Published : 15 Dec 2013 12:00 AM
Last Updated : 15 Dec 2013 12:00 AM
கடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அமைத்தது போன்ற வலுவான கூட்டணியை வரும் தேர்தலில் காங்கிரஸ் அமைக்கும் என்று மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் கூறினார்.
தமிழக மாணவர் காங்கிரஸ் சார்பில், புதிய இணைய தளம் துவங்கும் நிகழ்ச்சி சென்னை சத்தியமூர்த்தி பவனில் சனிக்கிழமை நடந்தது. இதில், மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன் பங்கேற்று, புதிய இணையதளத்தை (www.tnnsui.in) துவக்கி வைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:
மத்திய அரசின் தவறான அணுகுமுறையால்தான், தமிழக மீனவர்கள் தொடர்ந்து இலங்கை கடற்படையால் தாக்கப்படுவதாக, முதல்வர் ஜெயலலிதா குற்றம்சாட்டுவது சரியல்ல. தமிழக மீனவர்கள் பிரச்சினைக்கு தீர்வு காண தொடர்ந்து முயற்சிக்கிறோம். இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தில் தனி அதிகாரி ஒருவரை நியமித்து, மீனவர் பிரச்சினைகளைத் தீர்க்க முயற்சித்து வருகிறோம்.தற்போது இரு தரப்பிலும் நடத்தப்படவுள்ள பேச்சுவார்த்தையில் நிரந்தரத் தீர்வு ஏற்படும்.
நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிதான் அதிக இடங்களைப் பிடிக்கும். 2004, 2009-ம் ஆண்டு தேர்தல்களில் அமைத்ததுபோன்று, வலுவான வெற்றிக் கூட்டணியை இந்த முறையும் காங்கிரஸ் அமைக்கும். காங்கிரஸ் தலைமையிலான அணிதான் வெற்றி பெறும்.
கடந்த தேர்தலின்போது, இலங்கைத் தமிழர் பிரச்சினை குறித்து எதிர்தரப்பினர் எப்படி பேசினார்கள் என்பது தெரியும். ஆனால், தேர்தல் முடிவு காங்கிரஸுக்கு சாதகமாக இருந்தது. இதிலிருந்தே இலங்கைப் பிரச்சினை, காங்கிரஸின் வெற்றி வாய்ப்பை பாதிக்குமா, இல்லையா என்ற உண்மை நிலை தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார். தமிழக காங்கிரஸ் தலைவர் பி.எஸ்.ஞானதேசிகன் உடனிருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT