Last Updated : 16 Jun, 2017 12:52 PM

 

Published : 16 Jun 2017 12:52 PM
Last Updated : 16 Jun 2017 12:52 PM

மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் தீர்மானம்

மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கடந்த மே 23-ம் தேதி பசு, காளை, எருமை மாடுகள், ஒட்டகங்கள் ஆகியவற்றை இறைச்சிக்காக சந்தைகளில் வாங்கவோ விற்கவோ கூடாது என்று புதிய உத்தரவை மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் பிறப்பித்தது.

இதற்கு புதுச்சேரி அரசு ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்நிலையில், மத்திய அரசின் மாட்டிறைச்சி தடை சட்டத்துக்கு எதிராக புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இன்று சட்டப்பேரவையில் மாநில அரசு சார்பில் தீர்மானத்தைக் கொண்டு வந்து முதல்வர் நாராயணசாமி பேசும்போது, "மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்டுள்ள விலங்குகள் வதை தடுப்பு - கால்நடை விற்பனை விதிமுறைகள் சட்டம் கால்நடை வளர்ப்போரின் உரிமைகளைப் பறிப்பதாக உள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு எதிராகவும் உள்ளது. நாட்டு மக்கள் உண்ணும் உணவையும் கடைபிடிக்கும் மதத்தையும் அவரவர் தீர்மானித்துக் கொள்ள தனிமனித சுதந்திரம் உள்ளது.

மத்திய அரசு தனி மனித சுதந்திரத்தில் தலையிட்டு மாட்டிறைச்சி, ஒட்டக இறைச்சி, எருமை இறைச்சி உண்ணக்கூடாது என்று சட்டம் போடுவதை ஏற்க முடியாது.

புதுச்சேரி பிரெஞ்சு கலாச்சாரத்தோடு பின்னிப் பிணைந்தது. அனைத்து தரப்பு மக்களும் கலந்துள்ளனர். மத்திய அரசின் தடை அரசாணைக்கு அனைத்து தரப்பும் எதிர்ப்பு தெரிவித்துள்னர். எனவே கால்நடை விற்பனை விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும்" எனத் தெரிவித்தார்.

இத்தீர்மானத்தை அனைத்து உறுப்பினர்களும் ஏற்றனர்.

அதைத்தொடர்ந்து சபாநாயகர் வைத்திலிங்கம் கூறுகையில், "மத்திய அரசின் விலங்குகள் வதை தடுப்பு, கால்நடை விற்பனை விதிமுறைளை திரும்பப் பெற வேண்டும் என்ற தீர்மானம் அனைத்து தரப்பினரின் ஆதரவோடும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x