Last Updated : 22 Jan, 2014 12:00 AM

 

Published : 22 Jan 2014 12:00 AM
Last Updated : 22 Jan 2014 12:00 AM

மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க வீரபாண்டி ராஜா அதிரடி வியூகம்- சேலம் தி.மு.க.வில் கோஷ்டி மோதல் உச்சகட்டம்

சேலம் மாவட்ட தி.மு.க. செயலாளர் பதவியைப் பிடிக்க, மறைந்த முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகனும், திமுக தலைமை செயற்குழு உறுப்பின ருமான வீரபாண்டி ராஜா, கழக நிர்வாகிகளுக்கு ஒரு லட்சம் கடிதம் அனுப்பி ஆதரவு திரட்டி வருகிறார். ஆனால், திமுக பொருளாளர் ஸ்டாலினுடன் நெருக்கமாக உள்ள எதிர்கோஷ்டியினர், இந்த கடிதத்தை பகடைக்காயாகப் பயன்படுத்தி, வீரபாண்டி ராஜாவின் பதவி ஆசைக்கு வேட்டு வைக்கும் விதமாக காய் நகர்த்தி வருகின்றனர்.

வீரபாண்டி ஆறுமுகம் மறை வுக்குப் பிறகு சேலம் மாவட்டச் செயலாளர் பதவி யாருக்கு என்ற கேள்விக்கு விடை கிடைக்காத நிலை ஏற்பட்டது. மாவட்டத் துணைச் செயலாளராக இருந்த எஸ்.ஆர்.சிவலிங்கம், மாவட்டப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.

மாவட்டச் செயலாளர் பதவியை தந்தைக்கு பின் தனக்கே அளிக்க வேண்டும் என்று வீரபாண்டி ராஜா முழு மூச்சாக கழக நிர்வாகிகளை தன்வசப்படுத்தி வைத்துள்ளார். அதேநேரத்தில், மாவட்டப் பொறுப்பாளராகவும், அரசியல் அனுபவமிக்கவராக விளங்கும் எஸ்.ஆர்.சிவலிங்கம் கோஷ்டி சண்டைகளுக்கு அப்பாற்பட்டு, மாவட்டச் செயலாளர் பதவியை தனதாக்கிக் கொள்ளும் முயற்சியில் களம் இறங்கியுள்ளார்.

திமுக தலைவர் கருணாநிதியின் நேரடி தொடர்பில் உள்ள எம்.பி. செல்வகணபதி, சேலம் மாவட்டச் செயலாளர் பதவியை திமுக தலைமை தன்னை அழைத்து பொறுப்பை அளிக்கும் என காத்திருக்கிறார்.

இவரைத் தவிர ஸ்டாலினின் முழு நம்பிக்கையை பெற்றவர் வக்கீல் ராஜேந்திரன். இவரும் செயலாளர் பதவியை பெற்றுவிட துடிக்கிறார். இவ்வாறாக, சேலம் மாவட்ட திமுக செயலாளர் பதவியை பிடிக்க நான்கு கோஷ்டிகளாக பிரிந்து நின்று மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றனர். இவர்கள் நான்கு பேரும், தலைமைக்கு முக்கியமானவர்கள் என்பதால், செயலாளர் பதவியை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்ப தயக்கம் காட்டுகிறது. இதற்காக, ஜனநாயக முறையில் திமுக கட்சியின் அமைப்பு தேர்தலை நடத்த, சில மாதங்களுக்கு முன்பு திமுக.வின் 14வது அமைப்பு தேர்தல் அறிவிக்கப்பட்டது.

முதல்கட்டமாக கிளை கழகத்துக்கான தேர்தல் நடந்தது. இதில் வீரபாண்டி ராஜாவின் கை ஓங்கி ஒலித்ததை அடுத்து, மற்றவர்கள் அமைப்பு தேர்தலைச் சந்தித்து, மாவட்ட செயலாளர் பதவியைப் பிடிப்பது கடினம் என உணர்ந்துவிட்டனர். தலைமையின் நேரடி நியமனத்தால் மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், அமைப்பு தேர்தலில் தமக்கு ஆதரவு கரம் நீட்டவும், மறைந்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் சிலை திறப்பு விழாவுக்கு கழக நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தும் வீரபாண்டி ராஜா தொண்டர்களுக்கு ஒரு லட்சம் கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:

வீரபாண்டியார் மறைவுக்குப் பின், சேலத்தை பொறுத்தவரை எல்லாமே நாங்கள்தான். வீரபாண்டி ராஜா அரசியலுக்கு வரமாட்டார். கல்லூரி நிர்வாகத்தில் மட்டுமே ஈடுபடுவார். எங்களை மீறி எதுவும் நடக்காது என விஷமப் பிரச்சாரம் செய்தார்கள். கட்சி தேர்தல் என்பதெல்லாம் வெறும் கண் துடைப்பு என கழக ஜனநாயகத்தை கேலி செய்திட முனைந்தனர். விழிப்புடன் செயல்பட்டால், நமது இலக்கை அடைந்துவிடலாம். வீரபாண்டி ஆறுமுகம் சிலை திறப்பு விழாவுக்கு அனைவரும் வாருங்கள் என்று கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முதல் கட்டமாக கட்சியின் தலைமைக்கு இக்கடிதத்தின் நகலை அனுப்பி வைத்துள்ளனர். ராஜதந்திரத்தால், மாவட்டச் செயலாளர் பதவியைப் பிடிக்க ராஜா திட்டமிட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

சேலம் மாவட்ட திமுக செயலாளர் பதவிக்கு தேர்தல் நடப்பதற்கு முன்பே, சேலம் மாவட்டத்தில் நிலவி வரும் கோஷ்டி சண்டைக்குத் தீர்வுகாண முடியாமல் திமுக தலைமை திணறி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x