Published : 23 Feb 2014 12:00 AM
Last Updated : 23 Feb 2014 12:00 AM
தனியார் தொழிற்கல்வி கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப புதிய நடைமுறை கொண்டுவருவது குறித்து நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி மார்ச் 20-ம் தேதி முடிவு செய்கிறது.
தமிழகத்தில் 500-க்கும் மேற்பட்ட தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. இதில் 35 சதவீத பி.இ., பி.டெக். இடங்கள் நிர்வாக ஒதுக்கீடு மூலமாக நிரப்பப்படுகின்றன. சிறுபான்மையினர் கல்லூரிகளாக இருந்தால் 50 சதவீத இடங்கள் இவ்வாறு நிரப்பப்படும்.
நிர்வாக ஒதுக்கீடு போக எஞ்சியுள்ள இடங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் பொது கலந்தாய்வு மூலமாக நிரப்பப்படுகின்றன. இத்தகைய நடைமுறைதான் எம்.இ. எம்.டெக். படிப்புகளுக்கும், சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளுக்கும் பின்பற்றப்படுகிறது.
பாலசுப்பிரமணியன் கமிட்டி
தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தி கண்காணிக்க நீதிபதி என்.வி.பாலசுப்பிரமணியன் கமிட்டி செயல்பட்டு வருகிறது. இந்த கமிட்டி, மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி, வெவ்வேறு பிரிவினருக்கான குறைந்தபட்ச மதிப்பெண், விண்ணப்பம், தேர்வு முறை, மெரிட் பட்டியல் தயாரிப்பது உள்ளிட்ட நடைமுறைகளையும் வழிகாட்டி நெறிமுறைகளையும் வரையறை செய்யும். அதன்படி, தனியார் தொழிற்கல்லூரிகளும், கலை அறிவியல் கல்லூரிகளும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை நிரப்பிக் கொள்ளும்.
புதிய நடைமுறையா?
இந்நிலையில், வரும் 2014-15ம் கல்வி ஆண்டில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான நடைமுறைகள் மற்றும் வழிகாட்டி நெறிமுறைகளை நீதிபதி பாலசுப்பிரமணியன் கமிட்டி மார்ச் 20-ம் தேதி இறுதிசெய்கிறது. அன்று மாலை 4 மணிக்கு சென்னை கிண்டியில் உள்ள கமிட்டியின் அலுவலகத்தில் தனியார் கல்லூரி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT