Published : 03 Mar 2016 05:12 PM
Last Updated : 03 Mar 2016 05:12 PM
அண்ணா அறிவாலயத்தில் மீண்டும் திமுக நேர்காணல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கட்டுக்கு அடங்காத கூட்டம் இடையே கடலை, தண்ணீர் பாட்டில், சால்வை, திமுக கட்சி வேஷ்டி என விற்பனைகள் ஜோராக நடந்து கொண்டிருக்கும். அங்கு வரும் நபர்களுக்கு மிகவும் பிரபலமான நபர் சாரதி. உப்புக்கடலை, பட்டாணி, வேர்க்கடலை என அனைத்து கலந்து விற்கும் ஒரு வியாபாரி தான் சாரதி.
"மதியம்தான் தலைவர் (கருணாநிதி) வீட்டுக்கு கிளம்பும் நேரம். போனவுடன் பேசலாம்" என்று காத்திருந்து கருணாநிதி கிளம்பியவுடன் தன் பேச்சைத் தொடங்கினார் சாரதி.
"40 வருஷமா இங்கு தான் வியாபாரம் பண்ணிட்டு இருக்கேன். வேறு எங்கும் வியாபாரம் செய்ய போகமாட்டேன். வியாபாரம் ஆகுதோ இல்லையோ, மழை அடித்தாலும்.. காற்று அடித்தாலும் அறிவாலயம் எனக்கு தாய் வீடு போன்றது.
தலைவர், தளபதி, கனி அக்கா எல்லாருடைய பொதுக்கூட்டத்துக்குப் போவேன். மற்ற கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு எல்லாம் போக மாட்டேன். 200 - 300 ரூபாய் சம்பாதிப்பேன். வீட்டுக்கு போவேன். எந்த பிரச்சினையும், குறையும் இல்லை. எனக்கு கனி அக்கா நல்ல பழக்கம். நானும் ஒரு பிள்ளைப் போல இங்கேயே இருக்கிறேன்.
இங்கு நிறையப் பேர் வியாபாரம் செய்கிறார்கள். அனைவருமே வைகோ, ராமதாஸ் என பொதுக்கூட்டங்களுக்கு எல்லாம் செல்வார்கள். நமக்கு அறிவாலயம் இதைவிட்டா திமுக பொதுக்கூட்டம் அவ்வளவு தான்" என்றார்.
வீட்டில் என்ன சொல்கிறார்கள் என்று கேட்டதற்கு "சம்பாதிக்கிறேன், வீட்டை நல்லபடியாக பார்த்துக் கொள்கிறேன். அவர்கள் என்னை எதுவும் சொல்ல மாட்டார்கள். ஒரு பையன், ஒரு பெண். பையன் கோயம்புத்தூரில் இருக்கிறான். பொண்ணு வீட்டில் இருக்கிறது. இந்த வருமானம் பத்தலைதான். வேறு என்ன பண்ண முடியும். இந்த உப்புக்கடலை, வேர்கடலை, பட்டாணி வியாபாரம் பண்றது என்னோடு முடிந்துவிடணும்.
எங்க தாத்தா, அப்பா இப்போது தான். நான் தான் கடைசியா இருக்கணும். எல்லாருமே திமுக அலுவலகத்தில் கடலை வியாபாரம் பண்ணியவர்கள் தான். "ஆண்டவனே வந்து சொன்னாலும் என் மனம் மாறாதுடா, சூரியனுக்கு தான் ஓட்டு போடுவேன்" என்று என் அப்பா சொல்வார்.
என்றைக்கு தலைவர் கரம் என் மீது பட்டுதோ, அன்று முதல் நானும் திமுக தான். தலைவர் கருணாநிதியை எல்லாம் சந்தித்து பேசியிருக்கிறேன். என்னய்யா, எப்படியிருக்க என்று கேட்பார் சொல்லியிருக்கிறேன். தலைவருக்கு எல்லாம் கடலைக் கொடுத்திருக்கிறேன்.
எனக்கு ஏதாவது உதவி என்றால் கனி அக்கா (கனிமொழி) உடனே செய்வார்கள். அவர்களுக்கு என் மீது எப்போதுமே ஒரு தனி பாசம் உண்டு. என் பெண்ணைக் கூட அவங்க படிக்கச் சொல்றாங்க, நான் தான் கல்யாணம் பண்ணி அனுப்பிவிடலாம் என்று பேசிக் கொண்டிருக்கிறேன்" என்று தெரிவித்தார்.
அடுத்து எந்த பொதுக்கூட்டத்துக்கு போகப் போகிறீர்கள் என்று கேட்டதற்கு, "திருச்சியில் 6ம் தேதி கனி அக்கா கூட்டம் இருக்கு, அதற்கு போறேன்" என்றார். அரசியல் சீட்டு எல்லாம் என்று கேள்வியை முடிக்கும் முன்பே, "நமக்கு அரசியல் எல்லாம் வேண்டாம், தொழில் தான் முக்கியம்" என்று அடுத்த பொட்டலம் மடிக்கத் தொடங்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT