Published : 18 Dec 2013 10:00 AM
Last Updated : 18 Dec 2013 10:00 AM
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத கூட்டணியை அமைத்தாலும், திமுக கூட்டணியில் சேர மாட்டோம் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். கூட்டணி குறித்து, கட்சியின் உயர்நிலைக் குழு முடிவு செய்யும் என, இந்திய கம்யூனிஸ்ட், மனிதநேய மக்கள் கட்சி மற்றும் புதிய தமிழகம் அறிவித்துள்ளன.
காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அணியில் மற்ற தோழமைக் கட்சிகளுடன் சேர்ந்து, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம் என்று திமுக தலைவர் கருணாநிதி செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
இந்நிலையில், திமுகவுடன் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா என்பது குறித்து, ’தி இந்து’ வுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் அளித்த பேட்டி:
ஜி.ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி , மாநில செயலாளர்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்தக் காரணம் கொண்டும் திமுகவுடன் தேர்தல் உடன்பாடு வைத்துக் கொள்ளாது. காங்கிரஸ் மற்றும் பாஜக அல்லாத அணியை அமைத்தாலும், கடந்த 10 ஆண்டுகளாக நாட்டு மக்களை பாதிக்கும் பல்வேறு நடவடிக்கைகளில், மத்திய அரசில் அங்கம் வகித்த திமுகவுக்கும் பங்கு உண்டு.
இலங்கைப் பிரச்சினையைக் காரணம் காட்டி, கூட்டணியிலிருந்து விலகிய திமுக பின்னர், கனிமொழிக்கு எம்.பி. பதவி பெற, மீண்டும் காங்கிரஸ் ஆதரவை நாடியது. நாடாளுமன்றத்தில் உணவுப் பாதுகாப்பு சட்டம் மற்றும் புதிய பென்ஷன் சட்ட மசோதாவுக்கு திமுக ஆதரவளித்துள்ளது.
சுதந்திர இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு, ரூ.1.76 லட்சம் கோடி அலைக்கற்றை ஊழல், ரூ.1.86 ஆயிரம் கோடி நிலக்கரி ஊழல் என, பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. மக்களை பாதிக்கும் தாராளமயக் கொள்கைக்கும், மிகப்பெரிய ஊழல் குற்றச்சாட்டுகளிலும் திமுகவுக்கு பங்கு உள்ளது. எனவே, திமுகவுடன் உடன்பாடு கொள்ள முடியாது.
மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை அதிமுக எதிர்ப்பதால், அவர்களுடன் சேர்ந்து, நாடு தழுவிய அளவில் மதச்சார்பற்ற கட்சிகளை இணைக்க முயற்சித்து வருகிறோம்.
தா.பாண்டியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர்: கடந்த 2009ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போதே காங்கிரசுடன் உறவு இல்லை என்ற முடிவை, திமுக எடுக்காதது ஏன்? திமுகவின் தற்போதைய முடிவு குடும்ப நலனுக்கான முடிவு. நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து, கட்சியின் மத்தியக் குழு, மத்தியத் தலைமை முடிவு செய்யும்.
எம்.ஹெச்.ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., மனிதநேய மக்கள் கட்சி: மதவாத பாஜகவுடன் கூட்டணி இல்லை என்ற திமுகவின் முடிவை வரவேற்கிறோம்.
கூட்டணி குறித்து, கட்சியின் உயர்நிலைக் குழு கூடி, உரிய நேரத்தில் முடிவெடுக்கும்.
டாக்டர் கே.கிருஷ்ணசாமி, எம்.எல்.ஏ., புதிய தமிழகம்: திமுகவின் இந்த நிலைப்பாடு, நிலையானதா என்பது தெரியவில்லை. தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் உள்ளன. எந்த மாநிலக் கட்சியும், தேசியக் கட்சியும் கூட்டணி குறித்து உறுதியான நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. பாஜக தலைமையில் புதிய அணி உருவாகும் என்று தமிழருவி மணியன் சொல்கிறார். ஆனால் கூட்டணி பேச்சை இதுவரை துவங்கவில்லை என்று, பாஜக நிர்வாகிகள் கூறியுள்ளனர்.
கூட்டணிக்கு பாஜகவை அழைப்பது என்று முடிவு செய்யவில்லை என்று திமுக தலைவர் கூறுகிறார். அப்படியென்றால் பாஜக அழைத்தால் என்ன செய்வார்கள் என்ற கேள்வி உள்ளது.
எனவே, இது மிக, மிக ஆரம்ப நிலை என்பதால், போகப் போக கட்சிகளின் முடிவுகள் மாற வாய்ப்புள்ளது. எனவே, கூட்டணி குறித்து சரியான நேரத்தில் முடிவெடுப்போம். இவ்வாறு கூறியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT