Published : 08 Mar 2017 10:15 AM
Last Updated : 08 Mar 2017 10:15 AM
வறட்சி காரணமாக தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக்கப்படும் என்ற அரசு அறிவிப்பின் பலன் முழுமையடைய, சுழற்சி முறையை கைவிட்டு தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும் என விவசாய தொழிலாளர்கள் கோரிக்கை விடுத் துள்ளனர்.
தமிழ்நாட்டில் 31 கிராமப்புற மாவட்டங்களில் உள்ள 12,524 கிராம ஊராட்சிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப் புத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், பருவ மழை பொய்த்துப்போனதால் தமிழக அரசு 32 மாவட்டங்களையும் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து, நடப்பு நிதியாண்டில் ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் நிர்ணயிக்கப்பட்ட 100 நாட் களுக்கு கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு வழங்க சட்ட விதிகளின்படி மத்திய அரசு அனுமதி அளித்தது.
இதையடுத்து, கடந்த பிப்ரவரி 10-ம் தேதி தமிழக அரசு இது தொடர்பாக அரசாணையை வெளி யிட்டது. ஆனால், 100 நாள் வேலை திட்டத்தின்கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக இதுவரை 60 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள் ளது. மேலும், வரும் மார்ச் 31-ம் தேதியோடு நடப்பு நிதியாண்டு நிறைவடைகிறது.
இதற்கு இடைப்பட்ட காலத் தில் 50 நாட்கள் வேலை வாய்ப்பு அளிக்க இயலாது. அவ் வாறு, அளிக்க வேண்டுமெனில் தொழிலாளர்களுக்குத் தொடர்ச்சி யாக வேலை அளிக்க வேண்டும் எனவும், இல்லையேல், 90 சதவீத தொழிலாளர்களுக்கு இந்த அறிவிப் பால் எந்த பலனும் கிடைக்காது என்றும் விவசாய தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் (பொறுப்பு) வி.அமிர்தலிங்கம் கூறியதாவது: கூடுதலாக 50 நாட் கள் வேலை என்ற அறிவிப்பு வரும் மார்ச் 31-ம் தேதி வரையுள்ள நடப்பு நிதியாண்டுக்குத்தான் பொருந் தும். நடப்பு நிதியாண்டின் இறுதி மாதமான மார்ச் மாதத்தில் இன்னும் 23 நாட்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. அதிலும் 3 ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை நடக்காது.
எனவே, குடும்பத்தில் ஒருவ ருக்கு தொடர்ந்து வேலை அளித் தால் கூட இன்னும் 20 நாட்கள்தான் வேலை அளிக்க முடியும். குடும் பத்தில் இருவருக்கு வேலை அளித் தால் 40 நாட்கள் வரும். ஆக மொத்தம் சராசரியாக 100 நாட் களுக்கு மேல் வேலை கிடைக்காது. பெரும்பாலான குடும்பங்களில் ஒரு நபர் மட்டுமே வேலைக்கு செல்கின்றனர். அதிலும் சுழற்சி அடிப்படையில் வேலைவாய்ப்பு அளிக்கும்போது மிகக் குறைவான நாட்களே வேலை கிடைக்கும்.
எனவே, அதிக தொழிலாளர்கள் பயன்பெற வேண்டுமெனில் வார்டு வாரியாக சுழற்சி அடிப்படையில் வேலை அளிக்கும் முறையை கைவிட்டு, ஊராட்சியில் உள்ள அனைவருக்கும் தொடர்ச்சியாக வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும். இல்லையெனில், கூடுதலாக 50 நாட்கள் வேலைவாய்ப்பு அளிக் கப்படும் என்ற அறிவிப்பின் மூலம் 5 முதல் 10 சதவீதம் பேர் மட்டுமே பயனடைவர். பெரும்பாலானோ ருக்கு வாய்ப்பு கிடைக்காமல்போவ தோடு, கண்துடைப்பாகவே இந்த அறிவிப்பு முடியும்.
ரூ.750 கோடி சம்பள நிலுவை
மேலும், கடந்த 6 மாதங்களாக தமிழகத்தில் ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் பணி யாற்றியவர்களுக்கு சுமார் ரூ.750 கோடி அளவுக்கு சம்பள பாக்கியை மத்திய அரசு நிலுவையில் வைத் துள்ளது. அதனைக் கேட்டுப் பெறவும் தமிழக அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT