Last Updated : 23 Dec, 2013 12:00 AM

 

Published : 23 Dec 2013 12:00 AM
Last Updated : 23 Dec 2013 12:00 AM

சென்னையின் முடிவில்லா பிரச்சினை: தேர்தலில் அதிக பாதிப்பு யாருக்கு?

மூன்று நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்டிருக்கும் சென்னை நகரம் மற்றுமொரு பொதுத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. ஆனால், அடிப்படை கட்டமைப்பு வசதிகளின்றி பல பகுதிகள் தொடர்ந்து மோசமாகவே இருந்து வருகின்றன. இதனால் தங்கள் கட்சிக்கு பாதிப்பு ஏற்படுமா என இரு கட்சிகளும் அச்சத்தில் உள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய நகரங்களில் ஒன்று என்ற பெருமை பெற்றுள்ள சென்னை நகரத்தின் உட்புறப் பகுதிகளில் இன்னமும் பல சுகாதார சீர்கேடுகளும், அடிப்படை கட்டமைப்பு குறைபாடுகளும் உள்ளன. சிங்கப்பூரை போல் “சிங்காரச் சென்னை” என்று முழங்கிய முந்தைய திமுக ஆட்சியிலும், “எழில்மிகு சென்னை” என்று கூறும் தற்போதைய ஆட்சியிலும் இது தொடர் கதையாகவே இருந்து வருகிறது.

இரு அரசுகளுமே பல கோடி ரூபாயில் திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தினாலும், நகரின் பல பகுதிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதி என்பது எட்டாக்கனியாகவே இருந்து வருகிறது.

சென்னையை நாடாளுமன்ற தொகுதி அடிப்படையில் வடசென்னை, மத்திய சென்னை மற்றும் தென்சென்னை என்று 3 தொகுதிகளாக பிரித்து பார்த்தால், 2 தொகுதிகளில் திமுகவை (வடசென்னை- டிகேஎஸ் இளங்கோவன், மத்திய சென்னை – தயாநிதி மாறன்) சேர்ந்தவர்களே எம்.பி.க்களாக உள்ளனர். தென்சென்னை தொகுதி அதிமுக (சிட்லபாக்கம் ராஜேந்திரன்) வசம் உள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், அதிமுக மற்றும் திமுக கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் தேர்தல் பணிகளைத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் பொதுமக்களிடம் போகும்போது, அந்தந்த பகுதிகளில் நிலவும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து வாக்காளர்கள் சரமாரியாக கேள்வி எழுப்புகின்றனர். அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் ஆளும் கட்சியினர் கையைப் பிசைகின்றனர்.

அதே சமயத்தில் திமுகவின் வசம் இருக்கும் வடசென்னை தொகுதியில் கழிவுநீர்ப் பிரச்சினை, குடிநீர்ப் பற்றாக்குறை, படுமோசமான சாலைகள், குவிந்து கிடக்கும் குப்பை என பல்வேறு பிரச்சினைகள் இருப்பதால் பொது மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் அக்கட்சித் தொண்டர்களும் விழி பிதுங்கி வருகின்றனர்.

திருவொற்றியூரில் கடல் அரிப்புத் தடுப்புப் பணிகளில் டி.கே.எஸ். இளங்கோவன் கவனம் செலுத்தினார். இருப்பினும் பரந்து விரிந்த இந்த தொகுதியில் குறிப்பிட்டு சொல்லும் வகையில் அவர் எதுவும் செய்ததாகத் தெரியவில்லை என்று வடசென்னையின் இதர பகுதியினர் புகார் கூறுகின்றனர். கடந்த தேர்தலின்போது தா.பாண்டியனை வீழ்த்த அவர்கள் வியூகம் வகுத்த அளவுக்கு தொகுதி வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தியதாக தெரியவில்லை என்று கொளத்தூர் தொகுதியில் வசிக்கும் பொதுமக்களும், சில கட்சித் தொண்டர்களும் கூறுகின்றனர்.

எனினும், அத்தொகுதி எம்.பி. ரூ.6.5 கோடி மதிப்பிலான 55 பணிகளுக்கு இதுவரை பரிந்துரை செய்துள்ளதாகத் தெரிகிறது. இதில் 6 கோடி மதிப்பிலான 51 பணிகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாம். வடசென்னை தொகுதிக்கு உள்பட்ட பெரம்பூர் எம்.எல்.ஏ. சவுந்திரராஜன் கூறுகையில், “வடசென்னை தொகுதியில் பெரிய அளவில் பணிகள் எதுவும் நடந்ததாகத் தெரியவில்லை. மேலும், இப்போதெல்லாம் எதிலும்

கமிஷன் கேட்கும் கலாசாரம் நிலவுகிறது. எந்த திட்டங்களையும் குறுக்கீடு இல்லாமல் செய்ய முடியவில்லை” என்றார்.

திமுகவின் வசம் உள்ள மத்திய சென்னை தொகுதியைப் பொருத்தவரை எம்.பி. தொகுதி நிதியில் இருந்து கட்டப்பட்ட லோகோ ஒர்க்ஸ் மேம்பாலம் பெரிதும் பாராட்டப்படுகிறது.

ஆனால் தி.நகர், திருவல்லிக்கேணியில் நெரிசல், கழிவுநீர் பிரச்சினைகள் தொடரத்தான் செய்கின்றன. இவர் 13 திட்டங்களுக்கு பரிந்துரை செய்து, ரூ.3.46 கோடி அளவிலான திட்டங்களுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது.

லஞ்ச புகாருக்குள்ளான தென்சென்னை எம்.பி சிட்லபாக்கம் ராஜேந்திரன், பரிந்துரைத்த 108 பணிகளில் ரூ.9.42 கோடியிலான 65 பணிகளுக்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், விரிவாக்கப் பட்ட பகுதிகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு முன்னேற்றம் எதுவும் இல்லை.

மேற்கண்ட மூவரும் என்னென்ன பணிகளுக்கு பரிந்துரைத்தார்கள், அவற்றின் நிலை என்ன என்பதை வரும் தேர்தலுக்குள்ளாவது பட்டியலாக வெளியிட வேண்டும் என்று வாக்காளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x