Published : 20 Sep 2016 08:11 AM
Last Updated : 20 Sep 2016 08:11 AM

சென்னையில் 25 கி.மீ. நீளத்துக்கு கடற்கரை ஓரங்களில் வளர்ந்த பனை மரங்களை நட மாநகராட்சி திட்டம்: கடலரிப்பைத் தடுக்க நடவடிக்கை

கடலரிப்பை தடுக்கும் விதமாக சென்னை கடற்கரை ஓரங்களில் வளர்ந்த பனை மரங்களை நட மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

சென்னையில் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், எண்ணூர் போன்ற பகுதிகளில் அண்மைக் காலமாக கடலரிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் கடலோரத்தில் உள்ள மீனவர்களின் வீடுகள் கடுமையாக பாதிக்கப்படுகின்றன.

கடலரிப்பை தடுக்க தடுப்புச் சுவர்களை எழுப்புவது, கற்களைக் கொட்டுவது போன்ற பணிகளை பொதுப்பணித்துறை செய்து வருகிறது. இது அறிவியல் பூர்வமாக இல்லை என்று பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டதால், அறிவியல் பூர்வமான திட்டத்தை உருவாக்கும் வரை, கடல் அரிப்பைத் தடுக்கும் பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் உத்தர விட்டுள்ளது. இந்நிலையில் இயற் கையான முறையில் கடல் அரிப் பைத் தடுக்க, கடற்கரை ஓரங்களில் வளர்ந்த பனை மரங்களை நட மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சென்னை மாநகராட்சியின் 2016-17 பட்ஜெட்டில், புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களின் தாக்கத்தை குறைப்பதற்காக, கடற்கரை ஓரங்களில், வளர்ந்த பனை மரங்கள் நட்டு பராமரிக் கப்படும் என்று மேயர் சைதை துரைசாமி அறிவித்திருந்தார். அதற்காக கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் மாநகராட்சி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது.

பனை மரங்கள் காற்று தடுப்பான் மட்டுமல்லாது, சல்லி வேர்கள் அதிக அளவில் இருப்பதால், நீர் மற்றும் காற்றினால் ஏற்படும் மண் அரிப்பையும் தடுக்கும் தன்மையுடையது. கடற்கரை ஓரங்களில் வளர்ந்த மரங்களை நடவு செய்தால், நன்றாக வளரும் என்று மாநகராட்சி பூங்கா துறை சான்றளித்துள்ளது.

சென்னை மாநகராட்சி எல்லை யில் மொத்தம் 25 கிலோ மீட்டர் நீளத்துக்கு கடற்கரை வருகிறது. முழு நீளத்துக்கும் பனை மரங் களை நட இருக்கிறோம். இதற்காக தருமபுரி, வேலூர், தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட் டங்களில் இருந்து வளர்ந்த பனை மரங்கள் கொண்டுவரப்பட உள்ளன. முதல் கட்டமாக சென்னை மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலை முதல் பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம் வரை பனை மரங்களை நட இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

தடை இல்லை

கடற்கரையோரங்களில் 500 மீட் டர் தூரம் வரை எந்த பணிகளையும் மேற்கொள்ளக்கூடாது. அதற்கு அப்பால் செய்ய வேண்டுமானால் கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளுக்கு உட்பட்டு, மாநில கடலோர மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி பெற வேண்டும். மேலும் கடலரிப்பைத் தடுக்க, எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளக்கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்ட நிலையில், சென்னை மாநகராட்சி கடற்கரை ஓரங்களில் பனை மரங்களை நட திட்டமிட்டிருப்பது குறித்து, சுற்றுச்சூழல் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, கடலோரங்களில் கான்கிரீட் கட்டுமானங்களை செய்யத்தான் தடை உள்ளது. மரக்கன்றுகளை நட எந்த தடையும் இல்லை என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x