Published : 21 Aug 2016 01:03 PM
Last Updated : 21 Aug 2016 01:03 PM
கண்ணுக்கு எட்டிய தூரத்தில் காவிரி நீர் தேங்கும் மேட்டூர் அணை இருந்தும் கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய பகுதி மக்கள் வறட்சியின் பிடியில் இருந்து மீளமுடியாத துயரத்தில் உள்ளனர். இதற்கு தீர்வான தோனிமடுவு திட்டத்தை அரசு நிறைவேற்ற வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கர்நாடக மாநிலம் குடகு மலையில் சிறு ஓடையாக உற்பத்தி யாகி தமிழத்தில் அகண்ட காவிரி யாக உருவெடுத்து டெல்டா மாவட்டங்களை வளமாக்கவும், செழிப்புறவும் செய்கிறது. காவிரி தமிழகத்தில் கிருஷ்ணகிரி மற்றும் தருமபுரி மாவட்டம் வழியாக நுழைந்து சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் தேக்கப்படுகிறது.
பலன் அளிக்காத பாலாறு
காவிரி மற்றும் பாலாறு ஆற்றுப்படுகையில் கொளத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கொளத்தூர், மூலக்காடு, கருங் கல்லூர், கத்திரிப்பட்டி, கோட்ட மடுவு, பாலமலை, சாம்பள்ளி, ஏழரைமரத்துக்காடு, லக்கம்பட்டி, நீதிபுரம், சின்ன தண்டா, பெரிய தண்டா, தார்காடு உள்ளிட்ட ஏராளமான கிராமங்கள் உள்ளன.
இக்கிராமங்களில் விவசாயமும் அதைச் சார்ந்த தொழிலும் பிரதானமாக உள்ளது. மேலும், இந்த ஒன்றியம் மேட்டூர் அணையின் மேல்பகுதியில் உள்ளது. இப்படி நீர்வழிப்பாதை மற்றும் நீர்தேக்க பகுதியில் இருந்தபோதும் இக்கிராமங்கள் பல நீர்வழிப்பாதை மற்றும் நீர்தேக்கங்களில் இருந்து மேடான பகுதியில் இருப்பதால், இயற்கை அளித்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்த முடியாத நிலையுள்ளது.
இதனால், கண்ணுக்கெட்டும் தூரத்தில் காவிரி பாய்ந்தாலும், இப்பகுதி விவசாயிகள் பாசனம் செய்வதற்கு தண்ணீர் இன்றி இன்றுவரை இங்குள்ள நிலங்கள் வறட்சியின் பிடியில் இருப்பதோடு வானம் பார்த்த பூமியாகவே உள்ளது.
சந்தைக்கும் வழியில்லை
நிலத்தடி நீர் கைகொடுக்குமே என்ற கேள்வி எழுந்தாலும் அதற்கான பதிலும் சோகத்தைத் தான் தருகிறது. மலைப்பாங்கான நிலம் என்பதாலும் சிறு விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதாலும், ஆழ்துளை கிணறுகள் அமைத்து நீர் மேலாண்மையை பெற முடியாத நிலையில் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.எனவே, இப்பகுதி விவசாயிகள் பருவ மழையை மட்டுமே நம்பி நிலக்கடலை, சோளம், மக்காச்சோளம், பருத்தி உள்ளிட்ட மானாவாரி பயிர்களை சாகுபடி செய்கின்றனர். அதுவும் மழை பொய்த்துப்போகும் காலங்களில் விவசாயிகளை கடன் காரர்களாக மாற்றிவிடும் சோகமும் அதிகம் உண்டு.
வாழ்வாதாரம்
இதுகுறித்து கோட்டமடுவைச் சேர்ந்த விவசாயி திக்கிரி கூறிய தாவது:
இப்பகுதி விவசாயிகளுக்கு காவிரி ஆற்றின் நீர் கைகொடுக்காத தால், மானாவாரி விவசாயத்தை மட்டும் நம்பியுள்ள நிலையுள்ளது. எங்கள் பகுதியில் குடிநீர் வசதி இருந்தாலும், எங்களின் வாழ் வாரத்தையும், பொருளாதாரத்தை யும் உயர்த்தும் விவசாயத்துக்கு நீர் இல்லாதது எங்கள் வளர்ச்சிக்கு தடையாக உள்ளது. இதற்கு தீர்வு கிடைக்க நீண்டகால கோரிக்கையான தோனி மடுவு திட்டத்தை செயல்படுத்த வேண் டும். இவ்வாறு அவர் கூறினார்.
தண்ணீர் பிரச்சினைகள் இப்படி இருக்க நிலத்தடி நீர் மற்றும் பருவமழை மூலம் விளைவிக்கப்படும் உணவுப்பொருட்களை சந்தைக்கு கொண்டு சேர்ப்பதிலும் சிக்கல் இருப்பதாக இப்பகுதி விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர்.
