Published : 10 Feb 2014 08:08 PM
Last Updated : 10 Feb 2014 08:08 PM
திருவண்ணாமலை மாவட்டம் ராயண்டபுரம் கிராம மக்கள் பல தலைமுறைகளாக வவ்வால் இனத்தை பாதுகாத்து வருகின்றனர்.
இயற்கையை சீரழிப்பதால் அரிய வகை பறவை, விலங்கு இனங்கள் அழிந்து வருகின்றன. செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு காரணமாக சிட்டுக்குருவிகளை நகர்ப்பகுதிகளில் பார்க்கவே முடிவதில்லை.
பறவை, விலங்குகளை வேட்டையாடி அழிப்பவர்களுக்கு மத்தியில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ராயண்டபுரம் கிராம மக்கள் வவ்வால் இனத்தை பாதுகாத்து வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள ராயண்டபுரம் கிராமம். மலை, காடு, தென்பெண்ணையாறு சூழ்ந்து ரம்மியமாக காட்சியளிக்கிறது. செழிப்பான விவசாய பூமி. இவற்றிக்கு பெருமை சேர்க்கின்ற விதமாக உள்ளது வவ்வால்கள் புகலிடம்.
இரண்டு அரச மரங்கள் மற்றும் ஒரு ஆல மரத்தில் வவ்வால்கள் கூட்டம் கூட் டமாக தொங்கிக்கொண்டு இருக்கின்றன. வவ்வால்கள் வசித்து வருவதால் கிராமத்திற்கு நன்மை என்று கிராம மக்கள் கருதுகின்றனர். மனித இனத்தால் வவ்வால் இனத்துக்கு ஆபத்து ஏதும் நிகழ்ந்துவிடக் கூடாது என்ப தில் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.
வவ்வால் வாழும் பகுதி யில் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து விட்டனர். தீபாவளி பண்டிகை யிலும் பட்டாசு வெடிக்காமல் பெரியவர்களுடன் இணைந்து இளசுகளும் தியாகம் செய்துள்ளது.
இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் உள்ள 3 மரங்களில் வவ்வால்கள் வசித்து வருவதை பெருமையாக நினைக்கிறோம். 100 ஆண்டுகளுக்கு மேலாக, வவ்வால் இனம் வாழ்ந்து வருவதாக, எங்கள் கிராம பெரியவர்கள் கூறியுள்ளனர். அவர்களுக்கு தெரிந்த வரை 100 ஆண்டுகள். அதற்கும் மேலாகக் கூட இருக்கலாம்.
வவ்வால்கள் வசிப்பதால், ஊர் செழிப்பாக உள்ளது. அதனால், வவ்வால்களை நாங்கள் பாதுகாக்கிறோம். 7 ஆண்டுக்கு முன்பு, பக்கத்து கிராமத்தை சேர்ந்த சிலர், வவ்வால்களை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது, ஒட்டு மொத்தமாக வவ்வால்கள் வெளியேறின. அதனால், நாங்கள் மனமுடைந்துவிட்டோம். சில மாதங்களுக்கு பிறகு, மீண்டும் வந்தன. அதனால், வவ்வால்களை துப்பாக்கியால் சுடவும், கல் கொண்டு எறிய அனுமதிப்ப தில்லை. இரவு நேரத்தில் இரை தேடி வெளியே செல்லும் வவ்வால்கள், அதிகாலையில் மீண்டும் வந்துவிடும்" என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT