Published : 04 Mar 2017 09:59 AM
Last Updated : 04 Mar 2017 09:59 AM
மகளிர் கல்லூரி தெரியும். மகளிர் தங்கும் விடுதி தெரியும். ‘மகளிர் மட்டும்’ பேருந்து தெரியும். சென்னையில் ‘மகளிர் மட்டும்’மின்சார ரயில்கூட ஓடுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் அனைத்து மகளிர் காவல் நிலையம் இருக்கிறது. ஆனால், அனைத்து மகளிர் கிராமப் பஞ்சாயத்துகளை அறிவீர்களா?
உள்ளாட்சித் தேர்தலில் மகளிருக்கு 33 சதவீதத்துக்கும் குறையாமல் இடங்கள் ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழகம், பிஹார், கேரளம் ஆகிய மாநிலங்கள் 50 சதவீதம் வரை மகளிருக்கு இடம் ஒதுக்க முன்வந்துள்ளன. இதன் நீட்சியாக முன்னெடுக்கப்படும் சோதனை முயற்சியே அனைத்து மகளிர் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம். அதாவது, தலைவர் பதவி மட்டுமின்றி அனைத்து உறுப்பினர்களுக்கும் மகளிரைத் தேர்வு செய்வதே அனைத்து மகளிர் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம். இது ஒரு கருத்துரு. தேவையின் அடிப்படையில் தேவையான பகுதிகளுக்கு உருவாக்கிக்கொள்ள வேண்டிய ஜனநாயக அமைப்பு இது.
பெண் சிசுக் கொலைகள், பெண்கள் மீதான வன்கொடுமை, பெண்களுக் கான உரிமைகள் புறக்கணிப்பு ஆகியவை அதிகம் நடக்கும் பகுதி களில் இதுபோன்ற அனைத்து மகளிர் கிராமப் பஞ்சாயத்துகளை உருவாக்க லாம். அப்படி உருவாக்கப்படும்போது பெண்கள் பாதுகாப்பு, வளர்ச்சிக்கான புதிய திட்டங்களை சட்டரீதியாக உருவாக்க முடியும். குறிப்பாக, பெரும் பான்மையான சாமானியப் பெண்களை அரசியல் அதிகாரத்தில் பங்கேற்க வைக்கும் முயற்சியே அனைத்து மகளிர் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம். இந்தக் கருத்துரு இன்னும் சட்டரீதியான வடிவம் பெறவில்லை என்றாலும்கூட ஹரியாணா, மகாராஷ்டிரம், குஜராத், பிஹார் உள்ளிட்ட மாநிலங்களில் சோதனை முயற்சியாக வெற்றிகரமாக உருவாக்கப்பட்டிருக்கின்றன. தமிழகத் திலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பிம்லா சந்திரசேகரின் ‘ஏக்தா’அமைப்பு இதற்கான முயற்சிகளை முன்னெடுத் தது. தமிழகத்தின் அரசியல் சூழல் அதற்கு இடம் அளிக்கவில்லை.
ஆனால், தமிழகத்தில் இதற்கான தேவை முன் எப்போதையும்விட இப்போது அதிகமாகியிருக்கிறது. பெண் சிசுக்கொலை, பெண்கள் மீதான வன்கொடுமைகள் இவற்றுடன் சேர்த்து அதிமுக்கியமான, அவசரமான தேவை ஒன்று உருவாகியிருக்கிறது. என்ன என்கிறீர்களா? மனைவியின் விளக்குமாறு தாக்குதலுக்கு பயந்தே மது அருந்தாமல் வீடு சென்றடை பவர்களை எனக்குத் தெரியும். மனை விக்கு பயந்து மதுவை மறந்தவர்கள் பலர். மனைவியின் வார்த்தைகளை மதித்து போதை உலகில் இருந்து மீண்டவர்கள் பலர். பெண்மை வீட்டுக்கே இவ்வளவு நன்மை பயக்குமெனில், நாட்டுக்கு?
எனவேதான் சொல்கிறேன், தமிழ கத்தில் மதுவிலக்குக்கான மற்றுமொரு எளிய, சட்டரீதியான தீர்வு - அனைத்து மகளிர் கிராமப் பஞ்சாயத்துகள்!
