Published : 11 Apr 2017 07:45 PM
Last Updated : 11 Apr 2017 07:45 PM

திருப்பூர் அருகே டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்: பெண்கள் மீது ஏடிஎஸ்பி கடும் தாக்குதல்

திருப்பூர் அருகே சாமளாபுரம் அய்யன்கோயில் சாலையில், புதிதாக டாஸ்மாக் கடையை திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சாமளாபுரம் நான்குசாலை சந்திப்பில் 9 மணிநேரம் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மீது ஏடிஎஸ்பி நடத்திய தாக்குதலை கண்டித்து, காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை போராட்டக்காரர்கள் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கினர்.

இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் மீது திருப்பூர் ஏடிஎஸ்பி பாண்டியராஜன் ஓங்கி அறைந்ததால் பலத்த காயம் அடைந்த அய்யம்பாளையத்தை சேர்ந்த ஈஸ்வரி என்ற பெண், சாமாளபுரத்தில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அதேபோல், போலீஸார் தடியடி நடத்தியதில் சாமளாபுரத்தை சேர்ந்த சிவகணேஷ் என்பவரும், பலத்த காயம் அடைந்தார். அவரும் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த போராட்டத்தில் 10 பெண்கள் உட்பட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் போலீஸார் தடியடியில் படுகாயம் அடைந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

(தாக்குதல் நடத்திய ஏடிஎஸ்பி பாண்டியராஜன்)

மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணை ஓங்கி அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜன், தாக்குதலில் ஈடுபட்ட பல்லடம் டிஎஸ்பி மனோகரன், காவல் ஆய்வாளர் தங்கவேல் ஆகியோரை பணிநீக்கம் செய்யவேண்டும். காயம்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்கவேண்டும். தமிழகத்தில் பூரணமதுவிலக்கை அமல்படுத்துவது ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, தெ.பிரபாகரன் தலைமையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கியுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து காவல் கண்காணிப்பாளர் இ.எஸ். உமா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அது தோல்வியடைந்தத்து. இதையடுத்து, 100-க்கும் மேற்பட்டோர் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x