Published : 19 Jan 2014 12:00 AM
Last Updated : 19 Jan 2014 12:00 AM

துணை மின் நிலையங்களில் 25 ஆண்டுகால கருவிகளை மாற்ற வேண்டும்: மத்திய மின்சார ஆணையம் உத்தரவு

தடையில்லா மின்சாரம் வழங்கும் வகையில், அனைத்து துணை மின் நிலையங்களுக்கும் போதுமான ஊழியர்களை நியமித்து, 25 ஆண்டுகால கருவிகளை மாற்ற வேண்டும் என்று, அனைத்து மாநில மின் வாரியங்களுக்கும், மத்திய மின்சார ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும், தடையில்லா மின்சாரம் வழங்குவது குறித்த கொள்கை முடிவுகளையும், வழிமுறைகளையும், மத்திய மின்சார ஆணையம் மேற் கொண்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநில மின்வாரியங்களின் செயல் பாடுகளை, மின்சார ஆணையம் ஒழுங்குமுறைப்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மின் வாரியங்களின் துணை மின் நிலையங்களில் அடிக்கடி பிரச்சி னைகள் ஏற்படுவதால், மின் வினியோகம் தடைபடுவதாக மத்திய மின்சார ஆணையத்திற்கு புகார்கள் வந்தன. இந்நிலையில், துணை மின் நிலையங்களின் செயல்பாடுகளை கண்காணிக்கும் நிலைக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவினர் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை, அடிக்கடி பழுதான துணை மின் நிலையங்களின் பட்டியலை எடுத்து, அவற்றின் பழுது மற்றும் அதற்கான காரணங்கள் குறித்து ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வில், பெரும்பாலான துணை மின் நிலையங்களில் பராமரிப்பு மற்றும் இயக்கப்பணிக்கு தொழில்நுட்ப ஊழியர்கள் பற்றாக்குறை இருப்பதும், இதனால் அவை சரியாக பராமரிக்கப்படாததும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து துணை மின் நிலையங்களை பராமரிப்பு குறித்து, பல்வேறு விதிமுறைகள் அடங்கிய சுற்றறிக்கையை மத்திய மின்சார ஆணையம் அனுப்பியுள்ளது. அதில், மத்திய மின்சார ஆணைய நிலைக்குழுத் தலைவர் டாக்டர் பிரபாத் மோகன், எம்.எஸ்.சதீஜா ஆகியோர் கூறியிருப்பதாவது:

மின்சார தொழில்நுட்பக் கருவிகளுக்கான தர விதிமுறை களின்படி, அனைத்து துணை மின் நிலையங்களும் உரிய கருவிகளைப் பயன்படுத்தி, முறையாக கண்காணிக்கப்பட வேண்டும். அனைத்து துணை மின் நிலையங்களும், முறையாக பராமரிக்கப்பட வேண்டும். போதுமான தொழில்நுட்ப ஊழியர் களை உடனடியாக நியமித்து, உரிய பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்ள வேண்டும். துணை மின்நிலையங்களில் அடிக்கடி பழுதாகும், 25 ஆண்டுகளுக்கு அதிகமான தொழில்நுட்பக் கருவிகளை உடனடியாக மாற்ற வேண்டும்.

தொழில்நுட்பக் கருவிகளை வாங்கும் போது, மத்திய மின்சார தொழில்நுட்ப ஆய்வு நிறுவனத்தின் மூலம் உரிய பரிசோதனை செய்து, தரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x