Published : 19 Oct 2014 10:27 AM
Last Updated : 19 Oct 2014 10:27 AM

118 பஸ் நிறுத்தங்களில் துருப்பிடிக்காத நிழற்குடைகள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் சுமார் 1800 பஸ் நிறுத்தங்கள் உள்ளன. இதில் 500 பஸ் நிறுத்தங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாநகர போக்குவரத்துக் கழக அனுமதியின் பேரில் தனியார் விளம்பர நிறுவனங்கள் நவீன நிழற்குடைகளை அமைத்துவந்தன. அதில் தங்களது விளம்பரங்களை வெளியிட்டு, கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட தொகையை மாநகர போக்குவரத்து கழகத் துக்கு கொடுத்துவந்தன.

இந்நிலையில், மாநகர போக்குவரத்து கழக நிர்வாகத்துக்கும், விளம்பர ஏஜென்சிகளுக்கும் இடையே கடந்த சில ஆண்டுக ளுக்கு முன்பு பிரச்சினை ஏற்பட்டது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

மீதமுள்ள இடங்களில் தலா ரூ.10 லட்சம் செலவில் நவீன நிழற்குடைகளை அமைக்க மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டது. அதன் அடிப்படையில் முதலில் 65 இடங்களில் தனியார் பங்களிப்புடன் நவீன நிழற்குடைகள் அமைக்கப்பட்டன. இதன்படி ஒவ்வொரு இடத்திலும் ஒப்பந்தப்புள்ளிக்கு ஏற்ப மாதம் தலா ரூ.15 ஆயிரம் வரை மாநகராட்சிக்கு வருவாய் கிடைக்கிறது. இந்த வகையில் 65 நவீன நிழற்குடைகள் மூலம் மாநகராட்சிக்கு ஆண்டொன்றுக்கு ரூ.1.5 கோடி வருவாய் கிடைத்து வருகிறது.

இதற்கிடையில் கடந்த 2011-ல் மாநகராட்சி கட்டுப்பாட்டிலும், மாநகர போக்குவரத்துக் கழக கட்டுப்பாட்டிலும் இல்லாமல், தனி நபர்களால் நிழற்குடைகள் அமைக்கப்பட்டு, அதன் விளம்பர வருவாய் தனி நபர்களுக்கு சென்றது. இது கண்டுபிடிக்கப்பட்டு, அவை அகற்றப்பட்டன. இதனால் அப்பகுதியில் உள்ள பயணிகள் நிழற்குடைகள் இல்லாமல் அவதிப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து 224 பஸ் நிறுத்தங்கள் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சி சொந்த நிதியில் அங்கு நவீன நிழற்குடைகளை நிறுவும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் 108 இடங்களில் நிழற்குடைகளை நிறுவும் பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள 118 இடங்களில் நிழற்குடைகள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் உள்ள 1800 பஸ் நிறுத்தங்களில், மாநகராட்சி கணக்குப்படி 173 இடங்களில் மட்டுமே நிழற்குடைகள் நிறுவப்பட்டுள்ளன. மீதம் உள்ள 1627 பஸ் நிறுத்தங்களில் நிழற்குடைகள் இல்லை என்பது தெரியவருகிறது. இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது: ஏற்கெனவே மாநகராட்சி சார்பில் தனியார் பங்களிப்புடன் 65 நிழற்குடைகளும், மாநகராட்சியின் சொந்த பணத்தில் 108 நவீன நிழற்குடைகளும் நிறுவப்பட்டுள்ளன. 118 நவீன நிழற்குடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மாநகர போக்குவரத்து கழகம் மற்றும் தனியார் விளம்பர நிறுவனம் இடையே உள்ள நீதிமன்ற வழக்கு விவகாரத்தால் குறிப்பிட்ட 500 பஸ் நிறுத்தங்களில் எங்களால் நிழற்குடைகளை அமைக்க முடியாது. மாநகராட்சி சார்பில் மேலும் 202 இடங்களில் நவீன பஸ் நிறுத்தங்களை அமைக்க திட்டமிட்டிருக்கிறோம். இதுமட்டுமல்லாது அந்தந்த மண்டலங்களில் எம்எல்ஏ, எம்பி தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாகவும் நவீன நிழற்குடைகள் அமைப்பதற்கான வேலைகள் நடந்து வருகின்றன என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x