சுவையூட்டும் பலா
இதுகுறித்து கத்திரிப்பட்டியைச் சேர்ந்த கணபதி கூறியதாவது:
கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாலமலையில் வசிக்கும் மலைவாழ் மக்களால் கருப்பு ராகி உள்ளிட்ட சிறுதானியங் கள், பலாப்பழம் ஆகியவை அதிகளவில் விளைவிக்கப் படுகின்றன. தமிழகத்தில் கொல்லி மலை, பச்சைமலை, ஏற்காடு, கல்வராயன் மலை உள்ளிட்ட மலைப்பகுதிகளில் மட்டுமே சுவையான பலாப்பழங்கள் விளை கின்றன. இந்த வரிசையில் பால மலை பலாப்பழமும் ருசியானது.ஆனால், மலையில் விளையும் பலாப்பழங்களை சமவெளிக்கு கொண்டு சென்று விற்பனை செய்ய போக்குவரத்து மற்றும் சாலை வசதிகள் இல்லை. இந்த வசதிகள் செய்தால் உற்பத்தி செய்யும் விளை பொருட்களை சந்தைப்படுத்தும் வாய்ப்பு எங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவிரியும், பாலாறும் பாய்ந்த போதும் பாசனத்துக்கு தண்ணீர் இன்றி வாடும் இப்பகுதி விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையான தோனிமடுவு திட்டத்தை நிறைவேற்ற அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
சேலம் மாவட்டம், கொளத்தூர் அடுத்த கத்திரிப்பட்டியில் பாசன நீர் தேவையை பூர்த்தி செய்ய வழியில்லாததால், வானம் பார்த்த பூமியாக காட்சியளிக்கும் விவசாய நிலம்.
கை கொடுக்கும் சிறுதானிய மகசூல்
கொளத்தூர் வட்டாரத்தில் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் வரை சிறுதானியங்கள் அதிகளவில் பயிரிடப்பட்டது. தற்போதும், சிறுதானியங்களை பயிரிட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. பாலமலை பகுதியில் இன்றளவும் சிறுதானியங்கள் பயிரிடப்பட்டு வருகின்றன.
இருந்தபோதும் இதை சந்தைப்படுத்தவும் அவற்றை மதிப்பு கூட்டிய பொருளாக மாற்றி விற்பனை செய்யும் தொழில்நுட்பங்கள் இப்பகுதி விவசாயிகளுக்கு தெரியவில்லை. இதனால், இங்கு உற்பத்தியாகும் விளைபொருட்களுக்கு உரிய விலை கிடைக்காமல் இடைத்தரகர்கள் மூலம் சந்தைப்படுத்தும் நிலையுள்ளது. இதை தவிர்க்க வேளாண்துறை மூலம் சந்தைப்படுத்தவும், மதிப்பு கூட்டு பொருட்களாக விளைபொருட்களை மாற்றவும் உரிய பயிற்சிகள் மற்றும் ஆலோசனைகளை வழங்கிட வேண்டியது மிக அவசியம்.
5 ஆயிரம் ஏக்கரை வளமாக்கும் தோனிமடுவு திட்டம்
ஈரோடு மாவட்டம் அந்தியூரை ஒட்டிய காப்புக்காட்டில் வட பர்கூர் காப்புக்காடு பகுதியில் தோனிமடுவு ஓடை இருக்கிறது. சுற்றுப்பகுதி மலைகளில் பெய்யும் மழை வழிந்தோடி தோனிமடுவு ஓடையாக மாறி, சில கிராமங்கள் மற்றும் வனப்பகுதி வழியே ஓடி, இறுதியில் காவிரி ஆற்றில் கலக்கிறது.
தோனிமடுவு ஓடையின் குறுக்கே தடுப்பணை கட்டினால், மழைக்காலத்தில் பெருகும் தண்ணீரை சேமித்து, கால்வாய்கள் மூலமாக லக்கம்பட்டி, சின்ன தண்டா,பெரிய தண்டா, தார்க்காடு என கொளத்தூர் வட்டாரத்தின் பெரும்பாலான கிராமங்களில் 5 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்கள் பாசன வசதியை பெறும்.
இத்திட்டத்தை நிறைவேற்ற இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை வைத்த நிலையில் கடந்த 1971-ம் ஆண்டு இதுகுறித்த வரைவு அறிக்கை பொதுப் பணித்துறையால் தயாரிக்கப்பட்டது. அதற்கு பின்னர் இத்திட்டம் அடுத்த கட்டத்தை சென்றடைவதில் தொடர்ந்து பின்னடைவை மட்டும் சந்தித்ததால் இத்திட்டம் கிடப்பில் உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT