Published : 12 Jan 2014 12:48 PM
Last Updated : 12 Jan 2014 12:48 PM
உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், நடை முறையில் உள்ள விதியினையும், கருத்தில் கொண்டே சென்னை ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள் என முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
தி.மு.க தலைவர் கருணாநிதி தெரிவித்த கருத்துக்கு பதில் அளிக்கும் வகையில் ஞாயிற்றுக்கிழமையன்று அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:
வேடிக்கை:
சமூகநீதிக்கு சவால் விடப்பட்டபோது, சமூக நீதியினைக் காக்கும் பொருட்டு, 1994-ம் ஆண்டு, 69 சதவீதம் இட ஒதுக்கீட்டினை உறுதி செய்து, சமூக நீதியை நிலை நாட்டிய பெருமை அ.தி.மு.க-வையே சாரும். இப்படி சமூக நீதியைக் காப்பதற்காக பாடுபட்டுக் கொண்டிருக்கின்ற என்னைப் பார்த்து, சமூக நீதியின் குரல் வளையை நான் நெரிப்பதாக கருணாநிதி கூறுவது வேடிக்கையானது.
ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வழக்கு தொடுக்க தூண்டுதலாக இருந்து, அதில் தோல்வி அடைந்த விரக்தியில் இது போன்று எனது தலைமையிலான அரசின் மீது புழுதிவாரி இறைக்கிறாரோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.
ஒப்பந்த அடிப்படை
தமிழக அரசால் கொடுக்கப்பட்ட விளம்பரத்தில், மருத்துவப்பணி யாளர்கள் ஒப்பந்த அடிப்படையிலும், மாற்றுப் பணி மூலமாகவும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுப் பணி மூலம் நியமிக்கப்படுபவர்களுக்கு இட ஒதுக்கீடு பொருந்தாது. ஏனெனில், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் தான் அவர்கள் முதன் முதலில் அரசு மருத்துவர்களாக நிய மிக்கப்பட்டார்கள். ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப் படவுள்ள மருத்துவர்களைப் பொறுத்த வரையில் இட ஒதுக்கீடு உட்பட பொது விதிகள் பொருந்தாது.
இந்த விதிகளின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் 2006 முதல் 2011 வரை, சுகாதாரத் துறையில், தி.மு.க. அரசால் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், திருத்தப்பட்ட தேசிய காசநோய் கட்டுப்பாட்டு திட்டம், தமிழ்நாடு சுகாதார திட்டம் மற்றும் மாநில நலவாழ்வு சங்கம் ஆகியவற்றின் கீழ் 540-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் மற்றும் மருத்துவப் பணியாளர்கள் நியமிக்கப்படும்போது, இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்பதை கருணாநிதிக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
முன்மாதிரியை கருத்தில் கொண்டு:
இந்திய அரசுக்கு எதிராக ‘எய்ம்ஸ்' பேராசிரியர்கள் சங்கம் தொடர்ந்த வழக்கினை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது 18.7.2013 நாளைய தீர்ப்பில், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை, பொறியியல் மற்றும் இதர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பதவிகளில் இட ஒதுக்கீட்டினை பின்பற்றுவது சரியாக இருக்காது என்று இந்திரா சஹானி வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பை மாற்ற இயலாது என்று தெரிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பினையும், நடைமுறையில் உள்ள விதியினையும், முன்மாதிரியையும் கருத்தில் கொண்டே ஓமந்தூரார் உயர் சிறப்பு மருத்துவமனையில் மருத்து வர்கள் நியமிக்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவை மாற்ற வேண்டுமென்றால், இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உரிய திருத்தங்களை மத்தியஅரசுதான் கொண்டுவர வேண்டும்.
ஒன்பதரை ஆண்டு காலம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய கூட்டணி அமைச்சரவையில் பங்கு வகித்தது தி.மு.க. மத்திய அமைச்சரவையிலிருந்து விலகியும் காங்கிரஸ் கட்சியுடன் ஒட்டி உறவாடியவர் கருணாநிதி. காங்கிரஸ் தயவின் மூலம் தன் மகள் கனிமொழிக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் பெற்றுத் தந்தவர் கருணாநிதி.சுயநலத்திற்காக காங்கிரஸ் மேலிடத்தை அணுகிய கருணாநிதிக்கு தமிழர்கள் நலத்திற்காக, இட ஒதுக்கீட்டிற்காக மேலிடத்தை அணுக நேர மில்லையா?
நான் 2011-ம்ஆண்டு மூன்றாவது முறையாக முதல்வராக பொறுப்பு ஏற்றவுடன், மருத்துவர்கள் மற்றும் மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் ஓய்வு பெறுவதாலோ அல்லது பணியை விட்டு நீங்குவதாலோ ஏற்படும் காலி இடங்கள் மற்றும் புதியதாகத் தோற்றுவிக்கப்படும் பணி இடங்களை உடனடியாக நிரப்ப ‘மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம்’ என்ற ஒர் அமைப்பினை ஏற்படுத்தினேன். இதன் மூலம், 2334 மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் அமைக்கப்படுவதற்கு முன் 2,027 மருத்துவர்களும் என மொத்தம் 4,361 மருத்துவர்கள் காலமுறை ஊதியத்தில் நியமிக்கப்பட்டார்கள். இவர்களை பணியில் அமர்த்தும்போது, இட ஒதுக்கீடு முழுவதுமாக கடை பிடிக்கப்பட்டது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
சம்பளம்.. ‘சிவப்புக் கம்பளம்':
கருணாநிதி தனது அறிக்கையில், “இயக்குநர் பதவிக்கான மாதாந்திர சம்பளம் எவ்வளவு தெரியுமா? இரண்டரை லட்சம் ரூபாய். மூத்த மருத்துவ ஆலோசகர் என்று 14 பேரை நியமிக்கப் போகிறார்களாம். அவர்களுக்கான ஊதியம் தலா ஒன்றரை லட்சம் ரூபாய்....” என மருத்துவர்களின் சம்பளம் குறித்து நீட்டி முழக்கி இருக்கிறார்.
பலதுறை உயர் சிறப்பு மருத்துவ மனையில் பணிபுரிய அதிக தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்கள் நிச்சயம் தேவை என்பதைக் கருத்தில் கொண்டு அதிக சம்பளம் தரும் வகையில் ‘சிவப்புக் கம்பளம்' விரிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணி நியமனம்:
இதே போன்று, ஆசிரியர்கள் பணி நியமனத்திலும் சமூகநீதி கடைபிடிக்கப்படவில்லை என்று கூறியுள்ளார் கருணாநிதி. இது முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது ஆகும். மத்திய அரசின் உத்தரவுப்படி, ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெறுபவர்களையே ஆசிரியராக நியமிக்க இயலும்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் பெறப்படும் மதிப்பெண்ணை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படுவதில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது, பள்ளி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்வதற்கான தகுதித்தேர்வுதான். இந்த ஆசிரியர் நியமனத்தில் 69 விழுக்காடு இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டுள்ளது.
2014 மே மாதத்திற்கு பின் அ.தி.மு.க. கொள்கைகள், மத்திய அரசால் நிறைவேற்றப்படும் சூழ்நிலை உருவாகும் போது, உச்ச நீதிமன்ற ஆணையினை மாற்றும் வகையில் உரிய திருத்தங்களை இந்திய அரசமைப்புச் சட்டத்தில் மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என்பதையும் கருணாநிதிக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT