Published : 17 Jan 2014 10:54 AM
Last Updated : 17 Jan 2014 10:54 AM
வரும் 20-ஆம் தேதி இலங்கை- இந்தியா மீனவர்கள் பிரதிநிதிகள் சந்தித்துப் பேசவுள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தையால் மீனவர் பிரச்சினைக்கு விடிவு ஏற்படுமா என திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இலங்கை சிறையில் வாடும் தமிழக மீனவர்களை விடுதலை செய்வது குறித்தும், தொடர்ந்து தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்தும், மீன் பிடிப்பதில் உள்ள மற்ற முக்கியமான பிரச்சினைகள் குறித்து தீர்வு காண்பது குறித்தும், இரண்டு நாடுகளின் மீனவப் பிரதிநிதிகள் சந்திப்பது பற்றி மத்திய அரசு, தமிழக அரசுக்குக் கடிதத்திற்கு மேல் கடிதம் எழுதி, அது பற்றி அனைவரும் அழுத்தம் கொடுத்த நிலையில் தமிழக அ.தி.மு.க. அரசு இந்த மாதம் 20ஆம் தேதி அந்தச் சந்திப்பினை நடத்த முன்வந்துள்ளது.
பேச்சுவார்த்தை எங்கே நடைபெறுகிறது?
ஆனால் அந்தச் சந்திப்பு எங்கே நடைபெறப் போகிறது? கலந்தாலோசனையில் யார் யார் கலந்து கொள்ளப் போகிறார்கள்? இந்த முக்கியமான பிரச்சினை பேசப்படும் போது, தமிழக மீனவர்களுக்காக, தமிழக முதலமைச்சர் அதிலே கலந்து கொள்ள வேண்டாமா? முதலமைச்சர் கொடநாட்டில் இருப்பதால் அவர் இல்லாமல் அந்தப் பேச்சுவார்த்தை நடைபெறப் போகிறதா? மீனவர்கள் பிரச்சினை பற்றி, தமிழக முதலமைச்சருக்கு உள்ள அக்கறை அவ்வளவுதானா? மீனவர்களின் பிரதிநிதிகள் கலந்து பேசும் கூட்டம் டெல்லியில் நடக்கப்போவதாக ஒரு செய்தி வருகிறது; சென்னையில் நடைபெறப்போவதாக மற்றொரு செய்தி வருகிறது! எது உண்மை என்று யாரும் இன்னமும் தெளிவுபடுத்தவில்லை.
அனைத்துத் தரப்பிலிருந்தும் தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தின் காரணமாக மீனவர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது குறித்து இந்திய-இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர்கள் அண்மையில் தொலைபேசி வாயிலாகப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
தொடரும் தாக்குதல்:
இலங்கை அமைச்சர் டெல்லி வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்த அதே நேரத்தில், நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே, கோடியக்கரைக்கு தென் கிழக்கு பகுதியில் இந்திய மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, இலங்கை கடற்படைக்குச் சொந்தமான ரோந்துப் படகு அங்கே வந்து, நமது மீனவர்கள் மீது சரமாரிக் கற்களை வீசியிருக்கிறார்கள்.
பின்னர் தமிழக மீனவர்கள் விரித்திருந்த மீன்பிடி வலைகளை யெல்லாம் வெட்டி வீசியிருக்கிறார்கள். இரண்டு நாட்டு மீனவர்களுக்கிடையே ஒரு சுமூகமான முடிவுக்காக முயற்சிகள் மேற்கொண்டிருக்கும் நேரத்தில், இலங்கை கடற்படை தாக்குதலிலே ஈடுபட்டுள்ளது. ஆனால் இலங்கை அமைச்சர் டெல்லியில் அளித்த பேட்டியில் இந்திய மீனவர்கள், இலங்கைக் கடற்படையினரால் தாக்கப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உண்மையில்லை என்று தெரிவித்திருக்கிறார்.
கவனமாக செயல்பட வேண்டும்:
மீனவர் பிரச்சினை குறித்து நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைகளின் போது மத்திய அரசும், மாநில அரசும் மிகுந்த எச்சரிக்கை உணர்வோடும், கவனமாகவும் செயல்பட வேண்டும். ஏனெனில் இலங்கைச் சிங்கள அரசு தொடர்ந்து பேசுவது ஒன்றாகவும், செய்வது வேறொன்றாகவும் முரண் பாடுகளின் மொத்த உருவமாகக் காட்சியளிப்பதை யாரும் மறந்துவிட முடியாது. 2009ஆம் ஆண்டு இலங்கைப் போரின்போது, போரை நிறுத்திவிட்டதாக உலக நாடுகளையும், இந்திய அரசையும் நம்ப வைத்துவிட்டு, அதற்கு மாறாக போரைத் தொடர்ந்து நடத்தி விடுதலைப் புலிகள் இயக்கத்தை அழித்ததை நம்மால் என்றைக்கும் மறக்கவும் முடியாது, மன்னிக்கவும் முடியாது.
போருக்குப் பிறகு 13-வது சட்டத் திருத்தத்தைப் பற்றி பேசியபோதெல்லாம் இலங்கை அதிபர் ராஜபக்ஷே, 13-வது சட்டத் திருத்தத்திற்கு கூடுதலாகவும், அதிகாரங்கள் அங்கேயுள்ள தமிழர்களுக்கு வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். ஆனால் நடந்தது அதற்கு எதிர்மாறான நடவடிக்கை தான்.
வடக்கு மாகாணத்தில் தேர்தலை நடத்தி ஜனநாயக ரீதியாக ஆட்சி நடப்பதற்கு ஏற்பாடு செய்வேன் என்று நம்பிக்கை அளித்த ராஜபக்ஷே, தேர்தலை நடத்தியதோடு சரி; அவர் கனவு கண்டபடி சிங்கள அரசியல் கட்சிகள் வெற்றிபெற முடிய வில்லை; படுதோல்வி அடைந்து தமிழ்த் தேசிய முன்னணி அறுதிப் பெரும்பான்மை பெற்று, ஆட்சி அமைத்த போதிலும், அவர்கள் எதிர்பார்த்த குறைந்தபட்ச அதிகாரங்கள்கூட வழங்கப்படவில்லை என்பதுதான் உண்மை.
இந்நிலையில், தற்போது நடத்தவிருக்கும் பேச்சு வார்த்தைகளின்போது மிகுந்த எச்சரிக்கையாக இருந்து தமிழக மீனவர்களின் நல்வாழ்வுக்கு வழிவகுத்து, அவர்கள் இனியும் இலங்கைக் கடற்படையினரின் கொடுமைகளுக்கு ஆளாக்கப்படாமல் நிம்மதியாக வாழ்க்கையை நடத்திட உதவவேண்டுமென்று வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT