Published : 20 Mar 2017 11:56 AM
Last Updated : 20 Mar 2017 11:56 AM
இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளி லும் ஏற்கெனவே இருந்த குலுக்கல் முறையிலான 40 மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு முதல் ஆன்-லைனுக்கு மாற்றப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக பெற்றோர் தெரிவித்தனர்.
நாட்டில் 1,100 இடங்களில் மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் செயல்படுகின்றன. ஒவ்வொரு பள்ளியிலும் முதல் வகுப்பில் மட்டும் மாணவர் சேர்க்கை நடக்கும். முதல் வகுப்பில் 160 மாணவ, மாணவிகள் சேர்க்கப்படுகின்றனர். முதல் வகுப்பை தவிர பிற வகுப்பு களில் இடையில் உருவாகும் காலியிடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கப்படுவர். அதுவும் விதிமுறையின் அடிப்படையில் இடங்கள் நிரப்பப்படும்.
இப்பள்ளிகளில் இடஒதுக்கீட்டை பொறுத்தவரை மத்திய, மாநில அரசு அதிகாரிகளின் குழந்தைகள், ராணுவம் உட்பட சிறப்பு ஒதுக்கீட்டின்படி 75 சதவீத மாணவர்களும், கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் (ஆர்.டி.இ) 25 சதவீதம் அதாவது, 40 மாணவர்களும் சேர்க்கப்படுகின்றனர். 40 மாணவர்கள் சேர்க்கையில் தனியார் ஊழியர்கள் மற்றும் இதர குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் முன்னுரிமை அடிப்படையில் சேர்க்கப்படுவர். இதற்காக விண்ணப்பித்த சம்பந்தப்பட்ட பெற்றோரின் முன்னிலையில், குலுக்கல் முறையில் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். கடந் தாண்டு வரை இக்குலுக்கல் முறை நடைமுறையில் இருந்தது.
இந் நிலையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், இந்த ஆண்டு 40 மாணவர் சேர்க்கை குலுக்கல் முறை தேர்வுக்காக நேற்று முன்தினம் ஏராளமான பெற்றோர்கள் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் திரண்டனர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் பெற்றோர்களை பள்ளி நிர்வாகம் உள்ளே அனுமதிக்கவில்லை என்று புகார் எழுந்துள்ளது. பெற்றோர் முன்னிலையில் நடக்கும் குலுக்கல் முறை தேர்வுக்கு பதிலாக ஆன்லைனில் குலுக்கல் முறையிலான மாணவர் தேர்வுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. தேர்வான மாணவர்கள் பட்டியல் பள்ளி விளம்பர பலகையில் மார்ச் 22-ம் தேதி ஒட்டப்படும் என, பள்ளி நிர்வாகம் தெரிவித்ததால் பெற்றோர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பேராசிரியர் மணி (பெற்றோர்) கூறியதாவது: நான் எனது மகனுக்கு கேந்திரிய வித்யாலயா பள்ளியில் குலுக்கல் முறையில் இடம் கிடைக்கும் என நம்பினேன். இதற்காக மதுரை நரிமேட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்றேன். ஆனால், இம்முறை ஆன்லைன் மூலமே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர் எனக் கூறுகின்றனர். இதில் இடம் கிடைக்குமா என சந்தேகம் உள்ளது. பெற்றோர் முன்னிலையில் பெயர்களை வாசித்து எடுக்கும்போது, வெளிப்படைத் தன்மை இருக்கும்.
ஆனால், ஆன்லைன் குலுக்கல் முறையில் வெளிப்படை தன்மையை எதிர்பார்க்க முடியாது. இப்புதிய தேர்வு முறை பற்றி பெற்றோருக்கு முன்கூட்டியே பள்ளி நிர்வாகங்கள் தகவல் தெரிவிக்கவில்லை. ஏராளமான பெற்றோர் நேற்று முன்தினம் பிற்பகல் வரை நீண்ட நேரம் காத்திருந்தோம். ஆனால், பள்ளி நிர்வாகத்தினர் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை. பழைய குலுக்கல் முறையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்பட வேண்டும் என்றார்.
இது குறித்து நரிமேடு கேந்திரிய வித்யாலயா பள்ளி முதல்வர் செல்வராஜ் கூறியது:
நாட்டில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா பள்ளிகளிலும் ஆர்டிஇ ஒதுக்கீடு சேர்க்கை, இந்த ஆண்டு முதல் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளது. இதற்கென சிறப்பு ‘சாப்ட்வேர்’ உருவாக்கப்பட்டு, அதன் மூலம் 40 சதவீத மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் ஒருங்கிணைக்கப்படும். ‘ஸ்டாட்’ என்ற பட்டனை அழுத்தினால் 2 நிமிடத்தில் தகுதி, வரிசை அடிப்படையில் உரிய மாணவர்களை தேர்வு செய்து, அதற்கான பட்டியல் வெளியிடப்படும். மாணவரின் தேர்வு குறித்த விவரங்களை உடனே சம்பந்தப்பட்ட பெற்றோரின் செல்போனுக்கு குறுந்தகவலாகவும், விண்ணப் பத்தில் இடம் பெற்றுள்ள இ-மெயில் முகவரியில் தகவல் தானாகவே செல்லும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இப்புதிய நடைமுறையால் 40 சதவீத மாணவர்கள் தேர்வு வெளிப்படையாக இருக்கும் என்பதால் மத்திய அரசு இந்த நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT