Published : 09 Jun 2016 07:55 AM
Last Updated : 09 Jun 2016 07:55 AM

அரசு தீவிரமாக கண்காணித்தால் குழந்தைத் திருமணங்களைப் பெருமளவு தடுக்கலாம்: ஆதங்கப்படும் சமூக நல ஆர்வலர்கள்

தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் குழந்தைத் திருமணங்கள் இன்னமும் அதிகளவில் நடக்கின்றன. இதுகுறித்துப் பேசும், பெண் குழந்தைகள் புறக்கணிப்புக்கு எதிரான பிரச்சாரத்தின் அமைப்பாளர் கிருஷ்ணகிரி சங்கர், ’’கிராமங்களில் வேலை நிமித்தமாக பெற்றோர் வெளியூர்களுக்குப் போய்விடுவதால் தங்களது பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி சிறுவயது திருமணங்களை நடத்துகிறார்கள். பெண் குழந்தைகளுக்கான அரசின் திட்டங்கள் கிராமங்களைச் சென்றடையாததும் இந்த அவலத்துக்கு முக்கியக் காரணம். கிருஷ்ணகிரி ஆட்சியராக அமுதா இருந்தபோது 120 குழந்தைத் திருமணங்களை தடுத்து நிறுத்தினார். அதில் 90 சதவீதம் பேருக்கு மீண்டும் திருமணம் செய்துவிட்டார்கள். எஞ்சியதில் ஐந்து குழந்தைகள் படித்துக்கொண்டு இருக்கிறார்கள். ஐந்து குழந்தைகள் திருமணம் முடிக்காமல் இருக்கிறார்கள்’’ என்கிறார்.

தேனியில் உள்ள ‘ஆரோக் கிய அகம்’ அமைப்பு, கடந்த ஆண்டு தேனி மாவட்டத்தில் 50 கிராமங்களில் இறுதியாக நடந்த தலா ஆறு திருமணங்களை ஆய்வுக்கு எடுத்தது. அதில் 43% குழந்தைத் திருமணங்களாக இருந்திருக்கிறது. இதுகுறித்துப் பேசும் அந்த அமைப்பின் இயக்கு நர் சைமன், “கிராமங்களில் 10-ம் வகுப்பு மதிப்பெண்தான் பெண் குழந்தைகளின் வாழ்க்கையைத் தீர்மானிக்கிறது. 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெறவில்லை என்றாலோ, குறைவான மதிப்பெண் எடுத்திருந் தாலோ பெண் பிள்ளைகளைத் தொடர்ந்து படிக்க வைப்பதில்லை. வந்தவனுக்குப் பிடித்து கட்டி வைத்துவிடுகிறார்கள். எனவே, 10-ம் வகுப்பு முடிக்கும் பெண்கள் அடுத்து என்ன ஆகிறார்கள் என்பதை அரசு தீவிரமாக கண்காணித்தாலே குழந்தைத் திருமணங்களை பெருமளவு தடுத்துவிடலாம்’’ என்கிறார்.

சாத்தியமில்லாத சட்டம்

குழந்தைத் திருமணங்களை நடத்துபவர்களுக்கும் அதில் கலந்துகொள்பவர்களுக்கும் கடும் சிறைத் தண்டணை என்கிறது ‘குழந்தைத் திருமண தடுப்புச் சட்டம் 2005’. மாப்பிள்ளை யின் பெற்றோருக்கு இரண்டு ஆண்டுகள் கடுங்காவல் தண் டனையும், ரூ.1 லட்சம் அபராத மும் விதிக்க சட்டம் வழி சொல் கிறது. ஆனால், நடைமுறைக்கு சாத்தியமில்லாத இந்தச் சட்டத்தில் நிறைய ஓட்டைகள் உள்ளதாகச் சொல்லும் சமூக ஆர்வலர்கள், “குழந்தைத் திருமணத்தில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணை முதலில் காப்பகத்தில் தங்க வைக்கிறார்கள். ஒரு வாரம் ஆன தும் அந்தப் பெண்ணை பெற்றோ ரிடமே அனுப்பிவிடுகிறார்கள். அங்கு போனதும், ஏற்கெனவே நிச்சயிக்கப்பட்ட பையனோடு ‘லிவ்விங் டுகெதர்’ வாழ்க்கை வாழ ஆரம்பித்துவிடுகிறாள் அந்தப் பெண். இதையெல்லாம் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க யாருக்கு அதிகாரம் என்றும் தெரியவில்லை; சட்டமும் அதற் கான வழியைக் காட்டவில்லை’’ என்று வேத னைப்படுகிறார்கள்.

