Published : 21 Feb 2017 04:26 PM
Last Updated : 21 Feb 2017 04:26 PM

குற்றவாளியிடம் சிறை உபதேசம் பெறும் முதல்வர்: திமுக இளைஞரணிச் செயலாளர் மு.பெ.சாமிநாதன் சிறப்புப் பேட்டி

''எடப்பாடி முதல்வராகப் பதவியேற்றதன் நோக்கமே வேறு. இந்த ஆட்சி ஏன், எதற்கு, யாரின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். குற்றவாளிகளின் வழிகாட்டுதலின்படியே எடப்பாடி செயல்படுகிறார்'' என்கிறார் திமுக இளைஞரணிச் செயலாளர் மு.பெ.சாமிநாதன்.

தி இந்து இணையதளத்துக்கு அவர் அளித்த சிறப்பு பேட்டி.

கொங்கு மண்டலத்தில் இருந்து முதல் முறையாக ஒருவர் முதல்வர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். கட்சியைத் தாண்டி இதுபற்றிய உங்களின் கருத்து என்ன?

அருகாமை மாவட்டமான சேலத்தில் இருந்து ஒருவர் தமிழ்நாட்டின் முதல்வராகி இருக்கிறார். ஆனால் அவருக்கு செயல்படுவதற்கான முழு சுதந்திரம் இருக்கிறதா என்று தெரியவில்லை. எடப்பாடி ஒரு வாடகை நாற்காலியில் அமர்ந்திருக்கிறார் என்று மக்களே சொல்கின்றனர்.

இதற்கு முன்பு 5 வருடங்கள் அவர் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்திருக்கிறார். ஆனால் குறிப்பிடத்தக்க அளவில் எதையுமே அவர் செய்யவில்லை. நான் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்தபோது அகலப்படுத்திய சாலைகள், கட்டிய மேம்பாலங்கள்கூட முறையாகப் பராமரிக்கப்படவில்லை.

முதல்வர் பணி என்பது மகத்தான பொறுப்பு. ஆனால் அவரிடம் எதற்கு இத்தனை துறைகள்? பொதுப்பணி, நிதி, நெடுஞ்சாலைத் துறை என எப்படி ஒருவரால் இத்தனை துறைகளைத் திறம்பட நிர்வகிக்க முடியும்? அவர் முதல்வராகப் பதவியேற்றதன் நோக்கமே வேறு. இந்த ஆட்சி ஏன், எதற்கு, யாரின் வழிகாட்டுதலின்படி நடக்கிறது என்பது தமிழக மக்களுக்கு நன்றாகவே தெரியும். இது இப்படியே தொடரும். குற்றவாளிகளின் வழிகாட்டுதலின்படியே எடப்பாடி செயல்படுகிறார்; செயல்படுவார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ள திட்டங்கள் எப்படி இருக்கின்றன?

அரசின் திட்டங்கள் அனைத்தும் ஆட்டம் கண்டுள்ள அதிமுக அரசை நிலைப்படுத்திக் கொள்ளவும், மக்களின் எதிர்ப்பை மறக்கடிக்கவும், உள்ளாட்சித் தேர்தலையும் முன்னிட்டுத்தான்.

இயற்கை வறட்சியோடு, கடந்த ஆட்சிக்காலத்தில் அதிமுக அரசு செயற்கையான வறட்சியையும் ஏற்படுத்தியது. காவிரி நீர் விவகாரத்தில் அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. சில அமைச்சர்கள் விவசாயிகளின் இறப்பைக்கூட கேலி செய்தனர்.

2005-ம் ஆண்டு என நினைக்கிறேன். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் இல்லாமல் அறிவித்த, வெள்ள நிவாரண நிதி வழங்கலின்போது ஏற்பட்ட நெரிசலில் 42 பேர் மரணம் அடைந்தனர். இதுபோன்ற நிலை இப்போது பழனிசாமி அறிவித்துள்ள வறட்சி நிவாரணத்தின்போது நடக்கக் கூடாது என்று ஆசைப்படுகிறேன்.

