Published : 14 Sep 2013 02:01 AM
Last Updated : 14 Sep 2013 02:01 AM
இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் 97 பேரையும் விடுவிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.
இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 'தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய பகுதிகளில் மீன்பிடிக்கும்போது அவர்களை இலங்கைக் கடற்படையினர் தாக்குவதும், சித்ரவதை செய்வதும் மற்றும் கைது செய்வதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இந்தப் பிரச்சினை குறித்து தங்களின் கவனத்தை ஈர்க்க மீண்டும் கடிதம் எழுதுகிறேன்.
தமிழக மீனவர்கள் தங்களின் வாழ்வாதாரத்துக்காக பாக் ஜலசந்தி பகுதியில் மீன்பிடித்து வருகிறார்கள் என்பது அனைவரும் அறிந்த உண்மை. தமிழக மீனவர்களின் பாதுகாப்புக்கு எனது தலைமையிலான அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. மேலும், அவர்கள் தங்களது பாரம்பரியமிக்க இடங்களில் மீன் பிடிப்பதற்கான உரிமைகளை உறுதி செய்யவும் நடவடிக்கை எடுக்கிறது. இலங்கைச் சிறைகளில் வாடும் அப்பாவித் தமிழர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தங்களுக்கு கடந்த மாதத்தில் மட்டும் மூன்று முறை கடிதங்களை எழுதியுள்ளேன்.
இந்தச் சூழ்நிலையில், கடந்த மாதம் 26 ஆம் தேதியன்று இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட ராமநாதபுரம் மாவட்ட பாம்பனைச் சேர்ந்த 35 மீனவர்களின் தடுப்புக் காவல் வரும் 23 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
கடந்த ஜூலை 30 ஆம் தேதியன்று இலங்கைக் கடற்படையால் பிடித்துச் செல்லப்பட்ட 21 தமிழக மீனவர்கள் அந்த நாட்டு நீதிமன்றத்தில் நடந்த விசாரணைக்குப் பிறகு அவர்கள் தமிழகம் திரும்ப உத்தரவிடப்பட்டது. ஆனால், அவர்களது மூன்று படகுகளும் விடுவிக்கப்படவில்லை. இதனால், மீனவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். மேலும், இது தொடர்பான வழக்கு அந்த நாட்டு நீதிமன்றத்தால் வரும் 26 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழக மீனவர்களை குற்றவாளிகள் போன்று இலங்கை அரசு நடத்துகிறது. இந்தப் பிரச்சினையில் தூதரக ரீதியில் போதிய நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்திருக்குமானால், இதுபோன்ற நிலைமையைத் தடுத்திருக்கலாம்.
தமிழக மீனவர்கள் பிரச்சினையில் இலங்கை அரசு இப்போது புதிய யுக்தியைக் கையாண்டு வருவதை தங்களின் கவனத்துக்குக் கொண்டு வர விரும்புகிறேன். இலங்கை சிறைகளில் நீண்ட காலமாக அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும், அவர்களின் வாழ்வாதாரமான படகுகள் பிடித்து வைக்கப்படுகின்றன.
தமிழக மீனவர்களை தங்களின் பாரம்பரியமான பகுதியில் மீன்பிடிக்க அனுமதிக்கக் கூடாது என்பதாலேயே இலங்கை அத்தகைய நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. படகுகளை பயன்படுத்தாமல், பழுதுபார்க்காமல் நீண்ட காலம் நிறுத்தி வைத்திருந்தால் அது ஏழை மீனவர்களுக்கு பேரிழப்பாக இருக்கும். இலங்கையின் இதுபோன்ற சுயநல செயல்பாடுகளை கடுமையான முறையில் கண்டிப்பது அவசியமாகும்.
இலங்கைச் சிறைகளில் தமிழக மீனவர்கள் 97 பேர் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். 21 மீனவர்கள் விடுவிக்கப்பட்டாலும் அவர்கள் வீடு திரும்பவில்லை. மேலும், இலங்கை அரசால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 20 படகுகளும் விடுவிக்கப்படவில்லை. எனவே, மீனவர்களை விடுவிக்கும் பிரச்னை குறித்து இலங்கை அரசின் கவனத்துக்கு எடுத்துச் சென்று அவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் படகுகளும் விடுவிக்கப்பட வேண்டும்.
பொய்யான வழக்குகள் போடப்பட்டு, கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இருந்து ஐந்து அப்பாவித் தமிழக மீனவர்கள் இலங்கை சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து சிறை வைக்கும் நடவடிக்கைகளால், தமிழக கடற்கரையோரத்தைச் சேர்ந்த மீனவ சமுதாய மக்களிடையே கொந்தளிப்பு ஏற்படும் என்பதை தாங்கள் புரிந்து கொள்ள முடியும்.
மீனவர்களை விடுவிக்கும் பிரச்னையில் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுப்பது மிகவும் அவசியமாகும். காலம் குறிப்பிடாமல் நடவடிக்கை எடுப்பதை ஒத்திப் போட முடியாது. எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் அனைவரையும் தூதரக ரீதியிலான நடவடிக்கைகள் மூலம் விடுவிக்க வேண்டும். மீனவர்களின் படகுகளை விடுவிப்பதுடன், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வினைக் காண வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT