Last Updated : 22 Jan, 2017 10:17 AM

 

Published : 22 Jan 2017 10:17 AM
Last Updated : 22 Jan 2017 10:17 AM

தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு ஜல்லிக்கட்டு அமைப்புகள் வரவேற்பு: நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகளுக்கு வலியுறுத்தல்

ஜல்லிக்கட்டு நடத்தும் வகையில் தமிழக அரசு கொண்டு வந்துள்ள அவசர சட்டத்தை ஜல்லிக்கட்டு அமைப்புகள் வரவேற்றுள்ளன. அதேசமயம் நிரந்தரமாக தீர்வு கிடைக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளிக்க வேண்டும். பீட்டா அமைப்பை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி மாநிலம் முழுவதும் மாணவர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து ஜல்லிக்கட்டு நடத்தும் வகையிலான அவசர சட்டத்தை மத்திய அரசின் ஒப்புத லோடு மாநில அரசு நேற்று பிறப்பித்தது.

இந்தச் சூழலில் ஜல்லிக்கட்டு பிரச்சி னைக்காக கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றங்களில் வழக்கு நடத்தி வரும் ஜல்லிக்கட்டு அமைப்புகள் இந்த அவசர சட்டத்தை வரவேற்றுள்ளன.

இதுகுறித்து ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்க நிறுவனர் பேராசிரியர் அம்பலத்தரசு கூறும்போது, “அவசர சட்டத்துக்கு 6 மாதம் மட்டுமே ஆயுள். இதற்கும் எப்படியாவது தடைவாங்க முயற்சிப்பார்கள். எனவே, எந்த காலத்திலும் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படாத வகையில் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில், ஜல்லிக்கட்டுக்கு தடையாக அமையும் வகையிலுள்ள பிரிவுகளை நீக்கி, நாடாளுமன்ற ஒப்புதலுடன் சட்டத்திருத்தம் கொண்டு வர வேண்டும்” என்றார்.

தமிழ்நாடு ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவர் பி.ராஜசேகர் கூறும்போது, “மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை, சட்டம், உள்துறை அமைச்ச கங்களின் ஒப்புதலுடன் ஆளுநரின் கையெழுத்துடன் கொண்டு வரப்பட்டுள்ள அவசர சட்டத்தை வரவேற்கிறோம். தமிழகத்தில் மீண்டும் ஜல்லிக்கட்டு நடைபெறும் வகையில் மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கை பாராட்டக்கூடியது. இதற்காக குரல் கொடுத்த, இரவு பகலாக போராடிய மாணவர்கள், மாணவிகள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி” என்றார்.

தமிழர் வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு பாதுகாப்புக் குழு மாநிலத் தலைவர் ஒண்டிராஜ் கூறும்போது, ‘‘மாணவர்களின் போராட்டத்துக்கு மதிப்பு கொடுத்து நடவடிக்கை எடுத்த மத்திய, மாநில அரசுகளுக்கு நன்றி. இனிவரும் காலங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு தடை ஏற்படாத வகையில் நிரந்தர தீர்வு காண மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

வீர விளையாட்டு மீட்புக் கழகத் தலைவர் டி.ராஜேஷ் கூறும்போது, “தமிழக அரசின் அவசர சட்டத்தை வரவேற்கி றோம். ஜனாதிபதி, மத்திய அரசின் ஒப்பு தலுடன் அவசர சட்டம் பிறப்பிக்கப் பட்டுள்ளதால், இதற்கு நீதிமன்றம் மூலம் தடை பெற வாய்ப்பில்லை என கருதுகிறோம்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x