ஜெயலலிதாவின் மறைவு, சசிகலா பொதுச்செயலாளர், ஓபிஎஸ் ராஜினாமா, பழனிசாமி முதல்வர் என நொடிக்கு நொடி காட்சி மாறும் அதிமுகவின் ஆட்சி நிலையான அரசாக நீடிக்குமா?

முதலில் மக்கள் இதை ஆட்சியாகவே நினைக்கவில்லை; விரும்பவும் இல்லை. மக்கள் பிரதிநிதிகள் மக்களின் விருப்பத்தைக் கேட்டு செயல்பட்டிருக்க வேண்டும். சிறைக்கைதிகளைக் கூட சந்தித்துவிடலாம். ஆனால் அதிமுக எம்எல்ஏக்களைப் பார்க்கவே முடிவதில்லை. ஒரு சட்டமன்ற உறுப்பினரின் சின்னம்மா இறந்ததற்குக் கூட அவரால் செல்ல முடியவில்லை. இப்படியொரு செயல் எந்த மாநிலத்திலும், எந்த நாட்டிலும் நடந்திருக்காது.

சபாநாயகர் ஒருசார்பாக இருந்து, அதிமுகவைக் காப்பாற்றியுள்ளார். செய்யும் தவறுகளை மூடி மறைக்கவும், அதைச் சரியான செயலாகக் காட்டவும் காவல்துறை டிசிக்களும், ஏசிக்களும் ஆய்வாளர் போல மாறுவேடமிட்டு வந்து, இந்த ஆட்சியை நிலைப்படுத்தி இருக்கின்றனர்.

எம்எல்ஏக்கள் பெரும்பான்மை மீதான நம்பிக்கை வாக்கெடுப்பை அடுத்து திமுகவினர் வன்முறைச் செயல்பாடுகளில் ஈடுபட்டதற்கான காரணம் என்ன?

சம்பவ இடத்தில் நான் இல்லை. இது தவறுதான் என்பதை செயல் தலைவர் ஸ்டாலினும் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து வருத்தம் தெரிவித்தார். சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்துக் கண்டித்தார். செய்தியாளர்களைச் சந்தித்தபோதும் கூட அவர், இச்செயல் தவறு என்றே ஒப்புக்கொண்டார்.

அதே நேரத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் வேளாண் அமைச்சர் வீரபாண்டியார் அறிக்கை தாக்கல் செய்தபோது, அதிமுகவினர் தாக்கியதில் மூக்கு உடைந்து ரத்தம் ஒழுகியதும், விமான நிலையத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மீது தாக்குதல் நடத்தியதையும், சட்டப்பேரவையிலேயே பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டவர்கள் மீது அதிமுகவினர் வெறித்தனமாகத் தாக்கியதையும் நீங்கள் மறந்துவிடக்கூடாது.

தற்போதுள்ள அரசியல் சூழ்நிலையில், திமுக உடனே ஆட்சியில் அமர வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா?

திமுக மக்கள் ஆதரவுடன், அவர்களைச் சந்தித்துத்தான் ஆட்சிக்கு வரும். ஜெயலலிதா இறந்தபோதும், சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்குக்கான தீர்ப்பு வந்தபோதும் ஸ்டாலின் இதையேதான் சொன்னார். பின்கதவின் வழியாக ஆட்சியில் அமர வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை.

அதிமுகவின் எதிர்காலம் எப்படி இருக்கும்?

அதிமுக இப்போது கேப்டன் இல்லாத கப்பல். அது இப்போது இரண்டாக உடைந்து மூழ்கிக் கொண்டிருக்கிறது. எடப்பாடி பழனிசாமியை ஆதரித்த எம்எல்ஏக்கள், தொகுதி மக்களைச் சந்திக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதிமுகவிற்கான எதிர்காலம் வெகு நிச்சயமாக இருக்காது.

கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தற்போதைய அமைச்சர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கின்றன?

செயல்பாடு என்ற ஒன்று இருந்தால்தானே அதைப் பற்றிக் கருத்துக் கூறமுடியும்.

32 வருடங்களாக ஸ்டாலின் வகித்து வந்த திமுக இளைஞர் அணிச் செயலாளர் பதவி உங்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. எப்படி இது சாத்தியமானது?

இது ஸ்டாலின் வகித்து வந்த பதவி மட்டுமல்ல. திமுக இளைஞர் அமைப்பை உருவாக்கியதே அவர்தான். கிராமம் கிராமமாகச் சுற்றுப்பயணம் செய்து, மாவட்ட வாரியாக அமைப்புகளை உருவாக்கி, நிர்வாகிகளை நியமித்து, இளைஞரணியை மாபெரும் சக்தியாக உருவாக்கியவர் ஸ்டாலின். இதை மேலும் வளர்க்க வேண்டிய பொறுப்பு இப்போது என்னிடம் இருக்கிறது.

2016 சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில், அதிமுகவோடு ஒப்பிடும்போது திமுக பெரியளவில் வீழ்ச்சி கண்டது. சொல்லப்போனால் தேர்தல் முடிவுக்கு அதுவும் முக்கியக் காரணமாக அமைந்தது. கொங்கு மண்டலம் திமுகவின் மீது வெறுப்பில் உள்ளதா?

கொங்கு மக்களிடம் சினிமா மோகம் சற்றே அதிகமாக இருக்கிறது. எம்ஜிஆர், ஜெயலலிதா என்ற பிம்ப அரசியல் இங்கு உருவாகியதும், தேர்தலின்போது அதிமுக ஓட்டுக்குப் பணம் வழங்கியதும் அக்கட்சியின் வெற்றிக்கான முக்கியமான காரணங்கள். பணம் வழங்கலைத் தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளாததும் அவர்களின் ஓட்டு விகிதத்தை அதிகமாக்கியது.

பிம்ப அரசியல் நிலைப்பாட்டை மாற்ற திமுக இளைஞர்களை நேரடியாகச் சந்தித்து வருகிறது. 'நமக்கு நாமே' திட்டத்தின் மூலம் ஸ்டாலினும் விளிம்புநிலை மக்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.

திமுகவின் இளைஞரணிச் செயல்பாடுகள் என்னென்ன? இன்றைய இளம் தலைமுறையினரின் மனநிலை எப்படி இருக்கிறது?

மாதந்தோறும் மாவட்ட அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது. தொடர்ந்து மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பை நடத்துகிறோம். ஸ்டாலின் பிறந்தநாளான மார்ச் 1 அன்று, இளைஞர் எழுச்சி நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அன்று ரத்த தானம் செய்வது, மரக்கன்று நடுவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கிறோம்.

இன்றைய இளைஞர்களிடையே அரசியல் ஆர்வம் குறைவாகவே இருக்கிறது. வேலை, குடும்பம், பொழுதுபோக்கு என இருக்கும் அவர்கள், அரசியலில் ஈடுபட யோசிக்கின்றனர். ஆனால் அரசியலுக்கு வரும் பெரும்பாலான இளைஞர்கள் திமுகவையே நாடுகின்றனர்.

சமூக ஊடகங்களின் தாக்கத்தை எவ்வாறு உணர்கிறீர்கள்?

இளைஞர்கள் சமூக ஊடகங்களின் வழியே சமூகத்தைப் படிக்கிறார்கள் என்பதில் மகிழ்ச்சி. ஆனால் பொய்ப் பிரச்சாரம் மற்றும் வதந்'தீ'க்களின் பிறப்பிடமாகவும் சமூக ஊடகங்களே இருக்கின்றன. இந்நிலை மாறவேண்டும்.

தமிழ்க் கலாச்சாரத்துக்காக மெரினாவில் இளைஞர்கள் கூடியதைப் போல நீட் தேர்வு, காவிரி நீர் விவகாரம், மீத்தேன் எரிவாயு உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு குரல்கொடுக்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன்வைக்கிறேன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x