Published : 28 Apr 2014 03:20 PM
Last Updated : 28 Apr 2014 03:20 PM

தமிழகத்தில் மீண்டும் மின்வெட்டு: ஜெயலலிதா மீது ராமதாஸ் குற்றச்சாட்டு

தமிழகத்தில் மின்வெட்டு பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், முந்தைய ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறிக் கொண்டு, முதல்வர் ஜெயலலிதா கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருப்பதாக, பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், கடந்த சில நாட்களாக செயற்கையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மின் வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கிறது. அனைத்து மாவட்டங்களிலும் தினமும் 6 முதல் 8 மணி நேரம் வரை அறிவிக்கப்படாத மின் வெட்டு செயல்படுத்தப்படுகிறது.

மின்வெட்டிலிருந்து தற்காலிகமாக விலக்களிக்கப்பட்டிருந்த சென்னை நகரிலும் கடந்த இரு நாட்களாக 3 மணி நேரம் வரை மின்சாரம் நிறுத்தப்படுவதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.

ஒளிமயமான எதிர்காலத்தை வழங்குவதாகக் கூறி 2011 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா, அடுத்த 3 மாதங்களில் மின்வெட்டு சரி செய்யப்படும் என உறுதி அளித்தார். அதன்பின் 3 மாதங்களுக்கு ஒருமுறை வீதம் இதுவரை 11 முறை மின்வெட்டு விரைவில் சரி செய்யப்பட்டுவிடும் என கூறி வந்தார். ஆனால், ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளாகிவிட்ட நிலையில், அவர் அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் எழுதிய எழுத்துக்களாக கலைந்து போக, மின்வெட்டு மட்டும் நிரந்தரமாக நீடிக்கிறது.

தமிழ்நாட்டில் 110 டிகிரி கோடை வெயில் சுட்டெரிக்கும் வேளையில் மீண்டும் மின்வெட்டு நடைமுறைப் படுத்தப்பட்டிருப்பதால் மக்கள் புழுக்கத்தில் வெந்து கொண்டிருக்கின்றனர். அதுமட்டுமின்றி, விசைத்தறியில் தொடங்கி பெரும் தொழிற்சாலைகள் வரை அனைத்து மட்டங்களிலும் கடுமையான உற்பத்தி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கானோர் வேலை இழந்து தவிக்கின்றனர்.

ஆனால், ஜெயலலிதா மின்வெட்டை தீர்ப்பதற்கு ஆக்கபூர்வமான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், முந்தைய ஆட்சியையும், மத்திய அரசையும் குறை கூறிக் கொண்டு கொடநாட்டில் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறார்.

மின்வெட்டை போக்குவதற்கான யோசனைகளை பட்டியலிட்டு கடந்த 3 ஆண்டுகளில் 20க்கும் மேற்பட்ட அறிக்கைகளை வெளியிட்டுள்ளேன்; பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறேன். ஆனால், மக்கள் நலனில் அக்கறை இல்லாத அ.தி.மு.க. அரசு இவற்றில் எந்த யோசனையையும் செயல்படுத்தவில்லை.

திட்டமிட்டு செயல்படுத்தினால் எந்த ஒரு மின்திட்டத்தையும் 30 மாதங்களில் நிறைவேற்ற முடியும். அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது 12,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான மின் திட்டங்கள் தயாரிக்கப்பட்டிருந்தன. அவற்றை அரசு முழுவீச்சில் செயல்படுத்தியிருந்தால் தமிழகம் இன்று உண்மையாகவே மின்மிகை மாநிலமாகியிருக்கும். ஆனால், கடந்த 3 ஆண்டுகளாக ஒரே ஒரு மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கான கட்டுமான பணிகள் கூட தொடங்கப்படவில்லை.

எண்ணூரில் 660 மெகாவாட் மின்திட்டத்திற்கான ஒப்பந்தப் புள்ளிகள் பெறப்பட்டு, ஓராண்டுக்கு பிறகு தான் ஒப்பந்தம் வழங்கப்பட்டிருக்கிறது. 2640 மெகாவாட் திறன்கொண்ட மேலும் இரு திட்டங்களுக்கான ஒப்பந்தப்புள்ளிகள் பெறப்பட்டு 9 மாதங்களாகியும் இதுவரை ஒப்பந்தம் வழங்கப்படவில்லை. இதனால், அடுத்த 3 ஆண்டுகளில் கூடுதலாக ஒரு மெகாவாட் மின்சாரம் கூட உற்பத்தி செய்ய முடியாது என்பது தான் உண்மை நிலை. ஆனால், முதல்வரோ 99% மின்வெட்டு சரி செய்யப்பட்டு விட்டதாகவும், விரைவில் தமிழகம் மின்மிகை மாநிலமாகும் என்றும் கூறி ஏமாற்றி வருகிறார்.

இவையெல்லாம் மக்களவைத் தேர்தலில் வாக்குகளைப் பெற திட்டமிட்டு நடத்தப்பட்ட நாடகங்கள் என்பதை வாக்குப்பதிவு முடிந்ததற்கு அடுத்த நாளே மின்வெட்டு மீண்டும் நடைமுறைப்படுத்தப் பட்டதிலிருந்தே மக்கள் புரிந்து கொண்டிருப்பர்.

மின்வெட்டைப் போக்க எந்த நடவடிக்கையும் எடுக்காத ஜெயலலிதா, 2 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக மின்கட்டணத்தை உயர்த்த ஆயத்தமாகிவிட்டார். தமிழ்நாடு மின் வாரியத்தின் இழப்பு ரூ.75,000 கோடியாக அதிகரித்து விட்டது தான் இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த போது மின்வாரியத்தின் இழப்பு ரூ.40,375 கோடியாக இருந்தது. இதை ஈடுகட்டுவதற்காகத் தான் ரூ.7874 கோடிக்கு மின்கட்டண உயர்வை ஜெயலலிதா அறிவித்தார். இதற்குப் பிறகும் 3 ஆண்டுகளில் மின்வாரியத்தின் இழப்பு இப்போது ரூ.75,000 கோடியாக உயர்ந்திருக்கிறது என்றால் ஜெயலலிதா ஆட்சியின் நிர்வாகத்திறன் எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும்.

தமிழகத்திற்குத் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்யத் தவறியது, தட்டுப்பாட்டைப் போக்க தனியாரிடமிருந்து அதிக விலையில் மின்சாரத்தை வாங்குவது, மின்சாரக் கொள்முதலில் ஊழல் தலைவிரித்தாடுவது ஆகியவையே மின்வாரியத்தின் இழப்பு அதிகரித்ததற்கு காரணமாகும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாத ஜெயலலிதா, மின்பற்றாக்குறைக்குத் தீர்வு மின்வெட்டு, இழப்பை ஈடுசெய்ய கட்டண உயர்வு என்ற எண்ணத்தில் செயல்படுகிறார்.

அதிலும், தேர்தலில் மக்களின் வாக்குகளைப் பெறும் வரை காத்திருந்துவிட்டு, தேர்தலுக்குப் பிறகு இவற்றை செய்ய முயலுவதன் மூலம் ஜெயலலிதா அவரது உண்மை முகத்தை காட்டி விட்டார். இவ்வாறு செய்வதை தமிழக மக்கள் ஒரு போதும் ஏற்க மாட்டார்கள்.

எனவே, மின் கட்டணத்தை உயர்த்தும் திட்டத்தை கைவிட்டு, மின்வெட்டை போக்குவதற்கான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும். மாறாக மக்களிடம் வாக்குகளை பெற்றாகிவிட்டது என்ற எண்ணத்தில் அவர் செயல்பட்டால், அவருக்கு மக்கள் சரியான பதிலடி தரத் தயங்க மாட்டார்கள்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x