம் மற்றும் தென்காசி ஆகிய 3 தொகுதிகளை இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு அதிமுக ஒதுக்கியது. அதில் தென்காசி தொகுதியில் போட்டியிட்ட பி.லிங்கம் வெற்றி பெற்றார்.
அதேபோல் மதுரை, கன்னியாகுமரி மற்றும் கோவை ஆகிய 3 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டது. இதில் கோவையில் போட்டியிட்ட அக்கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் வெற்றி பெற்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT