Published : 16 Dec 2013 12:00 AM
Last Updated : 16 Dec 2013 12:00 AM
காங்கிரஸ் கட்சியுடன் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி கிடையாது என்று திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தனித்துவிடப்பட்டுள்ளது. நீண்ட நாட்களுக்குப் பிறகு திராவிட கட்சிகளிடமிருந்து விலகியிருக்க வேண்டிய நிலைக்கு காங்கிரஸ் கட்சி தள்ளப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளாக உற்ற தோழனாக காங்கிரசுக்கு தோள் கொடுத்து வந்த திமுக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு இலங்கை தமிழர் பிரச்சினையில் அக்கட்சியுடன் இருந்த கூட்டணியை முறித்துக் கொண்டது. மத்திய அமைச்சரவையில் இருந்து தனது அமைச்சர்களையும் திரும்பப் பெற்றது. இதனால் அவ்விரு கட்சியினரிடையே இருந்து வந்த உறவில் விரிசல் ஏற்பட்டது.
2ஜி அலைக்கற்றை ஊழலில் பல ஆண்டுகளாக, இரு கட்சி களுக்கிடையே மறைமுகமாக கசப்பு இருந்து வந்தாலும், இலங்கை பிரச்சினைதான் அவ்விரு கட்சிகள் பிரிய பெரும் காரணமாக இருந்தது. மத்திய அமைச்சரவையில் இருந்து திமுக விலகிய பிறகும், நாடாளுமன்ற மேல்-சபை தேர்தலில் திமுக வேட்பாளர் கனிமொழிக்கு திடீரென ஆதரவுக்கரம் நீட்டியது காங்கிரஸ்.
இதற்கிடையே, 2ஜி அலைக்கற்றை ஊழல் வழக்கில், நாடாளுமன்ற கூட்டு நடவடிக்கைக் குழு சமர்ப்பித்த அறிக்கையில் முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாதான் முழு பொறுப்பு என்பது போலவும், பிரதமருக்கு அதுபற்றி ஒன்றும் தெரியாது என்பது போலவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதற்கு, திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த பிரச்சினையில் ராஜா பலிகடா ஆக்கப்பட்டுவிட்டதாகவும் புகார் கூறப்பட்டது. இதனால் இரு கட்சி களுக்கிடையே விரிசல் அதிகமானது.
இந்நிலையில், இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியாவின் சார்பில் ஒருவர் கூட கலந்துகொள்ளக் கூடாது என்று திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. அதன் பிறகு, மாநாட்டில் பிரதமர் மன்மோகன் சிங் பங்கேற்க மாட்டார் என்று அறிவிக்கப்பட்டபோதிலும், வெளியுறவுத் துறை செயலாளர் சல்மான் குர்ஷித் பங்கேற்றது திமுகவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தி யது.
வரும் நாடாளுமன்ற தேர்த லுக்குள் திமுகவுடனான உறவை புதுப்பித்துக் கொள்ள காங்கிரஸ் கட்சியினர் முயற்சித்து வந்தனர். இந்நிலையில், இதுபோன்றதொரு முடிவை திமுக எடுத்திருப்பது காங்கிரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
4 மாநில தேர்தல்
நான்கு மாநில தேர்தலில் காங்கிர சுக்கு கிடைத்த பெரும் தோல்வி, திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் எதிரொலித்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இது குறித்து தமிழக காங்கிரஸ் தலைமையைத் தொடர்பு கொண்ட போது, அவர்கள் கருத்து கூற மறுத்துவிட்டனர்.
இது குறித்து அரசியல் விமர்சகர் ஞாநி கூறியதாவது:
காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்று திமுக முடிவெடுத்திருக்கலாம். ஆனால், பாஜகவுடன் திமுக கூட்டணி சேருவதற்கான கதவுகளை கருணாநிதி திறந்தே வைத்திருக்கிறார். சர்க்காரியா கமிஷன் விவகாரத்தில் காங்கிரசுடன் எப்படி அவர் பேச்சுவார்த்தை நடத்தி, சாதகமானதொரு சூழலை ஏற்படுத்திக் கொண்டாரோ, அது போல், 2ஜி வழக்கில் திமுக பிரமுகர்களை விடுவிக்க உடன்பட்டால், கூட்டணி அமைக்க முன்வருவோம் என்ற கோரிக்கையை பாஜகவிடம் திமுக முன்வைக்கக்கூடும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT