Published : 14 Jun 2017 10:58 AM
Last Updated : 14 Jun 2017 10:58 AM
சின்ன வெங்காயம் விலை கட்டுப் பாடில்லாமல் அதிகரித்துவரும் நிலையில் விலையைக் கட்டுப்படுத் தவும் சேமித்து வைத்து விற்று லாபம் பெறவும் சேமிப்பு பட்டறை அமைக்க விவசாயிகளுக்கு தோட்டக்கலைத் துறை 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.
ஒரு கிலோ தரமான சின்ன வெங்காயம் தற்போது ரூ. 120-க்கு விற்கிறது. இந்த விலையேற்றதால் பொதுமக்கள் சமையலில் சின்ன வெங்காயத்தை பயன்படுத்தாமல் பெரிய வெங்காயத்தை சேர்த்து வருகின்றனர். வறட்சியால் சந்தைகளுக்கு சின்ன வெங்காயம் வரத்து குறைந்ததே இந்த விலையேற்றத்துக்கு காரணம் எனக் கூறப்பட்டாலும், விவசாயிகள் சின்ன வெங்காய அறுவடைக்குப் பிந்தைய தொழில்நுட்பத்தை சரியாகப் பின்பற்றாததே முக்கியக் காரணம் என தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மதுரை தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் பூபதி கூறியதாவது:
தமிழகத்தில் அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் சின்ன வெங்காயம் அதிகளவு விளைவிக்கப்படுகிறது. மதுரையில் 500 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்படுகிறது. சின்ன வெங்காயத்தை பொறுத்தவரை விலை அதிகரித்தால், ஒரே நேரத்தில் விவசாயிகள் அனை வரும் சாகுபடி செய்கின்றனர். அல்லது விலை குறையும்போதோ, வறட்சியின் போதோ வெங்காய சாகுபடியை கைவிட்டு ஒதுங்குகின்றனர்.
மகசூல் அதிகரிக்கும்போது விவசாயிகள் அவற்றை உடனே சந்தைகளுக்கு கொண்டு செல்லாமல், சேமித்து வைத்து விலை உயரும்போது விற்க வேண்டும். அப்போதுதான் வெங்காய விலை நிலையாக இருக்கும். இதற்காக சின்ன வெங்காயம் சேமிப்பு பட்டறை அமைக்க தோட்டக்கலைத் துறை 50 சதவீதம் மானியம் வழங்குகிறது.
இந்த திட்டத்தில் சேரும் விவசாயிகள் அனைவருக்கும் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால், விவசாயிகளுக்கு ஆர்வமில்லை. பொதுவாக விவசாயிகள், வயலில் சின்ன வெங்காயத்தை அறுவடை செய்த கையோடு வியாபாரிகளிடம் விற்பனை செய்து விடுகின்றனர். அவர்கள் சேமித்து வைத்து, பொதுமக்களுக்கு சமையலுக்கும், விவசாயிகளுக்கு விதையாகவும் விற்கின்றனர்.
அப்படி சேமித்துவைத்த சின்ன வெங்காயத்தை வியாபாரிகள் விவசாயிகளுக்கே சாகுபடி செய்வதற்காக ஒரு கிலோ விதை சின்ன வெங்காயத்தை 100 ரூபாய்க்கு விற்கின்றனர். ஒரு ஏக்கர் சாகுபடி செய்ய 1 டன் சின்ன வெங்காயம் தேவைப்படுகிறது. ஆனால், அந்த ஒரு ஏக்கரில் 12 டன் முதல் 16 டன் சின்ன வெங்காயமே மகசூல் கிடைக்கிறது. அப்போது கிலோ 10 ரூபாய்க்கு வீழ்ச்சி அடைந்தால் விதை வாங்கிய பணத்தை கூட விவசாயிகளால் எடுக்க முடிவதில்லை. விலை அதிகரிக்கும்போது விவசாயிகள், சின்ன வெங்காயத்தை உடனடியாக விற்காமல் 6 மாதம் வரை சேமித்து விதையாகவும், சந்தைகளில் பொதுமக்களுக்கு விற்கவும் கொடுக்கலாம். இந்த சேமிப்பு பட்டறையில் 255 டன் சின்ன வெங்காயம் வரை சேமிக்கலாம்.
300 சதுர அடியில் இந்த சேமிப்பு பட்டறையை அமைக்க ரூ. 1 ½ லட்சம் முதல் ரூ. 2 லட்சம் வரை செலவாகிறது. தோட்டக்கலைத் துறை 87 ஆயிரம் ரூபாய் மானியமாக வழங்குகிறது.
தமிழகத்தில் இந்த திட்டத்தை அரியலூர், பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் சரியாக பயன்படுத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு 200 யூனிட் வெங்காய பட்டறைகளை விவசாயிகள் அமைத்துள்ளனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT