Published : 14 Jan 2017 01:38 PM
Last Updated : 14 Jan 2017 01:38 PM

25 வகை மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு: மதுரை அரசு மருத்துவமனையில் நோயாளிகள் தவிப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 வகை மருந்துகள் அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுவதால் நோயாளிகள் தவிக்கிறார்கள்.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவ க்கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு தேவையான, மருந்து, மாத்திரைகளை, தமிழ்நாடு மருந்துவ சேவைக் கழகம் மொத்தமாக கொள்முதல் செய்து அனுப்பி வைக்கிறது. இந்த சேவை கழகம் ஆண்டுக்கு ரூ.300 கோடி முதல் ரூ.400 கோடி மதிப்புள்ள 700 வகை மருந்துகளை கொள்முதல் செய்கிறது.

அதுபோல், சிறப்பு சிகிச்சை பிரிவுகளுக்கு தேவையான, மருத்துவ சேவை கழக பட்டியலில் இல்லாத மருந்துகளை, மருத்துவமனை நிர்வாகம் தனியாகக் கொள்முதல் செய்கிறது. மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆண்டு தோறும், இந்த மருந்துகள் மற்றும் அன்றாடம் தேவைப்படும் அறுவை சிகிச்சை பொருட்கள், கருவிகளை மருத்துவ சேவை கழகம் கொள்முதல் செய்து அனுப்பி வைக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக, இந்த மருந்துகள் விநியோகம் சீராக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனால், மருத்துவமனையில் நோயாளிகள் தட்டுப்பாடுள்ள மருந்துகளை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை மருந்தாளுநர்கள் கூறியதாவது: மருத்துவ சேவைக் கழகத்தில் மருந்துகளை கொள்முதல் செய்யும் குழுவில், எந்ததெந்த மருந்துகள் தேவை என்பதை உறுதி செய்யும் மருத்துவர், மருந்தாளுநர்கள் இடம் பெறவில்லை. மருந்தியல் பற்றி அறியாதவர்கள், இந்த குழுவில் இடம்பெற்றுள்ளதால் அவர்களால் தேவையான மருந்துகளை திட்டமிட்டு தட்டுப்பாடில்லாமல் கொள்முதல் செய்து அனுப்ப முடி யவில்லை. இந்த குளறுபடியாமல் மருத்துவமனைகளுக்கு சீராக மருந்துகள் விநியோகம் இல்லை.

தற்போது நோயாளிகளுக்கு அன்றாடம் தேவைப் படக்கூடிய ரத்த அழுத்த மாத்திரைகள், சர்க்கரை நோய் மருந்துகள், தூக்க மருந்துகள், மனநோய் பிரிவு மருந்துகள் உள்ளிட்ட 25 வகை மருந்துகளுக்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுகிறது.

சீரான விநியோகம் இல்லாததால் இந்த மருந்துகளை சீராக வழங்க முடியவில்லை. அடிக்கடி வருகிறது, திடீரென்று நிற்கிறது. சர்க்கரை நோயாளிகள், பிரஷர் நோயாளிகள் இந்த மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் உடல்நலன் பாதிக்கப்படும். அதனால், எந்த நோக்கத்திற்காக இந்த மருந்துகளை மருத்துவர்கள் எழுதிக் கொடுக்கிறார்களோ அந்த நோக்கம் நிறைவடையாமல் நோயாளிகள் உடல் நலம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. மருந்து கொள்முதல் செய்யும் குழுவில் மருத்துவர்கள், மருந்தாளுநர்கள் இடம்பெறும்பட்சத்தில் மருந்துகள் போதுமான அளவு தட்டுப்பாடில்லாமல் மருத்துவமனைகளுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்து ராஜூவிடம் கேட்டபோது அவர் கூறுகையில்,

தற்போது டெண்டர் விடப்பட்டு மருத்துவ சேவைக்கழகம் மருத்துவ மனைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்துள்ளது.

அந்த மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடில்லாமல் மருத்துவமனைகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. இனி எந்த பிரச்சினையும் இல்லாமல் மருந்துகள் நோயாளிகளுக்கு வழங்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x