Published : 08 Jan 2014 12:00 AM
Last Updated : 08 Jan 2014 12:00 AM
சென்னையில் தேர்தல் விளம்பரம் எழுதுவது தொடர்பாக அதிமுக, திமுக கட்சியினரிடையே மோதல் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து இருதரப்பு விளம்பரங்களையும் மாநகராட்சி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை அழித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை பெரம்பூர் ரயில் மேம்பால சுரங்கப்பாதையின் சுவரில் அரசியல் கட்சிகள், தங்களது விளம்பரங்களை எழுதுவது வழக்கம். அந்த இடத்தை பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்வதால், அந்த இடத்தைப் பிடிக்க அரசியல் கட்சிகளிடையே எப்போதும் பெரும் போட்டா போட்டி நிலவும்.
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, அப்பகுதியில் தேர்தல் விளம்பரங்களை எழுதுவதற்கு திமுக தரப்பினர் முயன்றனர். அங்கு எழுதப்பட்டிருந்த அதிமுக தரப்பு விளம்பரத்தை அவர்கள் அழித்துவிட்டு, திமுக மாநாடு தொடர்பான விளம்பரங்களை எழுதியதாகக் கூறப்படுகிறது.
இது பற்றிய தகவல் கிடைத்ததும், அப்பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் சிலர் சனிக்கிழமை சென்று தங்களது சுவர் விளம்பரத்தை அழிக்கக் கூடாது என்று திமுக தரப்பினரிடம் தகராறு செய்தனர். பின்னர், அந்த இடத்தில் அதிமுக-வினர் மீண்டும் விளம்பரம் வரைய முயற்சி மேற்கொண்டனராம். போலீசார், இருதரப்பினரையும் சமாதானம் செய்து, அனுப்பி வைத்தனர். அது ரயில்வேக்குச் சொந்தமான சுவர், மாநகராட்சிக்குச் சொந்தமானதல்ல என்றும் கட்சியினர் அப்போது வாதிட்டனர்.
இந்நிலையில், பெரம்பூர் மேம்பாலத்தின் கீழ் எழுதப்பட்டிருந்த விளம்பரங்களை சிலர் அழிக்க முயல்வதாகக் தகவல் கிடைத்து திங்கள்கிழமை இரவு அப்பகுதிக்கு திமுகவினர் வந்தனர். அதன் பின்னர், பணி நிறுத்தப்பட்டது. இருப்பினும், செவ்வாய்க்கிழமை காலை சுவர் விளம்பரம் அழிக்கப்பட்டது.
போலீஸ் விளக்கம்
“நடைபாதைகளில் சுவர் விளம்பரம் வரையக்கூடாது. அதை மீறி விளம்பரங்கள் எழுதப்பட்டதால், மாநகராட்சியினர் அந்த விளம்பரங்களை அழிக்கத் தொடங்கினர். இதையறிந்து அங்கு வந்த அரசியல் கட்சியினர் தகராறு செய்தனர். அவர்களிடம் விளம்பரத்தை அழிப்பதற்கான காரணத்தை விளக்கிக் கூறினோம்” என்று போலீசார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT