Published : 25 Oct 2013 09:16 AM
Last Updated : 25 Oct 2013 09:16 AM
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக ஞானதேசிகன், கடந்த 2011-ம் ஆண்டு கடைசியில் நியமிக்கப்பட்டார். சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்கறிஞரான இவர், திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டுவைச் சேர்ந்தவர்.
இந்த ஆண்டுடன் ஞானதேசிகன் மாநிலங்களவை எம்.பி. பதவி காலம் முடிவடைவதால் அடுத்த ஆண்டு 2014-ம் ஆண்டு மே மாதம் நடக்கும் மக்களவைத் தேர்தலில் ஞானதேசிகன், காங்கிரஸ் கட்சி சார்பில் திண்டுக்கல் தொகுதியில்போட்டியிட தயாராகி வருவதாகவும், அதற்காக அவரது ஆதரவாளர்கள் தற்போதே தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, இந்த தொகுதியில் மீண்டும் போட்டியிட "சிட்டிங்' காங்கிரஸ் எம்.பி. என்.எஸ்.வி.சித்தன் முயற்சி செய்து வருகிறார். ஆனால், ஞானதேசிகன் போட்டியிடுவதாக அவரது ஆதரவாளர்கள் தேர்தல் ஆயத்தப் பணிகளில் ஈடுபடுவதால், எம்.பி.யின் ஆதரவாளர்கள் "அப்செட்' ஆகியுள்ளனர். அதனால், காங்கிரஸ் கட்சியில் தேர்தல் தேதி, கூட்டணி முடிவாகாத நிலையில் தொகுதியில் "சீட்' பெற காங்கிரஸ் கட்சியில் இப்போதே கலாட்டா தொடங்கிவிட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் ஞானதேசிகனிடம் கேட்டபோது, "நான் மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவது பற்றி இன்னும் முடிவு செய்யவில்லை. இன்னும் தேர்தல் தேதி முடிவாகவில்லை. கூட்டணி இறுதியாகவில்லை. மேலும், நான் கட்சியின் மாநிலத் தலைவராக உள்ளதால், நான் போட்டியிட்டால் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் எல்லா தொகுதியிலும் முழுமையாக கவனம் செலுத்த முடியுமா எனத் தெரியவில்லை. போட்டியிடுவது குறித்து நான் மட்டும் முடிவு செய்தால் போதாது. கட்சி மேலிடம் அனுமதி கொடுக்க வேண்டும். வத்தலகுண்டு சொந்த ஊர் என்பதால், யாரையோ வெறுப்பேற்ற யாராவது திண்டுக்கல்லில் நான் போட்டியிடுவதாக தேவையில்லாமல் பரப்பிவிட்டிருக்கலாம் '' என பிடி கொடுக்காமல் நழுவினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT