Published : 20 Apr 2014 09:39 AM
Last Updated : 20 Apr 2014 09:39 AM

மாபெரும் வரலாற்றுப் பிழையை செய்துவிட்டார் வைகோ: சீமான் பேட்டி

அதிமுக-வுக்கு ஆதரவாகப் பிரச்சா ரம் செய்துவரும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ‘தி இந்து’வுக்கு அளித்த சிறப்புப் பேட்டி.

எதன் அடிப்படையில் அதிமுக-வை ஆதரிக்கிறீர்கள்?

நாங்கள் ஒன்றும் மொட்டையாக அதிமுக-வை ஆதரிக்கவில்லை. காங்கிரஸ், பாஜக கட்சிகள் வெளியுறவுக் கொள்கையிலும் பொருளாதாரக் கொள்கையிலும் தவறான நிலைப்பாடு கொண்டவைதான். கச்சத் தீவை தூக்கிக் கொடுத்தது காங்கிரஸ். அதைப் பற்றி பேச மறுக்கிறது பாஜக. விவசாயிகளின் நெஞ்சை கிழிப்பதுபோல் நஞ்சை நிலங்களை கிழிக்கிறது கெயில். மீத்தேனுக்காக காவிரிப் படுகையை பாலைவனம் ஆக்கத் துடிக்கிறது காங்கிரஸ். இதைப் பற்றி எல்லாம் பாஜக-வின் தேர்தல் அறிக்கையில் ஒன்றும் இல்லை.

ஆனால் மேற்கண்ட எல்லாவற் றுக்கும் போராடி வருகிறது அதிமுக. ஈழத் தமிழருக்கு ஆதரவாக சட்ட சபையில் தீர்மானம் நிறைவேற் றியதுடன் ஏழு பேர் விடுதலைக்கும் ஆதரவு அளிக்கிறது. தமிழகத்தின் நிதி நெருக்கடியைச் சமாளிக்க ஜெயலலிதா மத்திய அரசிடம் நிதி கேட்கிறார். கிடையாது என்று கைவிரித்த காங்கிரஸ், தன்னுடன் கூட்டணி வைத்த மம்தாவின் மாநிலத்துக்கு வாரி வழங்குகிறது. இலங்கைக்கு ரூ.80 ஆயிரம் கோடி வட்டியில்லா கடன் வழங்குகிறது. அதிமுக-வை ஆதரிக்க காரணங்கள் போதும் அல்லவா?

எதிர்காலத்திலும் இந்த நிலைப் பாடு தொடருமா?

இல்லை, வரும் 2016-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் நாங்கள் தனித்துப் போட்டியிடுவோம்.

மோடி அலை வீசுகிறதா?

ராகுல் அலை வீசுகிறது என்கிறது காங்கிரஸ். மோடி அலை வீசுகிறது என்கிறது பாஜக. பணக்காரர்கள் இந்தியா, நடுத்தர இந்தியா, ஏழைகள் இந்தியா என இங்கு மூன்று இந்தியாக்கள் இருக்கின்றன. இதில் எந்த இந்தியாவுக்கு பிரதமர் ஆக இவர்கள் ஆசைப்படுகிறார்கள்? ஒற்றை ஆட்சி இனியும் வேண்டாம். மத்தியில் கூட்டாட்சி; மாநிலத்தில் சுயாட்சி இதுவே எங்கள் கொள்கை.

ஆனால், ஈழத் தமிழருக்கு ஆதரவாக போராடும் வைகோ, பாஜக பக்கம்தானே நிற்கிறார்?

வைகோ மாபெரும் வரலாற்றுத் தவறை செய்துவிட்டார். மதிமுக இப்போது போட்டியிடும் ஏழு தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்டிருந்தால் நாங்கள் ஏன் அதிமுக-வுக்கு ஆதரவு கொடுக்கப் போகிறோம். வைகோவுக்காக சூறாவளிப் பிரச்சாரம் செய்திருப்போமே. தனது தவறுக்கான விளைவை விரைவிலேயே உணர்வார் வைகோ.

திமுக கூட்டணி பற்றி?

மத்திய அமைச்சரவையில் தொடர்ந்து 16 ஆண்டுகள் அதிகாரம் செலுத்தியது திமுக. ஆனால், நாட்டில் பணம் இருந்தால் மட்டுமே கல்வி கிடைக்கும். ஏழைக்கு நோய் வந்தால் நேராகப் போய் சுடுகாட்டில் படுத்துக்கொள்ள வேண்டும். இத்தனை ஆண்டுகளில் திமுக சாதித்தது இதைத்தான். இனியும் திமுக-வுக்கு எதற்காக ஓட்டுப் போட வேண்டும்?

பாஜக-வுடன் அணி சேர்ந்திருக் கும் விஜயகாந்த் பற்றி?

மோடி வந்தால் ஊழலை ஒழிப்பார் என்கிறார் விஜயகாந்த். மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து எத்தனை மாதங்கள் ஆயிற்று? அப்போதே விஜயகாந்த் இதைச் சொல்லியிருந்தால் அவர் யோக்கியர். என்னைப் பொறுத்தவரை அவர் ஓர் அரசியல் வியாபாரி; சந்தர்ப்பவாதி. எலும்புத் துண்டுக்காக ஓடுவதுபோல அங்கும் இங்கும் அலைபாய்ந்தவர், சீட்டும் நோட்டும் கிடைக்கவில்லை என்பதற்காக பாஜக அணியில் சேர்ந்துள்ளார். தனது மைத்துனரை மந்திரியாக்க மோடியை ஆதரிக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x