சிதைக்கப்படும் அரசு திட்டம்

கருவுற்ற தாய்மார்கள் மற்றும் அவர்கள் வயிற்றில் வளரும் குழந்தைக்கு போதிய ஊட்டச் சத்து அளிப்பதற்காக மகப்பேறு உதவித் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்துகிறது. பிரசவ காலத்துக்கு மூன்று மாதங்களுக்கு முன்பும் பிரசவத்துக்குப் பிறகும் இந்த உதவித் தொகை இரண்டு பகுதிகளாக வழங்குவதை தொடக்க காலத்தில் கடைபிடித் தார்கள். ஆனால், இப்போது குழந்தை பிறந்து ஒரு ஆண்டு ஆனபிறகுதான் உதவித் தொகை கைக்கு வருகிறது. இதனால், என்ன காரணத்துக்காக இந்தத் திட்டம் கொண்டுவரப்பட்டதோ அந்த நோக்கம் சிதைந்துவிட்டது. 18 வயதுக்கு மேல் இருந்தால் தான் இந்த உதவித் தொகை கிடைக் கும். ஆனால், வாய்மொழியாக சொல்லப்படும் வயது விவரங் களை ஆரம்ப சுகாதார நிலையங் களிலும் மருத்துவமனைகளிலும் அப்படியே பதிவுசெய்து கொள்வதால் குழந்தைப் பருவத் திலேயே கருத்தரித்த பெண்களும் இந்த உதவித் தொகையை பெற்றுவிடுகிறார்கள். இப்படி வயதைக் கூட்டிப் பதிவு செய்வதால் பெரும்பகுதியான குழந்தைத் திருமணங்கள் மறைக்கப்பட்டு விடுகின்றன.

ஆபத்தில் இந்திய குழந்தைகள்

The United Nations Population Fund (UNFPA) தந்திருக்கும் புள்ளி விவரத்தின்படி 2011-2020 கால கட்டத்தில் உலகம் முழுவதும் 14 கோடி குழந்தைத் திரு மணங்கள் நடக்கக்கூடும். அதன்படி பார்த் தால் இந்தியாவில் கிட்டத்தட்ட 2.3 கோடி குழந்தைகள் அத்தகைய ஆபத்தில் இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரை, தேசிய மக்கள் தொகை ஆண் டுக்கு 8 சதவீதம் உயர்கிறது. ஆனால், குழந்தைத் திருமணங் கள் 1 சதவீதம்தான் குறைகிறது என்கிறது யுனிசெஃப். இதன்படி பார்த்தால் குழந்தைத் திருமணங் கள் குறித்து அரசு தற்போது வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை மறுபரிசீலனைக்கு உரியது.

திருமண வயதை குறைக்கலாமா?

குழந்தைத் திருமணங்களால் பெரிதும் பாதிக்கப்படுவது பெண் குழந்தைகள்தான். இதைத் தடுக்க பிளஸ் 2 வரை பெண் களுக்கு கட்டாயக் கல்வி என்பதை யும் திருமணப் பதிவையும் கட்டாயம் ஆக்க வேண்டும். பெண்ணின் திருமண வயது 18 என அரசு அங்கீகரித்திருக்கிறது. ஆனால், உடல்ரீதியாக ஒரு பெண் திருமணத்துக்கு தயாராக வேண்டுமானால் பெண்ணின் திருமண வயதை 21 ஆகவும் ஆணுக்கு 24 ஆகவும் உயர்த்த வேண்டும் என பெண்கள் அமைப்புகள் குரல் எழுப்புகின்றன. அதேநேரம், ‘‘இந்த தலைமுறைப் பெண்கள் இளம் வயதிலேயே முழு உடல் தகுதி பெற்றுவிடுகிறார்கள். அதனால்தான் 10 வயதில்கூட பருவமடைந்துவிடுகிறார்கள். எனவே பெண்களின் திருமண வயதை 16 ஆக குறைக்க வேண் டும். இது பல பிரச்சினைகளுக்கு தீர்வாக இருக்கும்’’ என மருத்துவம் சார்ந்த சிலர் எதிர்மறைக் கருத்துக்களையும் எடுத்து வைக்கிறார்கள்.

தேசிய குற்ற ஆவண காப்பகம் என்ன சொல்கிறது?

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கைப்படி 2014-ல் குழந்தைத் திருமணங்கள் தொடர்பாக இந்தியா முழுவதும் 280 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதில் அதிகபட்சமாக தமிழகத்தில் 47 வழக்குகளும் இதற்கு அடுத்தபடியாக கர்நாடகத்தில் 44 வழக்குகளும் பதிவாகி உள்ளன. இதேபோல், 2013-ல் தேசிய அளவில் 222 வழக்குகள் பதிவாகியுள்ளன. இதிலும் தமிழகத்தில்தான் அதிகபட்சமாக 56 வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் அதிகபட்சமாக மதுரையில் 14 வழக்குகளும் தருமபுரி, நாமக்கல் மாவட்டங்களில் முறையே 11 மற்றும் 10 வழக்குகள் பதிவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x