Published : 08 Mar 2014 12:00 AM
Last Updated : 08 Mar 2014 12:00 AM
தமிழகத்தில் பாஜக கூட்டணிக்கு தேமுதிக தலைமை ஏற்கக்கூடும் என்று தகவல்கள் வருகின்றன.
தமிழகத்தில் திமுக தலை மையில் காங்கிரஸ், தேமுதிக கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி உருவாகலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திடீர் திருப்பமாக தேமுதிக பாஜக-வுடன் கை கோத்திருக்கிறது. இந்த அணியில் பாமக, மதிமுக கட்சிகளும் இணைந்திருப்பதால் பாஜக கூட்டணி பலம் பொருந்திய கூட்டணியாக உருவெடுத்திருக்கிறது.
பாஜக கூட்டணியில் தேமுதிக-வுக்கு 12 முதல் 14 தொகுதிகள் கூடுதலாக ஒரு மாநிலங்களவை சீட், பாமக-வுக்கு 8 அல்லது 9 தொகுதிகள் கூடுதலாக ஒரு மாநிலங்களவை சீட் (இது டாக்டர் அன்புமணிக்காக ரிசர்வ் செய்யப்படலாம்), பாஜக-வுக்கு 8, மதிமுக-வுக்கு 6 முதல் 8, ஈஸ்வரனின் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, பச்சமுத்துவின் ஐஜேகே, ஏ.சி.சண்முகத்தின் புதிய நீதிக் கட்சி, புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு தொகுதி என தொகுதிப் பங்கீடுகளின் முதல்கட்டப் பேச்சுவார்த்தை நடந்திருப்பதாக பாஜக மற்றும் மதிமுக வட்டாரங்கள் தெரிவித்தன.
மதிமுக தரப்பில் தூத்துக்குடி, விருதுநகர், பெரும்புதூர், காஞ்சிபுரம், கடலூர், தேனி, பொள்ளாச்சி, ஈரோடு, திருச்சி, தென்காசி, ஆரணி, மத்திய சென்னை தொகுதிகள் கேட்கப்பட்டுள்ளதாம்.
திருச்சி தொகுதியை தங்களுக்கு வேண்டும் என்று உறுதிபட தெரிவித்துவிட்டதாம் பாஜக. தேமுதிக தரப்பில் ஆரணி, கள்ளக்குறிச்சி, மதுரை, திண்டுக்கல், வடசென்னை, தென் சென்னை, திருப்பூர் தொகுதிகள் கட்டாயம் தங்களுக்கு வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதில் ஆரணியை ஏ.சி.சண்முகமும், தென் சென்னையை இல.கணேசனுக்காக பாஜக-வும் கேட்பதால் இன்னும் இறுதி வடிவம் எட்டப்படாமல் இருக்கிறது.
இதனிடையே, தமிழகத்தில் தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு தேமுதிகதான் தலைமை ஏற்கும் என்று விஜய காந்த் ஏற்கெனவே அறிவித் திருந்தார்.
அந்த வகையிலும் தற்போது பாஜக கூட்டணியில் தேமுதிக-வுக்கு கூடுதலான தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருப்பதன் அடிப்படையிலும் பாஜக-வின் தமிழக கூட்டணிக்கு தேமுதிக தலைமை ஏற்கும் என்றும் சொல்லப்படுகிறது.
அனேகமாக ஞாயிறு அல்லது திங்கள்கிழமை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தமிழகம் வரும்போது விஜயகாந்த் உள்ளிட்ட பாஜக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் கூட்டாக
அமர்ந்து கூட்டணி அறிவிப்பை முறைப்படி வெளியிடுவர் எனத் தெரிகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT