Published : 12 Jul 2016 07:46 AM
Last Updated : 12 Jul 2016 07:46 AM

மெட்ராஸ் - மைசூர் ஒப்பந்தத்தை மீறும் ஆந்திர அரசு: பாலாற்றின் குறுக்கே உயரம் அதிகரிக்கப்படும் தடுப்பணைகள்

தமிழகத்துக்கு நீர்வரத்து இனி கானல் நீராகும் அபாயம்

ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே கட்டிய தடுப்பணைகளின் உயரத்தை அதிகரித்துக் கட்டும் திட்டத்தை ஆந்திர அரசு தொடங்கி உள்ளது. இதனால், மெட்ராஸ் - மைசூர் ஒப்பந்தத்தை அப்பட்டமாக மீறுவதுடன், பாலாற்றில் தண்ணீர் வரத்தை முற்றிலும் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மேற்கொண்டுள்ளார்.

தமிழக - ஆந்திர எல்லையில் புல்லூர் கிராமத்தின் அருகே பாலாற்றின் குறுக்கே கட்டப்பட்ட 5 அடி உயர தடுப்பணையை 12 அடியாக உயர்த்தி ஆந்திர அரசு கட்டியுள்ளது. அங்கு, இதுநாள் வரை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கனக நாச்சியம்மன் கோயிலையும் ஆந்திர அரசு கைப்பற்றி உள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து தமிழக அரசியல் கட்சியினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

புல்லூரில் மட்டுமின்றி ஆந்திர மாநிலத்தில் பாலாறு பாயும் 33 கி.மீ. தொலைவிலும் உள்ள 14 தடுப்பணை களின் உயரத்தை அதிகரித்து, பாலாற் றின் துணை நதிகளின் குறுக்கே புதிய தடுப்பணைகளை எழுப்பும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இது தொடர்பாக ‘தி இந்து’ செய்தியாளர்கள் குழுவினர் நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

புல்லூருக்கு மேற்கே பொகிலிரே என்ற அடர்ந்த வனப்பகுதியில் 8 அடி உயர தடுப்பணை முழுவதும் தண்ணீர் தேங்கியுள்ளது. ஒரு கோடி ரூபாய் மதிப்பில், இந்தத் தடுப்பணையின் உயரத்தை அதிகரிக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

பாலாறு என்ற கிராமத்தில் 5 அடியாக இருந்தத் தடுப்பணையின் உயரத்தை கடந்த 3 மாதங்களுக்கு முன்பு 25 அடியாக உயர்த்திக் கட்டியதுடன், தடுப்பணையின் நீளத்தையும் அதிகரித்துள்ளனர். இதன்மூலம், பாலாற்றில் ஒன்றரை கிமீ தொலைவுக்கு தண்ணீரை தேக்கிவைக்க தூய்மைப்படுத்தியுள்ளனர்.

அதேபோல, கங்குந்தி மலைத் தொடரில் இருந்து உருவாகும் பாலாற்றின் துணை நதியான பாமலுஒங்காவில் தடுப்பணை அமைக்கும் பணி தொடங்கி உள்ளது. இதற்காக வனப்பகுதியில் மண்ணால் ஆன தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர். இங்கு, கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க உள்ளனர். இதன்மூலம், பாலாற்றுக்கு வழக்கமாக செல்லும் நீரின் அளவு தடுக்கப்படும். அதேபோல, பெரும்பள்ளம் என்ற கிராமத்தில் உள்ள ஏரியின் கடைமடையை உயர்த்தி கூடுதலாகத் தண்ணீரைத் தேக்க திட்டமிட்டுள்ளனர்.

ஒப்பந்தம் என்ன சொல்கிறது?

1892-ல் மெட்ராஸ் அரசாங்கத்துக்கும் மைசூர் சமஸ்தானத்துக்கும் இடையில் பட்டியல் ‘ஏ’ இணைப்பின்படி துங்கபத்ரா, வடபெண்ணை, தென்பெண்ணை, பாலாறு, காவிரி உள்ளிட்ட 15 ஆறுகளின் மேல்பகுதியில் ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள நீர்த்தேக்கப் பகுதிகளின் உயரத்தையும் பரப்பளவையும் பராமரிப்பு என்ற பெயரில் அதிகரிக்கக்கூடாது. அதன் பாசன பரப்பளவையும் அதிகரிக்கக்கூடாது. மேலும், கீழ்பகுதியில் பாசனம் பெறும் மாநிலத்தின் அனுமதி இல்லாமல் புதிய அணைகள், தண்ணீரை வேறு பகுதிக்கு திசை திருப்பக்கூடாது மற்றும் தேக்கி வைப்பதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடக்கூடாது.

ஆனால், தமிழக அரசின் எந்த முன் அனுமதியும் இல்லாமல் ஆந்திர அரசு பாலாற்றின் குறுக்கே கடந்த 2000-ம் ஆண்டில் பல இடங்களில் 5 அடி முதல் 8 அடி வரை தடுப்பணை கட்டியுள்ளது. மேலும், கணேசபுரத்தில் புதிய அணை கட்டும் முயற்சியைக் கண்டித்து தமிழக அரசு சார்பில் 2006-ம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது, அணை கட்ட தடை விதிக்கப்பட்டது.

கடந்த 10 ஆண்டுகளாக அமைதியாக இருந்த ஆந்திர அரசு தமிழக அரசின் எதிர்ப்புகளை சமாளிக்க ரகசியமாக தடுப்பணை கட்டுமானப் பணியை தொடங்கியுள்ளது. இதன்மூலம் 1892 மெட்ராஸ் - மைசூர் ஒப்பந்தத்தை ஆந்திர அரசு அப்பட்டமாக மீறியுள்ளது.

இது தொடர்பாக கங்குந்தி கிராமத்தைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சிப் பிரமுகர் மஞ்சுநாத் என்பவர் கூறும்போது, ‘‘முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில் கடுமையான தண்ணீர் பிரச்சினை நிலவுகிறது. இதற்காக, 430 கோடி செலவில் அந்திரி - நீவா திட்டத்தை குப்பம் தொகுதி வரை விரிவுபடுத்த உள்ளார். இந்தத் திட்டத்தில் ஒரு டிஎம்சி தண்ணீர் குப்பம் தொகுதியில் உள்ள 86 ஏரிகளிலும் ஒரு டிஎம்சி தண்ணீர் பாலாற்றின் குறுக்கே உயர்த்தி கட்டிய தடுப்பணையிலும் தேக்கப்படும். அந்திரி - நீவா தண்ணீர், குப்பம் தொகுதிக்கு ஓராண்டுக்குள் வந்துவிடும். இதனால், விவசாயம், கால்நடைகளுக்கான தண்ணீர் தேவை, மக்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படும்.

கனகநாச்சியம்மன் கோயில் எங்கள் எல்லையில்தான் உள்ளது. தமிழர்கள் கோயில் கட்டிக்கொள்ளவும் வழிபாடு நடத்தவும் நாங்கள் பெருந்தன்மையாக அனுமதி அளித்தோம். ஆனால், எங்களை கனகநாச்சியம்மன் கோயில் பூசாரி புறக்கணித்தார். அந்தக் கோயில் தமிழ்நாட்டுக்கு சொந்தம் என்றால் அதற்கான ஆவணத்தை வேலூர் மாவட்ட ஆட்சியரை காண்பிக்கச் சொல்லுங்கள். ஆவணம் இருந்தால் நாங்கள் தமிழர்களுக்கு விட்டுக்கொடுக்கிறோம். கனக நாச்சியம்மன் கோயில், தடுப்பணை பகுதியை சுற்றுலாத் தலமாக்க ரூ.3 கோடியில் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. தடுப்பணையில் தண்ணீரைத் தேக்கி வைத்து படகு சவாரி விட முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றார்.

புல்லூர் கிராம ஊராட்சித் தலைவர் மணி கூறும்போது, ‘‘தடுப்பணையை உயர்த்திக் கட்டினால் புல்லூர் பகுதியில் நிலத்தடி நீர் அதிகரிக்கும் கால்வாய் மூலம் தண்ணீர் விடப்படும் எனக் கூறி 500-க்கும் மேற்பட்ட மக்களிடம் ஆந்திர அரசு அதிகாரிகள் கையெழுத்து வாங்கினார்கள். மக்களும் தண்ணீர் வரும் என்பதற்காக கையெழுத்து போட்டுவிட்டார்கள்’’ என்றார்.

இதுகுறித்து, வேலூர் மாவட்ட பாலாறு பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் ஏ.சி.வெங்கடேசன் கூறும்போது, ‘‘தமிழக அரசு இந்தப் பிரச்சினையை சட்டபூர்வமாக எதிர்க்காவிட்டால் பாலாற்றில் நமக்கு உள்ள உரிமையை இழப்பதுடன் பாலாற்றையும் இழக்க வேண்டியதுதான்’’ என்றார்.

வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமுதாய முன்னேற்ற இயக்கத்தின் செயலாளர் அசோகன் கூறும்போது, ‘‘குப்பம் தொகுதிக்காக ஆந்திர முதலமைச்சர் எடுக்கும் முயற்சிகளைப் பார்த்தால் பாலாற்றில் இனிமேல் தண்ணீர் வருவதற்கான வாய்ப்புகள் குறைந்துவிட்டதாகவே தெரிகிறது. சட்ட ரீதியான போராட்டத்தைக் காட்டிலும் ஆந்திர அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி அந்திரி - நீவா திட்டத்தில் நமக்கும் தண்ணீரைப் பெறுவதற்கு முயற்சி எடுத்தால், தமிழக முதலமைச்சருக்கு வேலூர், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் நன்றியுடன் இருப்பார்கள்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x