Published : 16 Aug 2016 10:47 AM
Last Updated : 16 Aug 2016 10:47 AM

ஆற்று நீரை மோட்டார் மூலம் ஏரியில் நிறைத்த விவசாயிகள்: 350 ஏக்கரில் முப்போக விளைச்சலால் மகிழ்ச்சி

ஆற்று நீரை மோட்டார் மூலம் ஏரியில் நிறைத்த விவசாயிகளின் முயற்சியால் தருமபுரி மாவட்டத்தில் 350 ஏக்கர் பரப்பளவு முப்போக விளை நிலமாக மாறி உள்ளது.

தருமபுரி மாவட்டம் பி.துரிஞ்சிப்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பொய்கரை எனப்படும் கிருஷ்ணசெட்டி ஏரி உள்ளது. சேர்வராயன் மலைத்தொடரின் ஒரு சரிவில் பெய்யும் மழை நீர் அஜ்ஜம்பட்டி பகுதியில் உள்ள ஏரியில் முதலில் சேகரமாகி, பின்னர் அடுத்தடுத்து உள்ள 2 ஏரிகளை நிறைத்துக்கொண்டு 9.5 ஏக்கர் பரப்பளவில் உள்ள கிருஷ்ணசெட்டி ஏரிக்கு வந்து சேரும். இந்த ஏரி நிறைந்துவிட்டால் உபரி நீர் வேப்பாடியாறுக்கு சென்றுவிடும். ஆனால், அஜ்ஜம்பட்டி ஏரிக்கு தண்ணீர் வரும் பாதை முழுவதும் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட சிக்கலில் சிக்கியதால் 4 ஏரிகளும் சுமார் 15 ஆண்டுகளுக்கும் மேலாக வறண்டு கிடந்தன.

மழைக் காலங்களில் இந்த ஏரிகளுக்கு வரும் நீர், பாதை இல்லாத காரணத்தால் வேப்பாடி யாற்றில் கலந்து வந்தது. ஏரிகளுக்கான நீர்வழித்தட ஆக்கிரமிப்பை அகற்றக் கோரிய முயற்சிக்கு உடனடி பலன் கிடைக்கவில்லை.

எனவே பி.துரிஞ்சிப்பட்டி பகுதி விவசாயிகள் 42 பேர் இணைந்து புதிய முயற்சி ஒன்றுக்கு திட்டமிட்டனர். கனமழை காலங்களில் வேப்பாடியாற்றில் செல்லும் நீரை தங்கள் ஊர் ஏரிக்கு மோட்டார் மூலம் கொண்டுசெல்ல அரசிடம் அனுமதி பெற்றனர். இதற்கென, வேலுசாமி என்பவரை தலைவராகக் கொண்டு 'விடியல் நீரேற்று பாசனம் மற்றும் நிலத்தடி நீர்வள பராமரிப்பு சங்கம்' என்ற அமைப்பை உருவாக்கினர். இந்த சங்கம் மூலம் ரூ.90 லட்சம் செலவழித்து மோட்டார் மூலம் கிருஷ்ணசெட்டி ஏரியை நீரால் நிறைக்கும் திட்டத்தில் வெற்றி கண்டுள்ளனர்.

இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராக இருந்து திட்டம் நிறைவேற அச்சாணியாக செயல்பட்டவர் கூட்டுறவுத் துறையில் பணியாற்றும் விவசாயி தமிழ்வாணன். அவர் 'தி இந்து'விடம் கூறியது:

எங்கள் பகுதி விவசாயிகள் நிலம் இருந்தும் நீர் வளம் இல்லாமல் தவித்தோம். இந்நிலையில் ஆற்று நீர் மூலம் ஏரியை நிறைக்கும் திட்டத்தை நிறைவேற்ற சில ஆண்டுகளாக திட்டமிட்டோம். 42 விவசாயிகள் ஆதரவளித்ததால் வங்கிக் கடன், தனியார் கடன் ஆகியவற்றை பெற்று பணியை தொடங்கினோம்.

வேப்பாடியாற்றை ஒட்டி செம்பியானூர் என்ற இடத்தில் ஊராட்சிக்கு சொந்தமான, பயன்பாடற்ற பழைய கிணறு ஒன்று இருந்தது. ஆற்றில் பெருவெள்ளம் செல்லும்போது அந்தக் கிணற்றில் வடிநீர் தேங்கும். அந்த நீரை, நிலத்தடி குழாய் மூலம் மோட்டார் உதவியுடன் ஏரிக்கு எடுத்துச் செல்லவும் ஊராட்சியில் அனுமதி பெற்றோம். 1.5 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மேடான பகுதி வரை மோட்டார் உதவியுடன் தண்ணீரை கொண்டு சென்றோம். பின்னர் அங்கு இருந்து தரைவழி கால்வாய் மூலம் அரை கிலோ மீட்டர் தூரம் பயணித்து தண்ணீர் ஏரியை அடைகிறது. முதன்முறையாக 2015-ம் ஆண்டு கனமழை நேரத்தில் 5 நாட்களில் ஏரியை நிறைத்தோம். தற்போது ஜூலை இறுதியில் பெய்த எதிர்பாராத மழையால் ஆற்றில் பெருவெள்ளம் திரண்டதால் மீண்டும் ஏரியை நிறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

கிருஷ்ணசெட்டி ஏரியை ஒட்டி 80-க்கும் மேற்பட்ட விவசாயிகளின் சுமார் 350 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த பரப்பளவு நீர்வளமின்றி ஒரு போகம் விளைநிலமாக மாறிப்போனது. இந்நிலையில் கடும் முயற்சி மேற்கொண்டு அந்த நிலங்களை முப்போக விளைநிலங்களாக மீட்டுள்ளோம். இந்த திட்டம் மூலம் நிலம் வளம் பெற்றிருப்பதில் எங்கள் பகுதி விவசாயிகளுக்கு மகிழ்ச்சி.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x