Published : 11 Oct 2014 11:58 AM
Last Updated : 11 Oct 2014 11:58 AM

வீட்டுக்கு ஒருவர் கண் தானம் விழி உயர்த்தும் விழிப்புணர்வு கிராமம்: 137 பேர் கண் தானம் செய்து சாதனை

கன்னியாகுமரி மாவட்டத்தில் வீட்டுக்கு ஒருவர் கண் தானம் செய்ய முன்வந்து பதிவு செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டம், வில்லுக்குறி அடுத்த மாடத்தட்டுவிளை கிராமம் நேற்று களைகட்டி இருந்தது. காரணம் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் இரண்டாவது வியாழக்கிழமை உலக கண்ணொளி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

பிரதான பண்டிகை கொண்டாட்டங்களையும் பின்னுக்கு தள்ளிவிட்டு மாடத்தட்டுவிளை கிராமத்தில் உலக கண்ணொளி தினம் வெகு விமர்சையாக கடைபிடித்து வருவது காண்போரின் பார்வையைக் கவர்ந்தது. சின்னஞ் சிறிய இக்கிராமத்தில் இதுவரை 137 பேர் கண் தானம் செய்திருப்பது விழி உயர்த்துகிறது. இங்குள்ள புனித செபஸ்தியார் ஆலயத்தில் இயங்கிவரும் திருக்குடும்ப திரு இயக்க அங்கத்தினர்கள்தான் இந்த மிகப்பெரிய சேவையை செய்து வருகின்றனர்.

பயிற்சியால் மாற்றம்

இயக்க செயலாளர் ரெக்ஸின் ராஜகுமார் (40) கூறியதாவது:

மறைமாவட்டம் சார்பில் எங்களுக்கு கடந்த 2003-ம் ஆண்டு கண் தானம், ரத்த தானம் குறித்து விழிப்புணர்வு பயிற்சி கொடுத்தனர். அப்போது ஏதோ ஒரு ஆர்வத்தில் 80 பேர் கண்தானம் செய்ய பெயர் கொடுத்தோம்.

கடந்த 2007-ம் ஆண்டு எங்கள் சங்க உறுப்பினரின் பெரியப்பா மரிய செபஸ்தியான் என்பவர் இறந்தார். சங்கத்தில் பேசி அவரது கண்களை தானம் செய்ய முடிவு செய்தோம். அவர்கள் வீட்டிலும் சம்மதித்தனர். அதில் இருந்து படிப்படியாக கண் தானம் செய்வோர் எண்ணிக்கை பெருகிவிட்டது. இதுவரை எங்க ஊருல 137 பேர் கண் தானம் செய்துள்ளனர்.

ஆசாரிபள்ளத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வந்ததும், முதன் முதலில் உடல் தானம் பெறப்பட்டது, எங்க ஊரைச் சேர்ந்த சுசீலா என்ற பெண்ணின் உடல்தான். இதுவரை 15 பேர் உடல் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். வீட்டுக்கு ஒருவர் கண் தானம் செய்ய எழுதிக் கொடுத்துள்ளனர்.

முயற்சிக்கு வெற்றி

முளமுமூடு வட்டார இளைஞர் பணிக்குழு இயக்குநராக உள்ள டைட்டஸ் மோகன் என்பவரின் பெரு முயற்சிக்கு கிடைத்த வெற்றிதான் இது. அவரது முயற்சியால் இப்போது எங்கள் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 57 பேரிடம் கண் தானம் பெறப்பட்டுள்ளது என்றார்.

கண் தான கிராமம்

மாடத்தட்டுவிளை அருட்தந்தை இயேசு ரத்தினம் கூறியதாவது:

இந்த கிராமத்தையே கண் தான கிராமம் என்றுதான் சொல்கின்றார்கள். இதுவரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கண் தானம் செய்ய பதிவு செய்துள்ளனர். இளையர் அமைப்பு, திருக்குடும்ப

திரு இயக்கத்தை சேர்ந்தவர்கள் இதுகுறித்து விழிப்புணர்வில் ஈடுபட்டு வருகின்றனர். இப்போது மாடத்தட்டுவிளையை சுற்றியுள்ள கிராமங்களிலும் இதுபோல் முயற்சி நடப்பது இந்த சேவைக்கு கிடைத்த வெற்றி என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x