Published : 29 Mar 2017 06:48 PM
Last Updated : 29 Mar 2017 06:48 PM

ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் ஐ.டி இளைஞர்: ராமேசுவரம் கலாம் நினைவிடத்தில் பிரச்சாரம் தொடக்கம்

ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் ஐ.டி இளைஞர் (சுயேட்சை வேட்பாளர்) ராஜேஷ் ராமேசுவரத்தில் கலாம் நினைவிடத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த டிசம்பர் மாதம் 5-ம் தேது மரணம் அடைந்ததைத் தொடர்ந்து அவர் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆர்.கே.நகர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஆர்.கே.நகர் தொகுதிக்கு அடுத்த வரும் 12-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்புமனுதாக்கல் கடந்த 16-ம் தேதி தொடங்கி 23-ம் தேதியுடன் முடிந்தது. இதில், திமுக சார்பில் மருது கணேஷ், ஓபிஎஸ் அணி சார்பில் மதுசூதனன், சசிகலா அணி சார்பில் டிடிவி.தினகரன், பாஜக சார்பில் கங்கை அமரன், ஜெயலலிதா அண்ணன் மகள் தீபா உள்ளிட்ட 62 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 51 பேர் சுயேட்சை வேட்பாளர்கள் ஆவர்.

ஆர்.கே.நகர் தொகுதியில் பலூன் சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளரான திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த ராஜேஷ் புதன்கிழமை ராமேசுவரத்தில் உள்ள மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் நினைவிடத்திலிருந்து தனது பிரச்சாரத்தை துவங்கினார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் ராஜேஷ் கூறியதாவது,

''சென்னையில் மென்பொருள் நிறுவனம் நடத்தி வருகின்றேன். இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் என்ற அப்துல் கலாமின் விருப்பத்திற்காக நான் ஆர்.கே. நகர் தேர்தலில் நிற்கிறேன். எந்த அரசியல் கட்சி மற்றும் இயக்கப் பின்னணியோ எனக்கு கிடையாது. எனது அரசசியல் பயணம் மற்ற தமிழக இளைஞர்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க வேண்டும் என நினைக்கிறேன். மாணவர்களும், இளைஞர்களும், பொது மக்களும் எனக்கு ஆதரவு தர வேண்டும்'' என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x