Published : 10 Feb 2014 04:43 PM
Last Updated : 10 Feb 2014 04:43 PM

ஊழியர்கள் வேலைநிறுத்தம்: தமிழகத்தில் வங்கிப் பணிகள் பாதிப்பு

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, வங்கி ஊழியர்கள் மேற்கொள்ளும் நாடு தழுவிய இரண்டு வேலை நிறுத்தம் காரணமாக, தமிழகத்தில் வங்கிப் பணிகள் முற்றிலும் முடங்கின.

குறிப்பாக வங்கிகளில் பணம் போடுதல், டி.டி. எடுப்பது, காசோலைகள் மற்றும் பணம் பரிமாற்றம் உள்ளிட்ட பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கி ஊழியர்களுக்கு ஏற்கெனவே போடப்பட்ட ஊதிய ஒப்பந்தம் 2012 அக்டோபரில் முடிந்துவிட்டது. அதன்பிறகு புதிய ஊதிய ஒப்பந்தம் போடவில்லை. எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை விரைவில் போட வேண்டும். சீர்திருத்தம் என்ற பெயரில் வங்கிகளை தனியார்மயமாக்குவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

சுமார் 2 லட்சம் கோடி வரையுள்ள வாராக் கடனை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 2 நாள் வேலை நிறுத்தப் போராட்டத்துக்கு வங்கி ஊழியர் சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. அதன்படி, நாடு முழுவதும் இன்றும், நாளையும் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்த போராட்டத்தில் தமிழகத்தில் உள்ள 11 ஆயிரத்து 200 க்கும் மேற்பட்ட வங்கி கிளைகளைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால், சென்னையில் உள்ள பொதுத் துறை வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகளில் பெரும்பாலானவைகளின் செயல்பாடுகள் முடங்கியது மட்டுமல்லாமல், அவ்வங்கிகள் வெறிச்சோடி காணப்பட்டன.

எனவே தொழில் நிறுவனங்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாயினர். குறிப்பாக, வீடு, வாகன கடன், மின்சார கட்டணம் உள்ளிட்டவைகளை குறித்த நாளில் செலுத்த முடியாமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், இந்த வேலை நிறுத்த போராட்டத்தின் விளைவாக, கடந்த சனிக்கிழமை முதல், இன்று வரையான நான்கு நாட்களுக்கு, வங்கி தொடர்பான பணிகளை மேற்கொள்ள முடியாத சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள வங்கிகளில் திங்கள் கிழமை மட்டும், பல கோடி மதிப்புள்ள காசோலைகள், வரைவோலைகள் தேங்கின.

அதே நேரத்தில், ஏ.டி.எம். மையங்களில் சனிக்கிழமையே பணம் நிரப்பி வைக்கப்பட்டிருந்ததால், திங்கள்கிழமை பெரும்பாலான ஏ.டி.எம். மையங்கள் செயல்பட்டன. ஆனால், அந்த மையங்களில் நாளை பணம் இருப்பதற்கான வாய்ப்பு மிக குறைவு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x