Published : 20 Feb 2014 04:36 PM
Last Updated : 20 Feb 2014 04:36 PM

கோவை: தனியார் ஆலைகளால் கழிவு நுரையை சுமந்துசெல்லும் பவானி ஆறு

கோவை மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில், தனியார் ஆலைகளிலிருந்து அதிகப்படியான கழிவு நீர் திறந்து விடப்பட்டதால் குடிநீர் திட்டங்களும், மின் உற்பத்தியும் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகளில் உருவாகும் பவானி ஆறு, பில்லூர் அணை வழியாக மேட்டுப்பாளையம் வழியே தமிழகத்தில் நுழைகிறது, இதிலிருந்து கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் சுமார் 25 லட்சம் மக்கள், குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஆற்று நீரிலிருந்து ஏராளமான குடிநீர் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன.

மேட்டுப்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலைகளால் ஆற்று நீர் மாசுபடுவதாக தொடர் குற்றச்சாட்டுகள் நிலவி வருகின்றன. இந்நிலையில் புதன்கிழமை அங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்று சுத்திகரிக்கப்படாத கழிவு நீரை ஆற்றுக்குள் திறந்துவிட்டுள்ளது. இதனால் நீரின் நிறம் மாறி, நுரை பொங்கத் துவங்கியுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தனியார் டர்கி டவல் தயாரிப்பு நிறுவனம் ஆற்றின் நீரையே உற்பத்திக்கு பயன்படுத்தி, சுத்திகரிக்கப்படாத கழிவுநீரை ஆற்றுக்குள் திருப்பி விடுகிறது. இதுவரை நள்ளிரவில் மட்டுமே கழிவுநீரை வெளியேற்றி வந்தனர். ஆனால், புதன்கிழமை அதிகாலை 6.00 மணியிலிருந்து 10.00 மணிவரை அதிகளவு கழிவு நீர் ஆற்றுக்குள் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால், ஆறு முழுவதும் நுரை ஏற்பட்டு நீரின் நிறம் மாறிவிட்டது. குடிப்பதற்கும், விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படும் ஆற்று நீர், தனியார் நிறுவனங்களால் பாழடைந்து வருகிறது என்றனர்.

அங்குள்ள நீரேற்று நிலையத் தில் கழிவு நீர் புகுந்ததால் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் நகராட்சியில் புகார் தெரிவித்தனர். நகராட்சித் தலைவர் சதீஷ்குமார் மற்றும் உறுப்பினர்கள் ஆற்றின் நிலையை பார்வையிட்டு, மாசுக்கட்டுப்பாட்டு வாரிய மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். புதன்கிழமை மாலை, நகராட்சித் தலைவர் சதீஷ்குமார், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேரடியாக வந்து புகார் அளித்துள்ளார்.

தண்ணீர் திறப்பு அறிவிப்பு

நள்ளிரவில் மட்டுமே கழிவுநீரை திறந்துவிட்டுக் கொண்டிருந்த தனியார் நிறுவனங்கள், தற்போது பில்லூர் அணையின் நீர் திறப்பு அறிவிப்பை சாதமாக பயன்படுத்திக் கொள்கின்றன என்று குற்றச்சாட்டு உள்ளது. முன்னறிவிப்பில்லாத தண்ணீர் திறப்பால் உயிரிழப்புகள் ஏற்படும் என்பதால் பத்திரகாளியம்மன் கோயில் செல்லும் வழியில் உள்ள சாமண்ணா ஹவுஸ் பகுதியிலும், தேக்கம்பட்டி யானைகள் முகாமில் ஒரு அலாரமும் வைக்கப்பட்டன. தண்ணீர் திறப்பிற்கு ஒரு மணி நேரம் முன்னதாக கழிவு நீரை திறந்து விடுகின்றனர்.

குடிநீர்த் திட்டங்கள் பாதிப்பு

மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு பழைய குடிநீர் திட்டம், கூட்டுக் குடிநீர் திட்டம், புதிய குடிநீர்த் திட்டம் ஆகியவற்றின் கீழ், குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. திருப்பூர் மாநகராட்சிக்கு முதல் மற்றும் இரண்டாம் குடிநீர் திட்டம், சிறுமுகை, காரமடை தனி குடிநீர் திட்டம் ஆகியவையும் ரூ.13.20 கோடி மதிப்பில் காரமடை தனி இரண்டாம் குடிநீர் திட்டம் வேலைகள் நடந்து வருகின்றன.

ரூ.340 கோடி செலவில் வெள்ளிபாளையம், சமயபுரம் பகுதியில், நீர்மின் கதவணை உற்பத்தித் திட்டம் நடந்து வருகிறது. வெள்ளிபாளையத்தில் தினசரி 10 மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிறது. சமயபுரத்தில் பணிகள் முடியும் தருவாயில் உள்ளன. மின் உற்பத்திக்கு ஆற்றுநீரை தேக்கி வைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதால், அப்பகுதியில் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பவானி ஆற்றில் திறந்துவிடப்பட்ட ஆலைக் கழிவு நீர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x