ஹரியாணா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் இருக்கிறது பிவானி ரூஹிலன் கிராமப் பஞ்சாயத்து. பஞ்சாப் மாநிலத்தைப் போன்றே ஹரியா ணாவிலும் போதைப் பழக்கங்கள் அதிகம். பிவானி ரூஹிலன் கிராமமும் அதற்கு விதிவிலக்கு அல்ல. கிராமத் தின் பெரும்பான்மையான ஆண்கள் மதுப் பழக்கம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களுக்கு அடிமையாகியிருந் தார்கள். மது அருந்திவிட்டு மனைவி, குழந்தைகளைத் தாக்குவது, வருமானம் இழப்பு, ஆண்கள் இள வயதில் மரணம் அடைவது போன்ற பிரச்சினைகள் அதிகம் இருந்தன. பஞ்சாயத்துத் தலைவராக இருந்த பெலிராம் சிங் எவ்வளவோ முயற்சி செய்தும் இதை மாற்ற முடியவில்லை. கடந்த 2015-ல் இந்தப் பஞ்சாயத்து பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது சமூக சேவகரான சுரேந்தர் கோஸ்சுவாமி என்பவர்தான் அனைத்து மகளிர் கிராமப் பஞ்சாயத்து என்கிற திட்டத்தை முன்வைத்தார்.
பெரும்பான்மையான மக்கள் இதனை ஏற்றுக்கொண்டனர். அந்தக் கிராமத்தின் படித்த பெண்ணான 28 வய தான சரிதா கோஸ்சுவாமி தலைமையில் சந்தோஷ் தேவி, சுஷ்மா தேவி, சீமா, சுனிதா உட்பட 12 வார்டுகளிலும் பெண்கள் போட்டியிட்டனர். அதே சமயம் போட்டியும் இருந்தது. ஆனால், பெரும்பான்மை ஆதரவு மகளிர் குழுவுக்கு இருந்ததால் ஒட்டு மொத்தமாக பெண்களே வெற்றி பெற் றார்கள். ஹரியாணாவின் உள்ளாட்சித் துறை வரலாற்றில் முதன்முறையாக உருவானது அனைத்து மகளிர் கிராமப் பஞ்சாயத்து நிர்வாகம். பெண்களின் இந்த முயற்சியைப் பாராட்டி மாநில அரசு இந்தப் பஞ்சாயத்துக்கு 11 லட்சம் ரூபாயை ரொக்கப் பரிசாக அளித்தது. போதைப் பழக்கம் ஒழிப்பு, பெண்கள் கல்வி உள்ளிட்ட விஷயங்களுக்காக தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது ரூஹிலன் கிராமம்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் இருக்கிறது சிஷ்வா கிராமப் பஞ்சாயத்து. போர்சாத் டவுனை ஒட்டிய 7 ஆயிரம் வாக்காளர் களைக்கொண்ட பெரியகிராமப் பஞ்சாயத்து இது. பெண்கள் மீதான வன்கொடுமை, கல்லூரிகளில் ராகிங், சங்கிலிப் பறிப்பு உட்பட பெண்கள் பலவகைகளிலும் பாதிக்கப்பட்டுவந் தார்கள். அந்தக் கிராமத்தில் இருக்கும் படித்த இளம் பெண்கள் இந்த நிலையை மாற்ற முடிவுசெய்தார்கள். குழுவாகத் திரண்டு இளைஞர்களிடமும் பெண் களிடமும் பேசினார்கள். மக்கள் ஆதரவு கணிசமாக கிடைத்தது.
நர்சிங் படித்துவிட்டு மருத்துவமனை யில் பணியாற்றிக் கொண்டிருந்த ஹினால் படேல் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். பொறியியல் மாணவி ராதா படேல் துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிட்டார். மோட்டார் பைக் நிறுவனத்தில் மேலாளாராக பணியாற்றிய நிஷா படேல், பார்மஸி மாணவி விராபென் சர்வையா உட்பட 12 வார்டுகளின் உறுப்பினர் பதவிக்கும் படித்த இளம் பெண்களே போட்டியிட்டனர். சொல்லி வைத்ததுபோல அத்தனை பேரும் வென்றார்கள். கடந்த 2011-ம் ஆண்டில் இவர்கள் வெற்றி பெற்றபோது இவர்களின் வயது 18 முதல் 26-க்குள் தான். இன்று, இந்தியாவின் முன்னோடி கிராமங்களில் ஒன்று சிஷ்வா!
இவை மட்டுமல்ல; மகாராஷ்டிரத் தில் பப்நால் கிராமப் பஞ்சாயத்தில் 2016-ம் ஆண்டு முதல்முறையாக சோனாலி ஷாபியூர் என்கிற 26 வயது இளம் பெண்ணின் தலைமையில் முதல்முறையாக அனைத்து மகளிர் பஞ்சாயத்து போட்டியின்றி உருவாக் கப்பட்டிருக்கிறது. குஜராத்திலும் மீனா பெஹன் என்பவர் தலைமையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதுபோன்ற முயற்சிகளை அரசாங் கங்கள் முன்னெடுக்காது. மக்கள் தான்... குறிப்பாக பெண்கள்தான் முன்னெடுக்க வேண்டும். மெரினாவில் கோஷம் போட்டால் மட்டும் போதுமா? என்ன செய்யப்போகிறார்கள் தமிழ கத்து இளம் பெண்கள்?
- தொடரும்... | எண்ணங்களைப் பகிர: sanjeevikumar.tl@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT